“பிரசவ வீடியோவை குழந்தைகளுக்கு காண்பிக்காதீங்க! நிபுணத்துவம் பெறாவதங்ககிட்ட ஆலோசனை பெறாதீங்க”

“குழந்தைகளுக்கு பாலியல் கல்வி என்பது, 5 வயது வரை தேவையே கிடையாது. குட் டச், பேட் டச் மட்டும் சொல்லிக்கொடுத்தால் போதும்” - குழந்தைகள் மனநல மருத்துவர்
sex education
sex educationfreepik

இரு தினங்களுக்கு முன்னர் இன்ஸ்டாவில் ஒரு போஸ்ட். அதில் குழந்தைகள் கேட்டதாக சில பாலியல் சந்தேகங்கள் இருந்தன. முக்கியமாக, ‘விந்தணு, கருமுட்டை என்பது என்ன? பாலியல் உறவிலுள்ள வகைகள் என்னென்ன? சிலர் சுய இன்பம் காண்பது ஏன்’ உட்பட நுட்பமான அதே சமயம் சிக்கலான பல கேள்விகள் இருந்தன. இந்த போஸ்ட், இணையத்தில் கடும் விமர்சனங்களை பெற்றுவருகிறது. ‘குழந்தைகளின் உலகத்தில் பாலியல் விஷயங்களை திணிப்பது ஆபத்தானது. குழந்தைகளுக்கு வயதுக்கேற்ற புரிதல் மட்டுமே போதுமானது’ என இணையவாசிகளும் குழந்தை நல ஆர்வலர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து குழந்தைகள் உளவியல் மருத்துவர் பூங்கொடி பாலாவிடம் பேசினோம்.

“முதல் விஷயமாக குழந்தையை ஹேண்டில் செய்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை பற்றி சொல்லிவிடுகிறேன்.

குழந்தைகள் சுய இன்பம் பற்றி - பிரசவ வலி பற்றி - பிரேக் அப் பற்றியெல்லாம் கேள்வி கேட்கிறார்கள் என்பதை ஊக்குவிக்க வேண்டாம். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு வகை புரிதல் இருக்கும், அனுபவம் இருக்கும். அதை அவர்களிடம் தனிப்பட்டு கேட்டு அறிந்து, அவர்களை வயதுக்கேற்றார் போல நெறிப்படுத்துவதே நம் கடமை. அதைவிடுத்து அந்த டாபிக் பேசுவதே சரியென்பதுபோல ஊக்குவிப்பது, மோசமான வழியில் அக்குழந்தைகளை கொண்டு செல்லும்.

குழந்தைகள் மனநல மருத்துவர் பூங்கொடி பாலா
குழந்தைகள் மனநல மருத்துவர் பூங்கொடி பாலாPT Desk

சரி இந்த விஷயத்துக்கு வருவோம். இப்போதெல்லாம், 2 குழந்தைகளை பிடித்து உட்கார வைத்துக்கொண்டு, பேரன்டிங் என கவுன்சிலிங் கொடுக்க ஆரம்பித்துவிடுகிறார்கள் சிலர். பேரன்டிங் கவுன்சிலிங் போலவே Breastfeeding - Maternity Educator என வகை வகையான பெயர்களில் தகுதிபெறாத கவுன்சிலர்கள் பலரும் ஆன்லைனில் இருக்கிறார்கள். இப்படியானவர்கள் சிலர் சொல்வது சரியாக இருக்குமென்றாலும் பலர் சொல்வது தவறாகவே உள்ளது.

அதனால் இவர்களின் செயல்பாடுகளை நாம் நிச்சயம் ரெகுலேட் செய்ய வேண்டும். அரசு தரப்பில் இதற்கான முயற்சிகள் தேவையென நினைக்கிறேன். குறிப்பிட்ட இந்த இன்ஸ்டா பதிவிலும்கூட, குழந்தையின் கையெழுத்தில் சில விஷயங்களை பெரியவர்களே எழுதினார்களோ என்றுதான் சந்தேகிக்க தோன்றுகிறது. வியூஸ் வேண்டும். அதிக பார்வையாளர்கள் வேண்டுமென நினைத்து அவர்களேகூட இதை எழுதியிருக்கலாம்.

அதேநேரம் ஒருசில குழந்தைகள், சிறுவயதிலேயே சில அதிகப்படியான விஷயங்களை கற்றுக்கொண்டு இப்படி கேள்வி கேட்பார்கள் என்பதும் மறுப்பதற்கில்லை. ஆனால் அதில் ஆச்சர்யப்படவோ எக்சைட் ஆகவோ எதுவும் இல்லை. உண்மையில் அந்த சந்தேகங்களுக்காக அந்தக் குழந்தையை நாம் ஊக்குவிக்க முடியாது. எதை எந்த வயதில் சொல்லித்தர வேண்டுமென உள்ளது. இதில் நாம் தெரிந்துக்கொள்ள வேண்டிய மூன்று விஷயங்கள்

- குழந்தைகளுக்கு பாலியல் கல்வி என்பது, 5 வயது வரை தேவையே கிடையாது. 5 வயது வரை குட் டச், பேட் டச் மட்டும் சொல்லிக்கொடுத்தால் போதும்.

- 7 முதல் 13 வயது வரை, வளரிளம் பருவம் குறித்த அறிவை சொல்லிக்கொடுக்க வேண்டும். முக்கியமாக

* உடல் என்ன மாதிரியான மாற்றங்களை எதிர்கொள்ளும் (பெண் குழந்தையெனில் மார்பக வளர்ச்சி - மாதவிடாய் குறித்து; ஆண் குழந்தையெனில் குரல் மாற்றம், உடல் உறுப்புகளின் வளர்ச்சி போன்றவை குறித்து)

* இந்த மாற்றங்களை எப்படி எதிர்கொள்வது, எதிர்பாலினத்தவருக்கு எப்படியான மாற்றங்கள் நிகழும் (இவ்விஷயத்தில் எதிர்பாலினத்தவர் உடல் சார்ந்து பேசுகையில் அடிப்படை மட்டும் போதும். உதாரணத்துக்கு ஆண் குழந்தையிடம், பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்படும் - அது அவர்களின் உடல் மாற்றங்களால் நிகழும் சாதாரண மாற்றம் மட்டுமே என்று சொன்னாலேவும் போதும்) போன்றவற்றை சொல்லிக்கொடுக்கவேண்டும்

- 14, 15 வயதுக்கு மேல் பள்ளிப்பாடங்களிலேயே பாலியல் உறவு சார்ந்த விஷயங்கள் வந்துவிடுகிறது. அதோடு சேர்த்து கூடுதலாக காதல், ஈர்ப்பு, ஹார்மோன் பிரச்னைகள் குறித்து பெற்றோர் சொல்லிக்கொடுக்க வேண்டும். இந்த இடத்திலும் சுய இன்பம் காணுதல் என்றால் என்ன, பாலியல் உறவென்றால் என்னவென்று புரிதல் வரும்படி அவர்களுக்கு சொல்லிக்கொடுத்தால் போதும். ஏற்கெனவே இவ்விஷயங்கள் அவர்களின் உயிரியல் பாடங்களில் ஓரளவு இருக்கும் என்பதால், அதன் வழியாக சொல்லிக்கொடுப்பதுதான் சிறந்த வழி.

18 வயதுக்கு மேல் உறவு கொள்வதே சரியென்றும் சொல்லிக்கொடுங்கள். 18 வயதுக்கு முன் கர்ப்பமடைவதால் / தந்தையாவதால் வரும் சமூக - உளவியல் ரீதியான - உடல் சார்ந்த பிரச்னைகளை எடுத்துக்கூறுங்கள்.

குழந்தைகள் மனநல மருத்துவர் பூங்கொடி பாலா

இதை நாம் (பெற்றோர்) எவ்வளவு சென்சிடிவாக கையாள்கிறோம் என்பது மிகவும் முக்கியம். ஒருவேளை குழந்தை இதுகுறித்து அதிகம் சந்தேகம் கேட்கிறது, உங்களுக்கு அதை எதிர்கொள்ளவதில் சிக்கல் உள்ளது என்றால் குழந்தைகள் நல மருத்துவர்கள் - உளவியல் மருத்துவர்கள் - குடும்ப மருத்துவர் என உங்கள் குழந்தையை கையாள சரியான நிபுணத்துவம் பெற்றவரிடம் அழைத்துச் சென்று அவர்கள் மூலம் சொல்லிக்கொடுங்கள்.

sex education
கொரோனா கால மாணவர் நலன் 11: வீட்டுக்குள் வ(ள)ரவேண்டும் குழந்தைகளுக்கான பாலியல் கல்வி!

எதுவாகினும், இந்தியா மாதிரியான ஒரு நாட்டில் அப்யூஸ், பாலியல் நோய்கள் என பல்வேறு அச்சம் இருப்பதால் 18 வயதுக்கு முன் பாலியல் சார்ந்த விஷயங்களை முயற்சிக்க வேண்டாமென பெற்றோர் குழந்தைகளிடம் அழுத்திச் சொல்ல வேண்டும்.

குழந்தை அதுபற்றி அதிகம் கேட்டால், ‘இது இந்த வயதுக்கு நீ தெரிந்துகொள்ள வேண்டியது அல்ல. தெரிந்துகொள்ள வேண்டிய வயது வரும்போது நாங்களே சொல்லிக்கொடுப்போம்’ என சொல்லுங்கள். நிறைய குழந்தைகள் சமூகவலைதளம் மூலம் தெரிந்துகொள்வார்கள் என்பதால், ‘இது பெரியவர்களுக்கானது. நீ இந்த வயது வரும்போது இதுபற்றி நாம் பேசுவோம். இதில் பெரிதாக எதுவுமில்லை. அந்த வயதில் கற்றுக்கொள்ள வேண்டியது, அவ்வளவே’ என்று சொல்லுங்கள்.

இந்த இடத்தில் பெற்றோர் செய்யக்கூடாத விஷயங்கள்:

குழந்தைகளுக்கு குழந்தை பிறப்பு வீடியோக்கள், விஷயங்களையெல்லாம் சொல்லக்கூடாது காண்பிக்கவும் கூடாது.
- குழந்தைகள் மனநல மருத்துவர் பூங்கொடி பாலா

ஏனெனில் அதை பார்க்கும்போது அவர்களுக்குள் (குழந்தைக்கு) நிறைய கேள்விகள் வரும். பிரசவ கால வலியை இப்போதிருந்தே யோசிக்கத்தொடங்குவார்கள். உடலுறுவு தொடர்பான வீடியோக்களுக்கும் இவை பொருந்தும். 18 வயதுக்கு முன்புவரை இப்படியான விஷயங்களை காண்பிப்பதை தவிர்க்கவும்.

மீறி செய்வது, அவர்களுக்கு உடலுறுப்பு மீது (குறிப்பாக பிறப்புறுப்பின்மீது) பயத்தை கொடுக்கும். வருங்காலத்தில் குழந்தை பெற்றுக்கொள்வதையேகூட தவிர்க்கும் அளவுக்கு அவர்கள் யோசிக்கக்கூடும். சிறுவயதில் ஏற்படும் இப்படியான ட்ராமாக்கள் (Trauma), அவர்களின் வருங்காலத்தை பாதிக்கும். குழந்தை பெறுவது அவரவரின் தனிப்பட்ட விருப்பம் சார்ந்து மட்டுமே இருக்க வேண்டும், இப்படியான ட்ராமாக்கள் அதில் அங்கம் வகிக்கக் கூடாது.

குழந்தைகளை குழந்தைகளாகவே இருக்கவிடுங்கள்.!

சுயமாக சாப்பிட்டுக்கொள்வது என்பதையே, நம் குழந்தைகளுக்கு 5, 6 வயதில் தானே முழுமையாக பழக்குகிறோம்? தலை சீவிக்கொள்ள, யூனிஃபார்ம் போட்டுக்கொள்ள, ஷூ லேஸ் கட்டிக்கொள்ள என சுய வேலைகள் எல்லாவற்றையும் 7 - 8 வயதில் கற்கும் குழந்தை, பாலியல் விஷயங்களை ஏன் இவ்வளவு அவசர அவசரமாக அதே வயதில் கற்க வேண்டும்?

குழந்தைகள் மனநல மருத்துவர் பூங்கொடி பாலா

ஒவ்வொன்றாக வாழ்க்கையை கற்கும்போதுதான் சுவாரஸ்யமும் நிதானமும் இருக்கும். உண்மையில் உங்கள் குழந்தைக்கு நீங்கள் நிம்மதியான, சுவாரஸ்யமான வாழ்வை கொடுக்க நினைத்தால், வயதுக்கு மீறிய விஷயங்களை அவர்களுக்கு சொல்லிக்கொடுக்காதீர்கள். குழந்தைகளை குழந்தைகளாகவே இருக்கவிடுங்கள்.

சாக்லேட் ரெயின்ஃபாலும் ஸ்டராபெர்ரி கனவுகளும் காணும் நம் பிள்ளைகளுக்கு, குழந்தை பிறப்பும், அது தரும் வலியும் கனவில் வந்துவிட வேண்டாம்!

அதற்கு இன்னும் காலம் இருக்கிறது. இப்போது அவர்கள் தங்கள் வாழ்க்கையை எந்தவித அழுத்தமுமின்றி அனுபவிக்கட்டும்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com