உலகப்பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு; பரிசுகளை தட்டிச் சென்றது யார்?
மதுரையின் பெருமைமிகு அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு மிகவும் முக்கியமானது. இந்த ஜல்லிக்கட்டை காண்பதற்கு வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வருவது வழக்கம். இந்த ஆண்டு ஜல்லிக்கட்டில் பங்கேற்க, இரவு முதலே நீண்ட வரிசையில் ஜல்லிக்கட்டுக்காளைகள் காத்திருந்தன. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
அவருடன் அமைச்சர்களும் பங்கேற்றனர். மேடையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது மகன் இன்பநிதியுடன் அமர்ந்தபடி ஜல்லிக்கட்டு போட்டிகளை கண்டு ரசித்தார். இந்த ஜல்லிக்கட்டில் அவிழ்க்கப்பட்ட ஒவ்வொரு காளையும் திமிறிக்கொண்டு பாய்ந்து வந்தன. ஒற்றைக்கு ஒற்றையாக வரமுடியுமா என சவால் விடும் வகையில் சில காளைகள் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றன.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப்போட்டியில் 900 வீரர்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், 350 வீரர்கள் பரிசோதனை முடிந்து அனுமதிக்கப்பட்டனர். 54 வீரர்கள் வயதுமூப்பு, போலி ஆவணங்கள் உள்ளிட்ட காரணங்களால் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். 930க்கும் அதிகமான காளைகள் வாடிவாசல் வழியே அவிழ்க்கப்பட்டன.
களமிறங்கிய வீரர்கள், காளைகளின் வேகத்திற்கு ஈடாக தீரம் காட்டினர். நடிகர் சூரியின் காளை, ஜல்லிக்கட்டில் களமிறங்கி வெற்றி பெற்றது. முன்னாள் அமைச்சர் செல்லுர் ராஜூ பெயரில் அவிழ்க்கப்பட்ட 2 காளைகளும் வெற்றி பெற்றன. தனது காளையை அடக்கினால் 2 லட்சம் ரூபாய் பரிசு என்று திருநங்கை கீர்த்தனா அறிவித்த நிலையில், அவரது காளை வெற்றி பெற்றது. மாடுபிடி வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குவது தனது காளை என கீர்த்தனா தெரிவித்தார்.
வாடிவாசலுக்குள்ளிருந்து புல்லட் மாதிரி சீறி வரக்கூடிய மிலிட்டரி காளையை முடிந்தால் பிடிக்கச் சொல்லி கல்லூரி மாணவி திவ்யதர்ஷினி சவால் விட்டார். அவரது காளையும் சொன்னபடி வெற்றி பெற்றது. மொத்தம் 8 சுற்றுகளில் வெற்றிபெற்ற வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இறுதிச்சுற்றான 9 ஆவது சுற்றில் விளையாட அனுமதிக்கப்பட்டனர்.
இறுதிச்சுற்றில், பூவந்தி கிராமத்தைச் சேர்ந்த அபிசித்தர் 20 காளைகளை பிடித்து முதலிடம் பிடித்தார். அவருக்கு துணை முதலமைச்சர் உதயநிதி சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது. பொதும்பைச் சேர்ந்த ஸ்ரீதர் 14 காளைகளை பிடித்து 2 ஆவது இடம் பிடித்தார். 10 காளைகளை பிடித்த மடப்புரம் விக்னேஷ் 3 ஆவது இடத்தைக் கைப்பற்றினார். சிறந்த காளையாக தேர்வான பாகுபலி காளையின் உரிமையாளருக்கு முதலமைச்சர் சார்பில் டிராக்டர் பரிசு வழங்கப்பட்டது.
இந்த ஜல்லிக்கட்டில் 17 மாடுபிடி வீரர்கள் உட்பட 50 பேர் காயம் அடைந்தனர். அலங்காநல்லூரில் அவிழ்க்கப்படும் அனைத்துக் காளைகளுக்கும் தங்கக்காசு பரிசாக வழங்கப்பட்டது. மேலும் சைக்கிள், மெத்தை, பீரோ, கட்டில் என பலவித பரிசுகளும் காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளுக்கும் வழங்கப்பட்டன. புதிய தலைமுறைக்காக மதுரை மண்டல செய்தியாளர்கள்