திருவாபரணங்களுடன் அரச கோலத்தில் காட்சியளிக்கும் ஐயப்பனை காண சபரிமலையில் குவியும் பக்தர்கள்
செய்தியாளர்: ரமேஷ் கண்ணன்
மகர ஜோதி தரிசனம்
சபரிமலையில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காலம் நவம்பர் 16ம் தேதி துவங்கியது. டிசம்பர் 26ல் மண்டல பூஜையும், கடந்த ஜனவரி 14ம் தேதி சபரிமலையில் பிரதான மகர சங்ரம பூஜை, மகர விளக்கு பூஜை, பந்தள அரசன் வழங்கிய திருவாபரணங்களுடன் ஜொலிக்கும் ஐயப்பனுக்கு மகா தீபாரதனை, பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி தரிசனம் ஆகியன நடந்து முடிந்துள்ளது.
திருவாபரணங்கள் அணிந்து அரச கோலத்தில் ஜொலிக்கும் ஐயப்பன்:
இந்நிலையில், அன்று முதல் பந்தள மகாராஜா வழங்கிய திருவாபரணங்கள் அணிந்து அரச கோலத்தில் ஜொலிக்கும் ஐயப்பனை தினமும் திரளான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களுக்கு திருவாபரணங்களில் வீற்றிருக்கும் அரச கோல ஐயப்ப தரிசனம் இன்று (ஜனவரி 17 ம் தேதி) இரவு 11 மணிக்கு ஹரிவராசனம் பாடி நடை அடைப்பதுடன் நிறைவுபெறும். இதனால், அரச கோல ஐயப்பனை காணும் ஆவலில் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்:
அதிகாலை 3 மணிக்கு துவங்கி காலை 10 மணிக்குள் 33,338 பக்தர்கள் அரச கோல ஐயப்பனை தரிசித்துள்ளனர். மதியம் 12 மணி வரை அந்த பக்தர்கள் எண்ணிக்கை 42,248 ஆக அதிகரித்துள்து. மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்பட்டு மீண்டும் மாலை 3 மணிக்கு நடை திறக்கப்படும். இரவு நடை அடைக்கும் இரவு 11 மணி வரையிலான எட்டு மணி நேரத்தில் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனவரி 19ம் தேதி வரை "ஸ்பாட் புக்கிக்" வசதி:
நெய் அபிஷேகம் நாளை (ஜனவரி 18 ஆம் தேதி) வரை நடத்தப்படும். ஜனவரி 19 ஆம் தேதி இரவு மாளிகாப்புரத்தில் ஸ்ரீ குருதி நடைபெறும். ஜன 20 ஆம் தேதி, பந்தளம் அரசு குடும்ப தரிசனத்திற்குப் பிறகு மகரவிளக்கு மஹோத்சவம் நிறைவடையும். மகரஜோதி தரிசன நாள் கட்டுப்பாடுகளால், முன்பதிவு செய்ய முடியாத பக்தர்கள், தரிசன தேதியை தவற விட்ட பக்தர்கள் வசதிக்காக ஜனவரி 19ம் தேதி வரை "ஸ்பாட் புக்கிக்" வசதியும் செய்யப்பட்டுள்ளது.
இதற்காக, பம்பை, நிலக்கல், எருமேலி, வண்டிப்பெரியார் மற்றும் பந்தளம் ஆகிய இடங்களில் "ஸ்பாட் புக்கிங்" கவுண்ட்டர்கள் திறக்கட்டடுள்ளன. பக்தர்கள் வருகை அதிகரிப்பைத் தொடர்ந்து பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அடிப்படை வசதிகள் செய்யும் பணிகள் திருவிதாங்கூர் தேவஸ்வம்போர்டு, கேரள போலீஸ் மற்றும் அரசு துறையினர் சார்பில் முடுக்கி விடப்பட்டுள்ளது.