சாம்பியன்ஸ் டிராபி | ஹைபிரிட் மாடலில் நடத்த ஐசிசி ஒப்புதல்.. துபாயில் இந்திய போட்டிகள்! - முழுவிபரம்
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடத்தப்படவிருக்கும் நிலையில், இம்முறையும் பாகிஸ்தானுக்குச் செல்ல இந்தியா மறுப்பு தெரிவித்தது. மேலும், இந்திய அணியின் போட்டிகளை மட்டும் வேறு இடங்களுக்கு மாற்றி வைக்குமாறு கோரிக்கை வைத்தது. ஆனால், இதை ஏற்காத பாகிஸ்தான் இந்தியாவிடம் விளக்கம் கேட்டதுடன், தொடரை நடத்துவதிலிருந்து விலகுவோம் என எச்சரித்திருந்தது. இதையடுத்து, இதற்கு முடிவெடுக்கும் வகையில் ஐசிசி, அதன் இயக்குநர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அப்போதுகூட, “இந்திய வீரர்களை பாகிஸ்தானுக்கு அனுப்ப மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை. இதன் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரை ஹைபிரிட் மாடலில் நடத்த வேண்டும்” என்று பிசிசிஐ தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் சார்பாக கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது.
மேலும், பிசிபி ஒருசில நிபந்தனைகளையும் வைத்தது. ‘சாம்பியன்ஸ் டிராபி தொடரை ஹைபிரிட் மாடலில் நடத்த ஒப்புக்கொள்ள வேண்டுமென்றால், இந்திய அணியுடன் முத்தரப்பு தொடருக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். பாகிஸ்தானுக்கு ஐசிசி தரப்பில் அளிக்கப்படும் நிதி பங்களிப்பை அதிகரிக்க வேண்டும். 2031 வரை இந்தியாவில் நடக்கும் ஐசிசி தொடர்களில் பாகிஸ்தான் விளையாடாது’ என்று தெரிவிக்கப்பட்டது. எனினும் இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதனிடையே ஐசிசி தலைவராக ஜெய் ஷா பதவியேற்றார். இந்த நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரை ஹைபிரிட் மாடலில் நடத்த ஐசிசி ஒப்புதல் வழங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் இந்திய அணி விளையாடும் அத்தனை போட்டிகளையும் துபாயில் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மற்ற 7 அணிகள் விளையாடும் போட்டிகள் பாகிஸ்தானில் உள்ள 3 மைதானங்களில் நடைபெறவுள்ளது. அதேபோல் இந்திய அணி விளையாடும் போட்டிகள் பாகிஸ்தானில் நடக்காததற்கு எந்த இழப்பீடும் அளிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், 2026ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு வராது என்ற நிபந்தனையும் ஏற்கப்பட்டுள்ளது.
இதனால் 2026ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் விளையாடும் ஆட்டம் இலங்கையில் நடத்தப்படவுள்ளது. இந்த டி20 உலகக்கோப்பையை இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளும் இணைந்து நடத்தவுள்ளன. இதனால் பாகிஸ்தான் அணி விளையாடும் போட்டிகள் இலங்கையில் நடக்கும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடர் ஹைபிரிட் மாடலில் நடத்துவதால், ஏற்படும் இழப்பீட்டை தடுக்க ஐசிசி வேறு மாதிரி சமாதானம் செய்துள்ளது. அதாவது 2027ஆம் ஆண்டுக்குப் பின் நடக்கும் ஐசிசி மகளிர் தொடரை நடத்தும் வாய்ப்பு பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.
2025 சாம்பியன்ஸ் டிராபி பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை நடைபெற உள்ளது. இதில் எட்டு அணிகள் இரண்டு குழுக்களாகp பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கும், அதைத் தொடர்ந்து இறுதிப் போட்டிக்கும் முன்னேறும். லீக் சுற்றில் இந்தியா வெளியேறினால், அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் பாகிஸ்தானின் லாகூர் மற்றும் ராவல்பிண்டியில் நடைபெறும்.