’சென்னை மக்கள் எப்போதும் Knowledgeable crowd-தான்..’ புகழும் நெட்டிசன்கள்.. நடந்தது என்ன?
சென்னை ரசிகர்கள் Knowledgeable crowd என புகழப்பட்ட வரும் நிலையில், அது உண்மை என்று நிரூபிக்கும் விதமான சம்பவம் ஒன்று மீண்டும் நடைபெற்றுள்ளது. வடமாநில கிரிக்கெட் ரசிகர்கள் கூட சென்னை ரசிகர்களை புகழும் அளவு நடந்தது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
1999-ல் நடந்த சம்பவம்..
இந்தியாவின் புகழ்பெற்ற மைதானங்களில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்துக்கு எப்போதும் தனி இடம் உண்டு. இங்கு கடந்த 1999-ம் ஆண்டு நடந்த இந்தியா - பாகிஸ்தான் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வெற்றிபெற்றது.
முதலில் இந்தியா தோல்வியடைந்த அதிர்ச்சியில் இருந்த ரசிகர்கள் அடுத்த கணமே சிறப்பாக ஆடிய பாகிஸ்தான் அணிக்கு பாராட்டுகளை தெரிவிக்கத் தொடங்கினர். மைதானம் முழுக்க பாகிஸ்தான் வீரர்களுக்கு ஆதரவாக கரகோசங்கள் எழுந்தது.
இந்தியாவுக்குள் தங்களுக்கு இந்த அளவு ஆதரவு கிடைக்கும் என்பதை எதிர்பார்க்காத பாகிஸ்தான் வீரர்கள், சென்னை ரசிகர்களின் ஆதரவால் நெகிழ்ந்து மைதானத்தை சுற்றி வலம் வந்து ரசிகர்களின் பாராட்டுகளை ஏற்றுக்கொண்டனர்.
2023-ல் நடந்த சம்பவம்..
அதே போல கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் மோதிய போட்டியிலும் சென்னை ரசிகர்கள் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் என இரண்டு அணிகளையும் ஆதரித்தனர். சென்னை அணி ரசிகர்களின் அன்பால் நெகிழ்ந்த ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் போட்டி முடித்த பின்னர் சேப்பாக்கம் மைதானத்தை வளம் வந்து ரசிகர்களின் அன்பை ஏற்றுக்கொண்டனர். இது போன்ற செயல்கள் காரணமாக சென்னை ரசிகர்களை கிரிக்கெட் ஜாம்பவான்கள் கூட Knowledgeable crowd என புகழ்ந்துள்ளனர்.
இந்த பெருமையை மீண்டும் நிரூபிக்கும் வகையில் மற்றொரு சம்பவம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றுள்ளது. பொதுவாக இந்தியாவில் இந்தியா ஆடும் போட்டிகளுக்கு மட்டுமே ரசிகர்கள் வருகை தருவார்கள். அதிலும் அகமதாபாத் போன்ற இடங்களில் இந்தியா ஆடும் டெஸ்ட் போட்டிகளுக்கு கூட ரசிகர்கள் வராமல் மைதானமே காலியாக காட்சியளிக்கும்.
மீண்டும் சென்னை ரசிகர்களுக்கு பாராட்டு..
இத்தகைய சூழலில், இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டி20 உலகக்கோப்பைக்கான லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் - நியூஸிலாந்து அணிகள் மோதின. இந்தியா ஆடாத போட்டிகளில் குறைவாகவே ரசிகர்கள் வரும் நிலையில், இந்த போட்டிக்கு காலையில் இருந்தே ஏராளமான ரசிகர்கள் மைதானத்துக்கு படையெடுத்தனர்.
இறுதியில் சுமார் 22 ஆயிரம் ரசிகர்கள் சேப்பாக்கம் மைதானத்துக்கு வருகை தந்து, இரு அணி வீரர்கள் சிறப்பாக ஆடும்போதும் ஆரவாரம் செய்து அவர்களை உற்சாகப்படுத்தினர். இந்த நிகழ்வை சமூக வலைத்தளங்களில் வெளிமாநில ரசிகர்கள் குறிப்பிட்டு சென்னை ரசிகர்கள் Knowledgeable crowd என்பதை மீண்டும் நிரூபித்துள்ளதாக புகழாரம் சூட்டி வருகின்றனர்.

