2025 சாம்பியன்ஸ் டிராபி| ”இந்தியா வேறு ஆடுகளத்தில் ஆடலாம்.. ஆனால்” ICC-க்கு 2 நிபந்தனை வைக்கும் PAK!
இந்தியா-பாகிஸ்தான் அணிகள் கடைசியாக 2012-13 இருதரப்பு தொடரில் பங்கேற்று விளையாடின. அதன்பிறகு அரசியல் காரணங்களால் இரு நாடுகளும் ஐசிசி தொடர்கள் மற்றும் ஆசியக் கோப்பை தொடரில் மட்டுமே நேருக்கு நேர் மோதிவருகின்றன. இந்தியா கடைசியாக 2006-ம் ஆண்டுதான் பாகிஸ்தானிற்கு சென்று இருதரப்பு தொடரில் விளையாடியது.
பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு வந்து விளையாடினாலும், இந்தியா மட்டும் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது.
கடந்த 2023-ம் ஆண்டு பாகிஸ்தானில் நடத்தப்பட்ட ஆசியக்கோப்பை தொடருக்கும் செல்லாத இந்திய அணி, ஹைப்ரிட் மாடலில் வேறு ஆடுகளங்களில் மட்டுமே போட்டிகளை விளையாடியது. ஆனால் அதைத்தொடர்ந்து இந்தியாவில் நடத்தப்பட்ட 2023 ஒருநாள் உலகக்கோப்பைக்கு பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு வந்துவிளையாடியது.
இந்நிலையில் 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடத்தப்படும் நிலையில், ஒட்டுமொத்தமாக தங்களுடைய போட்டிகளை வேறு ஆடுகளங்களில் நடத்தவேண்டும் என இந்தியா கேட்டுகொண்டது. ஆனால் பாகிஸ்தான் அதை ஏற்க மறுத்துவிட்டது.
ஐசிசிக்கு பாகிஸ்தான் வைத்த 2 நிபந்தனை..
இரண்டு அணிகளும் தங்களுடைய கருத்தில் நிலையாக இருந்ததால், இந்த பிரச்னைக்கு தீர்வுகாணும் வகையில் ஐசிசி தரப்பில் ஒரு வீடியோ கான்ஃபிரன்ஸ் மீட்டிங் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
12 முழு ஐசிசி உறுப்பினர்கள், மூன்று அசோசியேட் உறுப்பினர்கள் மற்றும் ஐசிசி தலைவர் ஆகியோர் கலந்து கொண்ட கூட்டத்தில், பாகிஸ்தான் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி துபாயில் இருந்து பங்கேற்றார். ஆனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரண்டு தரப்பிலும் ஒருமித்த கருத்து எட்டப்படாத நிலையில், 15 நிமிடங்களிலேயே மீட்டிங் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்றும் கூட்டம் நடத்தப்படாத நிலையில், இந்தியா பரிந்துரைத்த ஹைப்ரிட் மாடல் முறைக்கு பாகிஸ்தான் ஒப்புக்கொண்டதாகவும், ஆனால் பாகிஸ்தான் தரப்பில் ஐசிசிக்கு இரண்டு நிபந்தனைகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
வெளியாகியிருக்கும் தகவலின்படி, முதல் நிபந்தனையாக இதற்குபிறகு இந்தியாவில் நடத்தப்படும் ஐசிசி தொடர்களில் பாகிஸ்தான் பங்கேற்காது, பாகிஸ்தான் போட்டிகளும் இந்தியாவை விடுத்த வேறு நாட்டின் ஆடுகளங்களில் மட்டுமே நடத்தப்படவேண்டும். அடுத்தாண்டு பெண்கள் ஒருநாள் உலகக்கோப்பையும், 2026-ல் டி20 உலகக்கோப்பையும் இந்தியாவில் நடத்தப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது நிபந்தனையாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கான ஆண்டு வருவாய் சுழற்சியில் அதிகப்படியான தொகையை ஐசிசி ரிலீஸ் செய்யவேண்டும் என்ற 2 நிபந்தனைகளை பாகிஸ்தான் வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல ஒருவேளை இந்தியா நாக் அவுட் சுற்றுக்கு எட்டாத நிலையில், அரையிறுதிகள் மற்றும் இறுதிப்போட்டியானது லாகூரில் நடத்தப்படும் என்ற கோரிக்கையும் பாகிஸ்தான் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
நிரந்தர தீர்வு எட்டப்படும்.. பாகிஸ்தான் வாரிய தலைவர்!
இந்தியா மற்றும் பாகிஸ்தான் யு19 அணிகளுக்கு இடையேயான போட்டியின் முடிவுக்கு பிறகு துபாயில் செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் வாரிய தலைவர் மொஹ்சின் நக்வி, பல விஷயங்கள் நடந்துவருகின்றன, ஆனால் அது அனைத்தும் மோசமாக இருக்கிறது என்று நான் சொல்லவில்லை. சில விஷயங்களில் எங்கள் பார்வையை நாங்கள் கூறியுள்ளோம், இந்தியர்கள் தங்கள் கருத்தைத் கொடுத்துள்ளனர். முடிவில் கிரிக்கெட்டுக்கு எது சிறந்தததோ அதைச் செய்வோம், கிரிக்கெட் மட்டுமே வெற்றி பெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்று கூறினார்.
ஹைப்ரிட் மாடல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “2025 சாம்பியன்ஸ் டிராபிக்கு மட்டுமல்ல, இந்தியா-பாகிஸ்தான் போட்டிகளுக்கான நிரந்தர தீர்வை நாங்கள் எதிர்பார்க்கிறோம். அது ஒருதலைபட்சமாக இருக்காது, பாகிஸ்தானின் கிரிக்கெட் பெருமையை காப்பாற்றும் விதமாகவும் அது இருக்கும்” என தெரிவித்துள்ளார்.