பயமுறுத்தும் ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் வரலாறு !
ஒருநாள் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா ஆடவர் அணி எப்படியோ, அதேபோல் டி 20 உலகக்கோப்பைகளில் வலம் வருகிறது ஆஸ்திரேலிய மகளிர் அணி.
இதுவரை நடைபெற்றுள்ள 6 மகளிர் டி20 உலகக் கோப்பைகளில் 4 உலக கோப்பைகளை வென்று மகளிர் டி20 உலகில் அசைக்க முடியாத அணியாக திகழ்கிறது ஆஸ்திரேலியா. டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் 6-வது முறையாக களமிறங்கும் ஆஸ்திரேலிய அணியுடனான இன்றைய போட்டி இந்திய அணிக்கு கடும் சவால் நிறைந்ததாக இருக்கும்.
டி-20 போட்டிகளில் இந்திய - ஆஸ்திரேலிய அணிகள் இதுவரை 19 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் ஆஸ்திரேலிய அணி அதிகப்பட்சமாக 13 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது, அதேநேரம் இந்திய அணி வெறும் 6 போட்டிகளில் மட்டுமே வெற்றியை பதிவு செய்துள்ளது. ஆனால் டி20 உலகக் கோப்பை தொடர்களில் இரு அணிகளும் சரிசமமான பலம் வாய்ந்த அணிகளாகவே திகழ்கின்றன. டி20 உலகக் கோப்பைகளில் 4 போட்டியில் இரண்டு அணிகளுமே தலா இரண்டு வெற்றி, தோல்விகளை பதிவு செய்துள்ளன. இதில் 2018 மற்றும் நடப்பு 2020 டி20 உலகக்கோப்பை இரண்டிலுமே ஆஸ்திரேலியா அணியை இந்திய அணி வெற்றி கொண்டுள்ளது, ரசிகர்களுக்கு கூடுதல் நம்பிக்கை அளிக்கிறது.
ஆனால் உலகக்கோப்பை நாக் - அவுட் சுற்றுகளில் எதிரணியை வீழ்த்தும் யுத்தியை கச்சிதமாக அறிந்துள்ளது, சொந்த மைதானத்தில் விளையாடுவது ஆகியவை ஆஸ்திரேலிய அணிக்கு கூடுதல் வலுசேர்கிறது.மேலும் ஷபாலி வர்மா ஒருவர் மட்டுமே பேட்டிங்கில் இந்திய அணிக்கு நம்பிக்கை அளிக்கும் நிலையில், ஆஸ்திரேலிய அணியில் 4 வீரர்கள் 100 ரன்களுக்கு அதிகமாக நடப்பு தொடரில் அடித்துள்ளனர். குறிப்பாக ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அலிஸா ஹீலி 161 ரன்களும், பெத் மூனே 181 ரன்களும் விளாசியுள்ளனர். தொடரில் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை சாய்த்து வரும் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் மேகன் ஷட் , ஜெஸ் ஜோனசன் ஆகியோரின் பந்துவீச்சு இந்திய அணிக்கு சவால் நிறைந்ததாக இருக்கும்.
இந்திய அணி பெருமளவில் பந்துவீச்சை நம்பி களமிறங்கும் நிலையில், ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் vs இந்திய அணியின் பவுலிங் இடையே நடைபெறும் யுத்தமாக இறுதி போட்டி இருக்கும் என்கின்றனர் கிரிக்கெட் வல்லுநர்கள். முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வெற்றி கொண்டு தொடரை தொடங்கிய இந்திய அணி அதே ஆஸ்திரேலிய அணியை வெற்றி கொண்டு முதல் முறையாக கோப்பையை வென்று சாதனை படைக்குமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.