“எங்கள் குடும்பமே பெருமை அடைந்திருக்கிறது” - கேரம் சாம்பியன் காசிமாவின் தந்தை மெகபூப் பாஷா!
கடந்த நவம்பர் மாதம், அமெரிக்காவில் நடைபெற்ற 6ஆவது உலகக்கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை காசிமா 3 தங்கப் பதங்களை வென்று சாதித்திருந்தார். இந்தச் சாதனையை அவர் 17 வயதில் நிகழ்த்திக் காட்டி இருந்தார்.
ஆனால், செஸ் விளையாட்டில் உலக சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற குகேஷ்க்கு கிடைத்த வரவேற்பும், பாராட்டும், வெளிச்சமும் காசிமாவுக்கு பெரிய அளவில் கிடைக்காமல் போனது. சமீபத்தில் குகேஷ்க்கு ரூ 5 கோடி பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டதை அடுத்து, பலரும் காசிமாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.
இதுக்குறித்து, விசிக எம்.எல்.ஏ ஆளூர் ஷ நவாஸ் தனது சமூக வலைதளப்பக்கத்தில் இன்று, “அமெரிக்காவில் நடைபெற்ற 6-ஆவது Carrom World Cup போட்டியில் 3 பிரிவுகளில் முதல் இடம் பிடித்து தங்கம் வென்ற வீராங்கனை காசிமாவுக்கு தமிழ்நாடு அரசு பரிசுத் தொகை அறிவித்து சிறப்பு செய்ய வேண்டும். இது குறித்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் வலியுறுத்தியுள்ளோம்” என்று பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், கேரம் வீராங்கனை காசிமாவுக்கு ரூ.1 கோடி பரிசு அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பொதுவாக 1 தங்கப்பதக்கத்திற்கு 20 லட்சம் ரூபாய் என மூன்று தங்கப்பதங்களுக்கு 60 லட்சம் ரூபாய் வழங்கப்படும். இருப்பினும் காசிமாவுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடத்தப்பட்டு வரும் அறக்கட்டளை சார்பில் கூடுதலாக 40 லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டு, மொத்தம் 1 கோடி ரூபாய் பரிசுத்தொகையாக காசிமாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து காசிமாவின் தந்தை மெகபூப் பாஷா புதிய தலைமுறையிடம் தெரிவிக்கையில், “கேரம் விளையாடும் அனைவருக்கும் இது ஒரு பெருமையாக அமைந்துள்ளது. கேரமும் கொண்டாட வேண்டிய போட்டிதான் என்று தெரிவித்து எங்களுக்கு இந்த பரிசுத்தொகையை அளித்துள்ளனர். வீட்டில் இருந்த ஒவ்வொரு கண்ணாடிகளிலும் உலக சாம்பியன் ஆக வேண்டுமென்று சிறுவயதிலிருந்தே காசிமா எழுதி வைத்திருப்பார். அதற்காக கடுமையாக உழைத்து இருக்கிறார். தற்போது அது நிறைவேறியுள்ளது. காசிமாவால் எங்களுடைய குடும்பமே மிகவும் பெருமை அடைந்திருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.