பச்சைப் பட்டினி விரதம் இருக்கும் திருச்சி சமயபுரம் மாரியம்மன்.. ஏன் தெரியுமா?
தமிழகத்தின் புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரை தேர்த்திருவிழா இந்தாண்டும் சிறப்பாக தொடங்கி, கொடியேற்றம் முதல் தேரோட்டம் வரை உற்சாகமாக நடந்தது.. மாசி முதல் பங்குனி வரை அம்மன் பச்சைப் பட்டினி விரதம், பூச்சொரிதல் போன்ற விழாக்கள் நடைபெற்று லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, அன்னதானத்துடன் முடிந்தது..
பச்சைப் பட்டினி விரதம் இருக்கும் அம்மன்
தமிழகத்தில் உள்ள அம்மன் தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோயிலாகும். இக்கோயிலில் உள்ள அம்மனை வேண்டினால் நினைத்தது நடக்கும், செல்வம் பெருகும், குடும்பத்தில் அமைதி நிலவும், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த சமயபுரம் மாரியம்மன் உலக நன்மைக்காகவும், தன்னை தரிசிக்க வரும் பக்தர்கள் நோய் நொடியின்றி வாழவும், குடும்பம் செழிக்கவும் மாசி மாதம் கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாதம் கடைசி ஞாயிறு வரை பச்சை பட்டினி விரதம் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பதாகக் கூறப்படுகிறது.
சமயபுரத்தாளுக்கு இதை படைக்கமாட்டார்கள்
அதேநேரத்தில் அம்மனுக்கு பூச்சொரிதல் திருவிழாவும் நடைபெறும். இந்த திருவிழாக் காலங்களில் மரபு மாறி தன்னைத்தானே வருத்திக்கொண்டு பக்தர்களுக்காக 28 நாட்கள் விரதம் இருக்கும் அம்மனுக்கு, படையலில் ஏதும் சமைத்து படைக்கமாட்டார்கள். இது இக்கோயிலின் தனிச் சிறப்பு. இதனால் இக்கோயிலுக்கு தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்தும் தரிசனம் செய்வதற்காக தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், வாகனங்களிலும் வந்து செல்கின்றனர்.
கோயிலின் சிறப்பு
இக்கோயிலின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதம் நடைபெறும் தேரோட்டம்தான். இந்த தேரோட்டத்தில் ஆண்டுதோறும் லட்சக்கணக்காண பக்தர்கள் பங்கேற்பார்கள். அதுமட்டுமல்லாமல், வழக்கமாக நாம் அம்மனுக்கு நைவேத்தியமாக சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதம், என படைத்து வழிபடுவோம். ஆனால் பச்சைப் பட்டினி விரதம் இருக்கும் இந்தச் சமயபுரத்து மாரியம்மனுக்கு 28 நாட்களும் சமைத்த உணவுகள் எதுவும் படைக்கப்படாது. அதற்குப் பதிலாக இளநீர், துள்ளு மாவு, பழங்கள், கரும்பு, நீர் மோர் ஆகியவை மட்டுமே நைவேத்தியமாக வைத்து படைக்கப்படும்.
பூச்சொரிதல் விழா
அத்துடன் இப்படி பட்டினி விரதம் இருக்கும் அம்மனின் மனதையும், உடலையும் குளிர்விப்பதற்காக விரத காலத்தில் வரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் பக்தர்கள் கூடை கூடையாக பூக்களை எடுத்துவந்து கோயிலில் அம்மனுக்கு படைத்து வழிபாடு செய்வார்கள்.. இந்த வழிபாடு ’பூச்சொரிதல் விழா’ என்றும் அழைக்கப்படுகிறது.. மேலும் பக்தர்கள் செல்லமாக இந்த அம்மனை மகமாயி, மாரியாயி, தாயே, ஆத்தா, சமயபுரத்தாள் என அழைப்பதுண்டு..
கம்பீரமாக சிவ பதத்தில் காட்சியளிக்கும் அம்மன்
அத்துடன் இந்தக் கோயிலில் உள்ள மூலவருக்கு எப்போதுமே அபிஷேகம் கிடையாது. இந்த அம்மனுடைய விக்ரஹம் எட்டு திருக்கரங்களுடன், சிவந்த திருமுகத்துடன், இடது காலை மடித்து, வலது காலை கிழே தொங்கும்படி சிவ பதத்தில் அமர்ந்து காட்சி தருகிறாள். இந்த அம்மன் திருச்சி காவிரிக் கரையில் உள்ள ஸ்ரீரங்கம், ரங்கநாதரின் தங்கை என புராணங்கள் சொல்கின்றன. அதனால் அண்ணனான ரங்கநாதர் தனது தங்கையான சமயபுரம் மாரியம்மனுக்கு சீர்கொடுக்கும் வைபவம் மிக சிறப்பாக ஆண்டுதோறும் நடைபெறும். இப்படி உலக மக்களின் நன்மைக்காக அம்மனே விரதம் இருக்கும் அதிசயம் சமயபுரத்து மாரியம்மனுக்கே உரியது என்றே சொல்லலாம்..

