மகன் இறந்திருந்தாலும் திருநாவுகரசருக்கு அன்னமிட நினைத்த அப்பூதி அடியவரின் வியப்பூட்டும் பக்தி!

”இத்தனை அன்னதான சத்திரங்களும் சாவடிகளுக்கும் நாவுகரசரின் பெயரை வைத்துள்ளீரே? ஏன் உங்க பெயரிலேயே தொண்டு புரிந்து வரலாமே...?”
அப்பூதியடியவரின் குடும்பம்
அப்பூதியடியவரின் குடும்பம்PT

சோழநாட்டு பிரதேசத்தில் திங்களூர் கிராமத்தில் வேதியர் குலத்தில் பிறந்தவர் தான் அப்பூதி அடிகளார். மிகுந்த சிவபக்தி கொண்டவர். அடியவருக்கு அடியவர் ஆகையால் நாவுக்கரசர் மீது பெரும்பக்தி கொண்டிருந்தார். அதனால், திரும்பிய பக்கம் எல்லாம் திருநாவுகரசர் அன்ன சத்திரம், திருநாவுகரசர் நீர் மோர், திருநாவுகரசர் தண்ணீர் பந்தல், நாவுக்கரசரின் குளக்கரை, நாவுகரசரின் அடியர்கள் ஓய்வறை என்று திங்களூர் முழுவதும் ஏற்பாடு செய்து தனது சொந்த செலவில் மக்களுக்கு தொண்டு புரிந்து வந்தார்.

ஒரு முறை திருப்பழனத்தில் உள்ள சிவத்தலத்திற்கு செல்வதற்காக திங்களூர் வந்த நாவுகரசர் தனது பெயரில் பல சத்திரங்களும், சாவடிகளும் இயங்குவதை கண்டு வியப்புற்ற நாவுகரசர் அப்பூதியாரை காண அவர் வீட்டிற்குச் சென்றார்.

அப்பூதியார் நாவுகரசரை அதுவரை சந்தித்ததில்லை; ஆகையால் வந்திருப்பவர் ஒரு சிவனடியார் என நினைத்து அவரை வரவேற்று உபசரித்தார்.

நாவுகரசர் அப்பூதியாரிடம், “இத்தனை அன்னதான சத்திரங்களும் சாவடிகளுக்கும் நாவுகரசரின் பெயரை வைத்துள்ளீரே? ஏன் உங்க பெயரிலேயே தொண்டு புரிந்து வரலாமே...?” என்றார்.

அப்பூதியடியவரின் குடும்பம்
‘எங்கும் நிறைந்துள்ளவர் அவர்; கூப்பிட்டதும் வந்துவிடுவார்’-பிரகலாதனுக்காக அவதரித்த நரசிம்ம மூர்த்தி!

அப்பூதிஅடிகளும் சுவாமிகளை நோக்கி, “அடியவரே! திருநாவுக்கரசரின் பெருமை அளவற்றது. உழவாரப்பணிக்காக தன் வாழ்நாளை அற்பணித்தவர். சிறந்த சிவ தொண்டர். அவர் தொண்டில் ஒரு தூசு அளவு கூட எனது தொண்டானது இல்லை. இதில் அவர் பெயரை வைப்பது தான் சிறந்தது. நீங்களும் சிவ தொண்டர் தானே... நீங்களே அவரைப்பற்றி இப்படி கேட்கலாமா? உண்மையில் நீங்கள் சிவ தொண்டர் தானா? “ என்று கேட்டதும்

“அப்பூதியாரே... நீங்கள் சொன்ன நாவுக்கரசு சிவதொண்டன் அடியேன் தான்” என்று நாவுகரசர் சொன்னதும், அப்பூதியடிகளார் சற்றும் தாமதிக்காமல் அவரது கால்களில் விழுந்து வணங்கினார். கண்களில் நீர் சுரந்தது.

“சுவாமிகளே என் வீடு தேடி வந்தது நான் செய்த புண்ணியம். நீங்கள் அடியேனது இல்லத்தில் உணவு அருந்திவிட்டு இளைப்பாரிய பின் தான் செல்லவேண்டும்” என்ற அப்பூதியாரின் உத்திரவை ஏற்ற திருநாவுகரசர்,

“சரி... உன் விருப்பப்படியே நடக்கட்டும். நான் என் அப்பனை தரிசனம் செய்து விட்டு வருகிறேன்.” என்று கூறிய திருநாவுகரசர் சிவதரிசனத்திற்காக ஆலயம் சென்றார்.

அப்பூதியடியவரின் மனைவி திருநாவுகரசருக்காக அறுசுவை உணவு தயார் செய்தார். உணவும் தயாராகி விட்டது. அப்பூதியடியவர் தனது மூத்த மகனை அழைத்து, “திருநாவுகரசர் அமுது உண்பதற்கு வாழை இலை பறித்து வா” என்று கூறினார். அப்பிள்ளையும் வாழை இலைப்பறிப்பதற்காக சென்ற சமயம் மரத்தின் அடியில் இருந்த அரவம் (பாம்பு) ஒன்று அவனை கடித்ததும் அப்பிள்ளை உயிரிழந்தான்.

அச்சமயத்தில் திருநாவுகரசர், அப்பூதியடியவரின் இல்லத்திற்கு அமுதுண்ண வரவும், அப்பூதியடியவரும் அவரது மனைவியும், தனது பிள்ளை அரவம் தீண்டி இறந்த செய்தியை திருநாவுகரசருக்கு தெரியாமல் இருக்கவேண்டும் என எண்ணினர். ஆகவே, இறந்த தனது மகனை ஒரு வாழை இலைக்கொண்டு மூடி மறைத்து வைத்தனர். எவ்வித முககோணலும், வருத்தத்தையும் வெளியில் காட்டாது அப்பூதியடியவரும் அவரது மனைவியும் நாவுகரசருக்கு அன்னம் படைத்தனர்.

ஆனால் நாவுகரசரோ, “ அப்பூதியாரே... உனது மூத்த பிள்ளை எங்கே? அவருடன் நான் சேர்ந்து உணவு அருந்த நினைக்கிறேன்” என்று கூறவும், இனியும் அடியவரிடம் எதையும் மறைக்கமுடியாது என்று நினைத்த அப்பூதியார் நடந்த அனைத்தையும் அவரிடம் கூறினார். உடனே திருநாவுகரசர் இறந்த அவரது பிள்ளையின் சடலத்துடன் சிவதலம் சென்று உயிரற்ற பிள்ளையை சிவனின் முன்பாக இட்டு சிவபெருமான் மேல் பதிகம் ஒன்றை பாடி, சிறுவன் உயிர்தெழ வேண்டினார். சிவெபெருமானும் திருநாவுகரசரின் வேண்டுகோளை ஏற்று, சிறுவனுக்கு மீண்டும் உயிர் அளித்தார். தூக்கத்திலிருந்து எழுவதைப்போன்று சிறுவன் எழுந்து வந்ததைக்கண்டு அப்பூதியடியவரும் அவரது மனைவியும் மகிழ்சிஅடைந்தனர்.

பின் அனைவரும் இல்லம் திரும்பி அடியவருக்கு அமுது படைத்து மகிழ்ந்தனர்.

தன் வாழ்நாள் முழுவதும் திருநாவுகரசரின் திருவடியை மட்டுமே நினைத்து அதனை வழிபட்டு வாழ்ந்து வந்த அப்பூதி அடிகளார் இறுதியில் சிவபதம் அடைந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com