நூலகங்கள் வெறும் தேர்வு மையங்களா.. தமிழகப் பள்ளிகளில் கட்டாயமாக்கப்படுமா நாளிதழ் வாசிப்பு?
தமிழகத்தில் ஒரு கோடியே இருபது லட்சம் மாணவர்கள் இருக்கிறார்கள்... கேட்கவே பெருமையாக இருக்கிறது அல்லவா? ஆனால், இந்தப் பெரும் பட்டாளம் இன்று எதைப் படித்துக் கொண்டிருக்கிறது? அரசு ஊர் ஊராகப் புத்தகத் திருவிழா நடத்துகிறது... புத்தக திருவிழாக்களுக்கு நிதியுதவி செய்கிறது. ஆனால், நிலைமை என்ன தெரியுமா? மேடைப் பேச்சைக் கேட்டு ரசிப்பவர்கள், புத்தக அலமாரிகளை எட்டிப் பார்க்கக்கூடத் தயங்குகிறார்கள். இது அறிவுத் தேடல் அல்ல... வெறும் பொழுதுபோக்குக் கூடாரமாக மாறி வருகிறதோ என்ற அச்சம் எழுகிறது. நூலகங்கள் இன்று அமைதியாகப் படிக்கும் இடமாக இல்லாமல், போட்டித் தேர்வுக்கு தயாராகும் மையங்களாகச் சுருங்கிப் போய்விட்டன.
உத்தரப் பிரதேசமும், ராஜஸ்தானும் ஒரு சத்தமில்லாத புரட்சியைச் செய்திருக்கின்றன. பள்ளிகளில் நாளிதழ் வாசிப்பை கட்டாயமாக்கிவிட்டார்கள். ஏன் இதைத் தமிழகம் செய்யக் கூடாது? ஆறாம் வகுப்பிலேயே ஒரு சிறுவன் செய்தித்தாள் படிக்க ஆரம்பித்தால், அவன் கைகளில் உலகம் வந்து அமரும். வெறும் பாடப்புத்தக அறிவு என்பது தேர்வுக்கானது; ஆனால் உலக அறிவுதான் ஒருவனைப் பேராற்றல் மிக்க வெற்றியாளனாக்கும். ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்து, நாளிதழ் வாசிப்பை ஒரு தவமாக மேற்கொண்டால், நம் வருங்காலத் தமிழகம் அறிவுச் சமூகமாக உலகை ஆளும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

