"The perfect checkmate" - தன் ராஜாவை தூக்கி எறிந்தவருக்கு குகேஷ் கொடுத்த ஷாக்!
அமெரிக்காவின் செயின்ட் லூயிஸில் நடைபெற்ற 'கிளட்ச் செஸ் சாம்பியன்ஸ் ஷோ டவுன் 2025' தொடரில், இந்திய கிராண்ட்மாஸ்டர் டி. குகேஷ், அமெரிக்க கிராண்ட்மாஸ்டர் ஹிகாரு நகமுராவை வீழ்த்தி, தனது அமைதியான ஆட்டத்தால் பழி வாங்கினார். குகேஷின் இந்த வெற்றி, அவரது முதிர்ச்சியையும் சிறந்த விளையாட்டு மனப்பான்மையையும் வெளிப்படுத்தியது.
அமெரிக்காவின் செயின்ட் லூயிஸில் நடைபெற்ற 'கிளட்ச் செஸ் சாம்பியன்ஸ் ஷோ டவுன் 2025' செஸ் தொடரில், உலக சாம்பியனான இந்திய கிராண்ட்மாஸ்டர் டி. குகேஷ், அமெரிக்காவின் திறமை வாய்ந்த கிராண்ட்மாஸ்டர் ஹிகாரு நகமுராவை வீழ்த்தி, தனது ஆட்டத்தின் மூலம் அமைதியாகப் பழி வாங்கியுள்ளார்..
விஸ்வநாதன் ஆனந்திற்குப் பிறகு உலக சாம்பியன் பட்டம் வென்ற இரண்டாவது இந்தியர் குகேஷ். தனது 18 வயதில் உலக சாம்பியன் பட்டம் வென்று, உலகிலேயே இளம் வயதில் இந்த சாதனையை செய்தவர் என்ற பெருமையைப் பெற்றவர். இவர் தொடர்ந்து பல செஸ் போட்டிகளில் விளையாடிய நிலையில், வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் அமைதியாகவும் நிதானமாகவும்தான் செயல்படுவார்.. அத்துடன், போட்டி முடிந்தவுடனும் எந்தவித ஆர்பாட்டமும் இன்றி தனது பலகையில் உள்ள அனைத்து காய்களையும் சரியாக அடுக்கி வைத்து விட்டுதான் அந்த இடத்தை விட்டும் வெளியேறுவார்..
இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு, 'செக்மேட்: யுஎஸ்ஏ vs இந்தியா' என்ற கண்காட்சிப் போட்டி நடைபெற்றது.. இதில் அமெரிக்க வீரர் நகமுரா, குகேஷை வீழ்த்தினார். இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக குகேஷின் ராஜாவை எடுத்து பார்வையாளர்களை நோக்கி வீசி எறிந்து தனது வெற்றியை கொண்டாடினர் நகமுரா. அவரது இந்தச் செயல் செஸ் உலகில் பரவலாக விமர்சிக்கப்பட்டதுடன், 'மரியாதையற்ற செயல்' என்று பலரும் கண்டித்தனர். சிலர் நகமுராவின் செயலை ஆதரித்ததும் குறிப்பிடத்தக்கது.
அன்று நடந்த அந்த சம்பவத்தினால், இந்த இரு வீரர்களுக்கு இடையிலான அடுத்த மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் ஒன்றாக அமைந்தது. மிக முக்கியமாக போட்டியின் முடிவுகளைத் தாண்டி, குகேஷ் எப்படி செயல்படப்போகிறார் என்பதுதான் பலரும் எதிர்பார்த்த ஒன்று. இந்தப் போட்டியில், இரண்டாவது சுற்றின் முதல், குகேஷ் தனது கடைசி சில நகர்வுகளால் நகமுராவைத் திணறடித்து வெற்றி பெற்றார்.
நகமுரா தோல்வியை ஒப்புக்கொண்டு தனது கையை நீட்டியபோது, 19 வயதான குகேஷ் எந்தவித உணர்ச்சி வெளிப்பாடும் இல்லாமல், அமைதியாகவும், நிதானமாகவும் தானும் கைக்குலுக்கினார்..
பின் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபடாமல், உடனடியாக அவர் பலகையில் இருந்த அனைத்து காய்களையும், ஏன் நகமுராவின் ராஜா உட்பட அனைத்தையும் அமைதியாக மீண்டும் அடுக்கி வைத்தார். பின்னர் அவர் மேசையை விட்டு அமைதியாக வெளியேறினார். எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல், ஆட்டத்தின் கண்ணியத்தை மட்டுமே பிரதிபலிக்கும் குகேஷின் இந்தச் செயல், அவருடைய முதிர்ச்சியையும், சிறந்த விளையாட்டு மனப்பான்மையையும் வெளிப்படுத்துவதாக இருந்தது. குகேஷின் ரசிகர்கள் இதை the perfect checkmate என வர்ணிக்கின்றனர்.
குகேஷின் இந்த அமைதியான 'பதிலடி', வயதுக்கு அப்பாற்பட்ட முதிர்ச்சியின் பிரதிபலிப்பு எனக் குறிப்பிட்டு பாராட்டி வருகின்றனர்.


