விவாகரத்து வழக்கு | ரூ.15,000 கோடி பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு.. சிக்கலில் ஸ்ரீதர் வேம்பு?
ஜோஹோ நிறுவனத்தின் சி.இ.ஓ. ஸ்ரீதர் வேம்பு விவாகரத்து வழக்கில், ஸ்ரீதர் வேம்புவை தனது மனைவியின் உரிமைகளை பாதுகாக்க 1.7 பில்லியன் டாலர் (ரூ. 15,278 கோடி) பத்திரம் (bond) தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.
உலகின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக ஜோஹோ (ZOHO) உள்ளது. இந்த நிறுவனத்தின் சி.இ.ஓவாக ஸ்ரீதர் வேம்பு உள்ளார். இவர், 1993ஆம் ஆண்டு பிரமிளா ஸ்ரீனிவாசனை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியருக்கு ஒரு மகன் உள்ளார். இந்தக் குடும்பம் கலிபோர்னியாவில் வசித்து வந்தபோது மனைவி பிரமிளாவை பிரிவதாக ஸ்ரீதர் வேம்பு அறிவித்தார்.இவர்களது விவாகரத்து வழக்கு கலிபோர்னியா நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இதனிடையே, ஸ்ரீதர் வேம்பு, ஆட்டிசம் குறைபாடு உடைய மகனையும், தன்னையும் 2020ஆம் ஆண்டு நிர்கதியாக விட்டுவிட்டு இந்தியா சென்றுவிட்டதாக அவரது மனைவி பிரமிளா குற்றஞ்சாட்டியிருந்தார். மேலும், கலிபோர்னியாவில் தன்னுடன் வாழ்ந்த காலத்திலேயே ஜோஹோ நிறுவனத்தில் அவர் பெயரில் இருந்த பங்குகள் மற்றும் அறிவுசார் சொத்துகளை தனக்கு தெரியாமலேயே அவரது சகோதரி, சகோதரியின் கணவர் பெயருக்கு மாற்றிவிட்டதாகவும், விவாகரத்துக்கு பிறகு தனக்கு சொத்தில் சரிபாதியை ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்ற நிலையை தவிர்க்வே ஸ்ரீதர் வேம்பு இவ்வாறு செய்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.
கலிபோர்னியாவில் சட்டப்படி, மனைவியின் ஒப்புதல் இல்லாமல் கணவர், சொத்துகளை விற்க முடியாது (கலிபோர்னியா சட்டப்படி, திருமணத்திற்கு பிறகு உருவான சொத்துகள் இருவரின் உரிமையாகப் பகிரப்பட வேண்டும் என்ற விதியின் படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது). அந்த வகையில், ஸ்ரீதர் வேம்பு விவாகரத்து வழக்கில் ஸ்ரீதர் வேம்புவை தனது மனைவியின் உரிமைகளை பாதுகாக்க 1.7 பில்லியன் டாலர் (ரூ. 15,278 கோடி) பத்திரம் (bond) தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், வேம்புவின் வழக்கறிஞர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வேம்புவின் வழக்கறிஞர் கிறிஸ்டோபர் சி மெல்ச்சர், "ஸ்ரீதர் தனது மனைவிக்கு ZCPL பங்குகளில் 50% பங்குகளை வழங்கினார். ஆனால் இன்றுவரை அவர் அந்தப் பங்கை ஏற்க மறுத்து வருகிறார். அதற்குப் பதிலாக, விவாகரத்தில் ஸ்ரீதர் தன்னை ஏமாற்ற முயற்சிப்பதாகக் கூறியுள்ளார். இது அர்த்தமற்றது. ஏனெனில், அவர் இப்போது தனது பங்குகளில் பாதியை எடுத்துக் கொள்ளலாம். மேலும் ஸ்ரீதர் ஏற்கெனவே குடும்ப சொத்தில் தனது பங்கை அவருக்கு மாற்றிவிட்டார். அவர் மில்லியன் கணக்கான டாலர் கட்டணங்களை வசூலித்துள்ளார். இதற்கும் ஜீவனாம்சத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஏனெனில் மனைவி ஆதரவுக்கான உத்தரவைக்கூட கோரவில்லை. $1.7 பில்லியன் பத்திர உத்தரவு செல்லாது, இணங்க முடியாது, மேலும் மேல்முறையீட்டில் உள்ளது" என அவர் தெரிவித்துள்ளார்.
2023ஆம் ஆண்டில் ஃபோர்ப்ஸ் வெளியிட்ட ஓர் அறிக்கையின்படி, பிரமிளா சீனிவாசன் ஆரம்ப ஆண்டுகளில் குடும்பத்தை ஆதரிக்க அவர் உழைத்துள்ளார். 2010ஆம் ஆண்டில், அவர் மெடிக்கல்மைன் என்ற நிறுவனத்தை நிறுவியுள்ளார். அதேநேரத்தில் ஆட்டிசம் பாதித்த அவரது மகனையும் கவனித்து வருகிறார். 2019ஆம் ஆண்டில், ஆட்டிசம் கண்டறியப்பட்டவர்களுக்கு ஆராய்ச்சி மற்றும் சிகிச்சையை ஆதரிப்பதற்காக, தி பிரைன் பவுண்டேஷன் என்ற இலாப நோக்கற்ற அமைப்பைத் தொடங்கி நடத்திவருகிறார்.

