கொரோனா கால மாணவர் நலன் 11: வீட்டுக்குள் வ(ள)ரவேண்டும் குழந்தைகளுக்கான பாலியல் கல்வி!

கொரோனா கால மாணவர் நலன் 11: வீட்டுக்குள் வ(ள)ரவேண்டும் குழந்தைகளுக்கான பாலியல் கல்வி!
கொரோனா கால மாணவர் நலன் 11: வீட்டுக்குள் வ(ள)ரவேண்டும் குழந்தைகளுக்கான பாலியல் கல்வி!

கடந்த ஆண்டுகளைவிடவும் இந்த கொரோனா பொதுமுடக்க - பேரிடர் நேரத்தில் அளவுக்கதிகமான பாலியல் குற்றங்கள் பதிவாகி வருகின்றன. இதன் பின்னணி குறித்து நாம் கடந்த அத்தியாத்திலேயே பேசியிருந்தோம். குறிப்பாக பாலியல் துன்புறுத்தல் தொடர்பான விஷயத்தில், சட்டரீதியாக நாம் நம் குழந்தைகளுக்கு போராட சொல்லித்தர வேண்டும் என்பது குறித்து கடந்த அத்தியாத்தில் பேசியிருந்தோம். அதற்கு முன், பாலியல் துன்புறுத்தல் என்பது எது என்ற தெளிவையும் நாம் நம் குழந்தைகளுக்கு வழங்குவேண்டியுள்ளது. ஏனெனில், தொடுதல் மட்டுமே பாலியல் துன்புறுத்தல் என்று நாம் நம் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். அவற்றுடன் சைபர் புல்லியிங் - காதலிப்பதாக கூறி சம்பந்தப்பட்ட குழந்தையின் புரிதலற்ற அனுமதியோடு அவர்களை வதைக்குள் உள்ளாக்குவது - பாலியல் விஷயங்கள் குறித்து குழந்தையிடம் பேசி, பின்னாள்களில் அதைவைத்தே அவர்களை சிதைக்கு உள்ளாக்குவது உள்ளிட்ட பலவும் 'பாலியல் துன்புறுத்தல்'களாகவே பார்க்கப்படுகிறது.

இந்தத் தெளிவை குழந்தைகளுக்கு வழங்குவதில் முக்கியமான பங்கு பெற்றோருக்குத்தான் உண்டு. குறிப்பாக இது கொரோனா பேரிடர் காலம் என்பதால், பள்ளிகளில் நேரடி வகுப்புகள் முடங்கியுள்ளன; அதனால் ஆசிரியர்களால் தற்போது இதில் பெரும்பான்மையாக பங்கு கொள்ள முடியாது.

பெற்றோருக்கு இந்த விஷயத்தில் பல தெளிவற்ற தன்மை இருப்பதை காண முடிகிறது. பல பெற்றோரும் நல்ல தொடுதல் - கெட்ட தொடுதல் என்பதை போதிப்பதோடு தங்கள் கடனை முடித்துக் கொள்கின்றனர். அதன்பின் நேரடியாக பாலியல் துன்புறுத்தலுக்கு தங்கள் குழந்தை உள்ளான பின்னர், அதை 'சட்டரீதியாக போராட சொல்லிக்கொடுக்க வேண்டும்; அப்போது அவர்களுடன் நாம் துணைநிற்க வேண்டும் / எதிர்த்து போராட வேண்டும்' என்று நினைக்கிறார்கள். சட்டரீதியாக போராடுவதிலும் பெற்றோருக்கு தயக்கம் உண்டு என்பதால், அதிலும் பல நடைமுறை சிக்கல் இருக்கிறது. சரி, வேறென்ன சொல்லிக்கொடுக்க வேண்டுமென்றால், இரண்டுக்கும் இடையே பாலியல் கல்வியை குழந்தைக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும். அதை எப்படி நாங்க செய்வது என நினைக்கிறார்கள் பல பெற்றோர்கள்.

"இப்படியான இவர்களின் தயக்கமே, குழந்தைகளை பல நேரங்களில் ஆபத்துக்கு கொண்டு செல்கிறது. நல்ல தொடுதல் - கெட்ட தொடுதல் போதனை மட்டுமே குழந்தைகளுக்கு போதாது. சைபர் புல்லியிங் - ஆசை வார்த்தைகள் பேசி குழந்தையை தன்வசப்படுத்துவது உள்ளிட்டவற்றை குறித்தும் குழந்தைகளிடம் பேச வேண்டியுள்ளது. பாலியல் கல்வி மிக மிக முக்கியம்" என்கிறார் உளவியல் நிபுணர் சித்ரா அரவிந்த். இதுகுறித்து நம்மிடையே விரிவாக பேசினார் அவர். விரிவான அத்தகவல்கள் இங்கே:

"பாலியல் கல்வி என்றவுடனேயே, 'அதை எப்படிங்க நாங்க பேசுறது' என நினைக்கிறார்கள் பல பெற்றோர்கள். பாலியல் கல்வி என்றால் நேரடியாக உடலுறவு சார்ந்த விஷயங்களை குழந்தைக்கு போதிப்பது என்று பல பெற்றோர் நினைக்கிறார்கள். உண்மை அது அல்ல. ஒவ்வொரு வயதுக்கும், ஒவ்வொரு விதமாக இந்தக் கல்வி அமையும். நாம் நம் குழந்தைக்கு கணிதம் சொல்லிக்கொடுக்கும்போது, எடுத்தவுடன் அல்ஜீப்ராவையும், அல்காரிதமையுமா சொல்லிக்கொடுப்போம்? இல்லையே.... முதல் வகுப்பில் எண்கள், அடுத்த வகுப்பில் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுக்கல் - இப்படி படிப்படியாக சொல்லி சொல்லி அந்தக்குழந்தையின் வயதுக்கேற்ப ஒவ்வொரு விஷயத்தையும் போதிப்போமில்லையா? அப்படித்தான் பாலியல் சார்ந்த விஷயங்களும். இதை உணர்ந்துக்கொண்டு, பெற்றோர் என்பவர்கள் தங்களின் குழந்தைக்கு பிறந்து 2 வயதிலிருந்தே பாலியல் சார்ந்த விஷயங்களை (எப்படி அ, ஆ சொல்லிக்கொடுக்கிறோமோ) அப்படி சொல்லிக்கொடுக்க வேண்டும்.

இதை நான் சொல்கையில் 'அட, 2 வயது குழந்தைகிட்ட போய் என்னங்க சொல்றது' என்று நினைத்து தயக்கப்பட வேண்டாம். எந்த வயதில் என்ன சொல்ல வேண்டும் என்பதை நான் பட்டியலிடுகிறேன். அதனடிப்படையில் செயல்படவும்.

0 - 2 வயது: உடலுறுப்புகள் அனைத்தையும் பட்டியலிட்டு, அவற்றுக்கு உடலில் என்ன பணி என்பதை சொல்ல வேண்டும். உதாரணத்துக்கு, கண் - பார்ப்பதற்கு உதவும்; மூக்கு - சுவாசிப்பதற்கு உதவும்; வாய் - சாப்பிட உதவும் என்று சொல்லிக்கொடுப்பது போல, ஆண் குழந்தைக்கும் பெண் குழந்தைக்கு அவர்களில் பிறப்புறுப்பின் பெயர் மற்றும் அவை உடலின் கழிவுகளை நீக்க உதவுபவை என்பதை சொல்லிக்கொடுக்க வேண்டும்.

2 - 5 வயது: உடலுறுப்பில் 'பிறப்புறுப்பில் பகுதியில் அப்பா - அம்மா உள்ளிட்ட உன்னைக் குளிக்க வைப்பவர் / டாய்லெட் போக வைப்பவர் தவிர, வேறு யாரும் கை வைக்க அனுமதிக்கக்கூடாது' என்று சொல்லிக்கொடுக்க வேண்டும். 'அப்படி யாரேனும் வைத்தால் அதை நீ என்னிடம் சொல்ல வேண்டும்' என்று அறிவுத்தவும். போலவே 'உடலின் எந்த உறுப்புகளையும், பொதுவெளியில் அதிகமாக தொடக்கூடாது' என்று சொல்லிக்கொடுப்பதும் அவசியம். ஏனெனில் ஓர் உறுப்பை மட்டும் சொல்லி, அதைத் தொடக்கூடாது என்கையில் குழந்தை அதுகுறித்து யோசிக்கக்கூடும்; அதை அருவருப்பாக எண்ணும் வாய்ப்பும் உண்டு. ஆகவே, அதிகமாக எந்த உறுப்பையும் அடிக்கடி தொடாதே என்று அறிவுறுத்துங்கள். ஒருவேளை குழந்தை பிறப்புறுப்பை அதிகமாக தொடும் பழக்கத்துடன் இருந்தால், வீட்டில் ஒரு இயல்பான சூழலில் (உணவு ஊட்டும்போது, அவர்களுடன் விளையாடும்போது என ஏதாவதொரு சூழல்) 'இப்பகுதிகளை பொதுவெளியில் தொடாதே' என்று சொல்லிக்கொடுங்கள். Boundaries - என்று இதை சொல்லுவோம்.

ஆக உடலின் எந்தப் பகுதியை எப்போது, எங்கு, யார் தொடலாம் என்பதை குழந்தைக்கு இந்த வயதில் சொல்லிக்கொடுக்க வேண்டும். யார் தொடலாம் என்பதில், மிக மிக கவனமாக 'உன்னை கவனித்துக்கொள்ளும் நபர் மட்டும் தொடலாம்' என சொல்லவேண்டியது அவசியம். அவர்களன்றி, நீ உன் உடலை தொடலாம் என்று சொல்லிக்கொடுங்கள்.

சில குழந்தைகள், இந்த வயதிலேயே ‘குழந்தை எப்படி வருகிறது' என்று கேட்பார்கள். அவர்களிடம் நீங்கள் இதுகுறித்து முழுமையாக சொல்ல வேண்டிய அவசியமில்லை என்றாலும், அடிப்படையாக ஏதேனும் தகவல் சொல்லுங்கள். சொல்ல வேண்டாமென நினைத்தாலும், 'நீ வளர்ந்த பிறகு சொல்றேன்' என்று சொல்லுங்கள். ஆனால் பொய்யாக கற்பனைக் கதைகளை சொல்ல வேண்டாம்.

போலவே, குழந்தைகளிடையே இந்த வயதில் ஆண் - பெண் கற்பிதங்களை சொல்லிக்கொடுக்க வேண்டாம். வீட்டில் ஆண் குழந்தையொன்றும், பெண் குழந்தையொன்றும் இருந்தால் அவர்களை 'மகன், மகள்' என அடையாளப்படுத்தாமல் 'என் குழந்தைகள்' என்று மட்டும் அடையாளப்படுத்துங்கள். அந்த இடத்தில் பாலின அடையாளங்கள் அவர்களுக்கு தேவையற்றது.

6 - 8 வயது: இந்த இடத்தில் பாலியல் விஷயங்கள் ஓரளவுக்கு குழந்தைகளுக்கு புரிந்துவிடும். ஆண் - பெண் சார்ந்த விஷயங்கள் குறித்த அடிப்படை புரிதல்கள் வந்துவிடும் என்பதால், எதிர்பாலினத்தின் உடல் மீது கேள்விகள் வரும். அதுசார்ந்து அவர்களே கேட்கவும் தொடங்குவார்கள். அப்போது, எதிர்பாலினத்தின் உடலில் வேறுபடும் பாகங்கள் பற்றி மட்டும் அடிப்படையாக சொன்னால் போதுமானது. 'அது அவர்களின் பிறப்புறுப்பு. இவைதான் அவர்களை ஆண் / பெண் என அடையாளப்படுத்த உதவுகிறது' என்று அதை சாதாரணமான ஒரு விஷயமாக சொல்லிவிட்டு கடக்கவும்.

போலவே, 'பிறப்புறுப்பை யாரிடமும் காண்பிக்கவோ - அதைப்பற்றி யாரிடமும் பேச வேண்டியோ அவசியமோ உனக்கில்லை' என்ற புரிதலை இந்த வயதில் குழந்தைகளுக்கு தர வேண்டும். உடன், 'யாராவது உன்னிடம் வந்து அப்பகுதியை காண்பிக்க சொன்னாலோ - அல்லது உன்னிடம் அவர்களின் உறுப்புகளையோ / வேறொருவரின் அதுசார்ந்த புகைப்படங்களையோ காண்பித்தாலோ அது சட்டப்படி குற்றம்; அந்நபர் தண்டனைக்குட்பட்டவர்; அவரை பற்றி நீ உடனடியாக என்னிடம் கூறவேண்டும். அவர்களின் அப்படியான வார்த்தைகளுக்கு நீ கட்டுப்பட வேண்டிய அவசியம் இல்லை. உனக்கு மட்டுமல்ல; உன் நண்பர்கள் யாரேனும் அவர்களுக்கு அப்படி நடந்ததாக உன்னிடம் பகிர்ந்தாலும், அதை நீ என்னிடம் கூறு... நான் அதை கையாள்கிறேன்' என்றும் கூற வேண்டும். இந்த விஷயம், மிக மிக சென்சிட்டாவனது என்பதால், இந்த உரையாடலை பெற்றோரே தொடங்க வேண்டியது அவசியம். குழந்தைக்கு நெருக்கமான பெற்றோர், இதை பேச வேண்டும்.

இந்த வயதிலேயே பல குழந்தைகள் அதீதமாக செல்ஃபோன் உபயோகிக்க தொடங்கிவிட்டார்கள் என்பதால், போர்னோகிராஃபி தொடர்பாக விஷயங்களில் அவர்கள் மூழ்குவதற்கும் வாய்ப்புள்ளது. ஒருவேளை அப்படியான விஷயங்களில் இருந்தால் பெற்றோர் உடனடியாக 'நீ செஞ்சது தப்பு; இது அவமானம், அசிங்கம்' என்றெல்லாம் கடுமையாக பேசுவது, குழந்தையை அடிப்பது என்று இருக்க வேண்டாம். மாறாக 'இதெல்லாம் பெரியவங்களுக்கானது. 18 வயசுக்கு மேற்பட்டவங்களுக்கானது. நீ உனக்கானதை மட்டும் பார்த்தால் இந்த வயதுக்கு போதுமானது' எனக்கூறவும். அதன்பின், குழந்தைகளின் செல்ஃபோன் உபயோகத்தில் சற்று கட்டுப்பாட்டுடன் இருக்கவும்.

8 வயது முடிகையில்: இந்த வயதில், பருவமடைதல் குறித்து பேசவும். பெண் குழந்தைக்கு ஏற்படும் மாதவிடாய் குறித்து ஆண் குழந்தைக்கும் அடிப்படையாக சொல்லிக்கொடுப்பது நல்லதுதான். மாதவிடாய் என்பது 'நீ பெண் என்பதால் உன் உடல் இயக்கத்தில் ஏற்படும் ஒரு அடிப்படை மாற்றம்' என்று இரு தரப்பு குழந்தைக்கும் சொல்லிக்கொடுக்கவும். மாதவிடாய் எதற்கு உதவும் என்று குழந்தை கேட்டால், வீட்டில் கர்ப்பமாக இருக்கும் யாரேனும் ஒரு பெண்ணை காண்பித்து, அதற்கு உதவும் என்ற அடிப்படையாக சொல்லவும்.

9 - 12 வயது: இந்த வயதில், பாலியல் துன்புறுத்தல் என்பது என்ன என்று தெளிவாக கூறவும். 'இது உன்னுடைய உடல்; உன்னை தவிர வேறு யாரும் உன்னை தொடுவதற்கு நீ அனுமதிக்கக் கூடாது' என்று சொல்லிக்கொடுக்கவும். ஆண் குழந்தையோ - பெண் குழந்தையோ அவர்களுக்கு உடல் உறுப்பில் மாற்றங்கள் இந்த வயதில்தான் நடக்கும். ஆகவே அதை தெளிவாக சொல்லிக்கொடுக்கவும்.

பெண் குழந்தைகளுக்கு 8 வயது முடிகையிலேயே 'மாதவிடாய் எப்படி நடக்கும் - ரத்தப்போக்கு இருக்கும் - அது இயல்புதான்' என்று சொல்லிக்கொடுத்து விடவும். இல்லையெனில், மாதவிடாய்க்குள் நுழைகையில் 'பிறப்புறுப்பிலிருந்து ரத்தம் வருகிறதே' என குழந்தைகள் பயப்படுவார்கள். மட்டுமன்றி, இன்று பல பெண் பிள்ளைகளுக்கு மாதவிடாய் சீக்கிரமாகவே தொடங்கிவிடுவதால் அதை பார்க்கும் நம் குழந்தைக்கு அதுபற்றிய புரிதலின்மை வரக்கூடும்.

ஆண் குழந்தைகளுக்கு, அவர்கள் வயதுக்கேற்ற மாற்றங்கள் குறித்து அவர்களிடம் வயது வர வர பேசவும்.

இந்த வயதுக்குட்பட்ட குழந்தைகளிடம் பேச பல பெற்றோர் தயங்குகின்றனர். இப்படியானவர்கள், புத்தகங்களின் உதவியை நாடவும். இன்றளவில் பல குழந்தைகள் விழிப்புணர்வு புத்தகங்கள் வயதுவாரியாக கிடைக்கிறது. ஆகவே அதைவைத்து பாடம் சொல்லிக்கொடுப்பதுபோல இதை சொல்லிக்கொடுங்கள். பல பிள்ளைகள் இந்த வயதில் மொபைல் அதிகம் பயன்படுத்தி - புகைப்படங்கள் நிறைய எடுப்பதால் 'ஆடையற்ற புகைப்படம் அனுப்பு' என வரும் குறுஞ்செய்திகளை உங்களிடம் காட்ட சொல்வது; பாலியல் சார்ந்த விஷயங்களை காட்டும் / பேசும் / குறுஞ்செய்தியாக அனுப்பும் நண்பர்களை உங்களிடம் அடையாளப்படுத்தச் சொல்வது போன்றவற்றையும் சொல்லிக்கொடுங்கள். ஆன்லைன் புல்லியிங் பற்றி சொல்லிக்கொடுப்பதற்கான மிகச் சரியான வயதும், இதுதான்.

13 - 18 வயது: இது டீனேஜ் வயது, ஹார்மோன் மாற்றங்கள் குறித்து பிள்ளைகளிடம் பேச வேண்டும். இந்த வயதில் வயது ஏற ஏற பாலியல் உறவு குறித்து, குழந்தை பிறப்பு குறித்து பேசிவிடவும். முன்பே சொன்னதுபோல, பேச தயக்கமெனில் புத்தகங்களை வைத்து பாடமாக சொல்லிக்கொடுக்கவும். ஆனால் எக்காரணம் கொண்டும் தவிர்க்க வேண்டாம். இன்றைய தேதிக்கு 11, 12-ம் வகுப்பு பிள்ளைகளின் உயிரியல் பாடத்தில் எல்லாமே உள்ளது. ஆகவே அதை அந்த வயதில் முறையாக சொல்லிக்கொடுக்கவும். பாதுகாப்பற்ற பாலியல் உறவால் ஏற்படும் நோய்ப் பாதிப்புகளையும் இந்த வயதில் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்கவும். அதற்கு முன் பாதுகாப்பான பாலியல் உறவென்றால் என்ன என்பதை சொல்லிக்கொடுக்கவும்.

இவற்றுடன், ஆன்லைன் புல்லியிங் - ஹார்மோன் மாற்றத்தால் ஏற்படும் எதிர்பாலினத்தின் மீது ஈர்ப்பு ஆகியவை குறித்தும் பேசவும். கட்டிப்பிடித்தல், முத்தம்கொடுத்தல் போன்றவையாவும் உன் அனுமதியின்றி நடக்கக்கூடாது என்றும் சொல்லிக்கொடுங்கள்.

ஆண் பெண் என்ற வேறுபாட்டை - ஏற்றத்தாழ்வுகளை போக்குவதற்கான மிகச்சரியான வயது இது. இந்த வயதில் பாலின பேதமின்றி வளரும் குழந்தை, நிச்சயம் வளர்ந்தபின் நல்ல சமூகத்தை உருவாக்குவர். ஆகவே அதிலும் கவனம் செலுத்தவும்.

குறிப்பு: நான் மேற்குறிப்பிட்டவற்றில் எந்த வயதில், எந்தச் சூழலில் எப்போது இதை குழந்தையிடம் சொன்னால் சரியாக இருக்கும் என்று பெற்றோருக்குத்தான் தெரியும். ஆகவே வயது சார்ந்த விஷயத்தில், சற்று முன் - பின் இருந்தாலும் தப்பில்லை. குழந்தை சரியாக புரிந்துக்கொள்கிறதா என்பதே விஷயம்.

பல பெற்றோருக்கு, 'அம்மா சொல்றதா - அப்பா சொல்றதா' என்ற தயக்கம் வருகிறது. என்னை கேட்டால், யார் சொன்னாலும் சரிதான்; ரெண்டே விஷயம்தான் - அந்நபர் குழந்தைக்கு நெருக்கமான, குழந்தை நம்பும் நபராக வேண்டும்; அந்நபருக்கு அதுபற்றி தெளிவாக தெரிந்திருக்க வேண்டும். உதாரணத்துக்கு மாதவிடாய் பற்றி தெரியாத தந்தை அதுபற்றி பேசுவது சரியாக இருக்காது. ஆனால் அவர்தான் குழந்தைக்கு நெருக்கமானவர் என்றால், அவர் அதுபற்றி தெரிந்துக்கொண்டு பேசவும். ஆண் குழந்தைக்கான பருவமடைதல் விஷயங்களிலும் இதுபோன்ற சிக்கல் இருக்கிறது. இவை இரண்டிலும் மட்டும் பெற்றோர் இருவரில் யார் சொன்னால் சரியாக இருக்குமென்பதை கவனத்தில் கொள்ளவும். மற்றபடி பாலியல் துன்புறுத்தல்கள் - பாலியல் கல்வி உள்ளிட்டவற்றையெல்லாம் குழந்தைக்கு யார் நெருக்கமாக இருக்கிறாரோ அவர் பேசுவதே சரியாக இருக்கும்.

பல பெற்றோரும், பாலியல் சார்ந்த விஷயத்தை குழந்தைகளிடம் பேசுவதில் தயக்கம் காட்டுகின்றனர். 'கண்ணை மூடிக்கொண்டால், உலகமே இருட்டாகிவிடும்' என்பதுபோல, பாலியல் சார்ந்த விஷயங்களை சொல்லாமல் இருந்தால், குற்றமெல்லாம் தடுக்கப்படும் என்று நினைப்பது மூடத்தனம். எப்படியும் ஏதோவொரு விதத்தில், ஏதோவொரு வகையில் குழந்தைக்கு அது தெரியத்தான் போகிறது. நமக்கும் நம் வாழ்வில் அப்படி தெரிந்ததுதானே!? எங்கோ, எப்படியோ சென்று தப்புத் தப்பாக அவர்கள் பாலியல் விஷயங்களை புரிந்துகொள்வதை விட; முறையாக வீட்டில் அவர்களுக்கு அதை சொல்லிக்கொடுத்து அவர்களுக்கு புரிதலை கொண்டுவருவதே சரி. மூடி மூடி வைத்தால்தான், அவர்களுக்கு அதுபற்றிய தேடல் அதிகமாகும். அந்தத் தேடல் அவர்களை தவறான பாதைக்கும் கொண்டு செல்லக்கூடும் என்பதால், பெற்றோரே மனம் திறந்து பாலியல் சார்ந்த விஷயங்களை பிள்ளைகளிடம் பேசிவிடவும்"

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com