கவனம் ஈர்க்கும் கேரளாவின் பாரம்பரிய கசவு சேலைகள்... ஆச்சர்யமளிக்கும் சிறப்பம்சங்கள்!
நம்மில் பலருக்கும் கேரளா என்றதும் நினைவுக்கு வருவது கதகளி, ஓனம், நேந்தரம்பழம், பலாப்பழம், உடன் கசவுசேலை... இதில் கசவு சேலைதான் தற்போதைய ட்ரெண்டிங். காரணம் என்ன? அந்த சேலையில் சிறப்பு என்ன? பார்க்கலாம்...
நம் எல்லோருக்குமே எப்பொழுதும் ஆடை அணிகலங்களின் மேல் அதீத விருப்பம் இருக்கும். ட்ரெண்டிங்கில் இருக்கும் புதுப்புது ஆடைகளை வாங்கி விரும்பி அணிந்துக்கொள்ள விருப்பம் இருக்கும். டிஜிட்டல் யுகத்தில், இது இன்னும் அதிகரித்துதான் உள்ளது. எங்கோ யாரோ ஒரு செலிபிரிட்டியோ அல்லது அரசியல் கட்சித் தலைவரோ வித்தியாசமாக ஒரு உடை அணிந்தால், அது ட்ரெண்டாகி பலரும் தேடும் விஷயமாகி விடுகிறது.
அப்படித்தான் கேரளாவின் கசவு புடவை வகை தற்போது ட்ரெண்டிங். காரணம், நேற்றைய தினம் வயநாடு நாடாளுமன்ற எம்.பி.யாக பதவியேற்ற பிரியங்கா காந்தி, தான் வெற்றிபெற்ற மண்ணின் பாரம்பரிய உடையான கசவு சேலையில் பதவியேற்றிருந்தார்.
கேரளாவும் கசவும்...
கேரள மக்கள் மட்டும் இன்றளவும் தங்களின் பாரம்பரியத்திலிருந்தும், பாரம்பரிய உடையிலிருந்தும் முழுமையாக மாற்றமடையாமல் இருக்கின்றனர். பல நூற்றாண்டுகளாக கேரளாவின் வரலாற்றில் வேரூன்றி இருக்கும் கசவு புடவை இன்றளவும் அங்கு ட்ரெண்டிங்தான். அதுவும் திருவிழாக்கள் மற்றும் திருமணங்களின் போது பெண்கள் விரும்பி அணியும் உடைகளில் ஒன்றாக கசவுசேலை இன்றும் இருக்கிறது. அதன் பின்னணி என்ன? கசவு என்ற பெயருக்கு என்ன காரணம்?
கசவில் அப்படியென்ன ஸ்பெஷல்?
கசவு என்று அழைக்கப்படும் தங்க பார்டர்தான் இந்த புடவைகளுக்கு கசவு சேலை என்ற பெயர் கொடுக்கிறது. கடந்த காலத்தில், கசவு சேலைகள் தங்கத்தால் நெய்யப்பட்டதாக கூறப்படுகிறது. பிற்காலத்தில், தங்கம் அரிதாகி, விலை உயர்ந்ததால், கைவினைஞர்கள் தங்கம் மற்றும் செம்பு பூசிய வெள்ளி நூல்களின் கலவையாக கசவை மாற்றினர். இருப்பினும் சேலைகளின் அடையாளமான தங்க நிறத்தை விடாமல், தக்கவைத்துக் கொண்டனர்.
இதன்மூலம் சாதி, மத, பொருளாதார வேறுபாடுகளுக்கு அப்பால், கேரள பெண்கள் அனைவரையும் ஒன்றிணைத்து அனைவரும் சமம் என்ற கூற்றை ஆழமாகப் பதிவு செய்கின்றன கசவு சேலைகள். அனைத்து தரப்பு பெண்களும் பண்டிகைகளின் போது இந்த பாரம்பரிய உடையை அணிந்து, ஒற்றுமை உணர்வை வளர்க்கின்றனர். மேலும் இந்த சேலை சிறப்பு நெசவு நுட்பத்தை உள்ளடக்கியுள்ளது.
அதனால் ஓணத்தின்போது இந்த கசவு புடவையை அணிவதன் மூலம் செழிப்பு, வளர்ச்சி போன்றவை குடும்பத்தில் ஏற்படும் என்பது அம்மக்களின் நம்பிக்கையாக உள்ளதால் ஓணத்தின் சிறப்பாக இந்த வகை உடை மாறியுள்ளது. இன்றளவும்கூட கேரளாவின் சேந்தமங்கலம், குத்தாம்புள்ளி, பாலராமபுரம் போன்ற பகுதிகளில் தங்க ஜரிகையில் இவ்வகை புடவைகள் தயாரிக்கப்படுகிறதாம். அதற்காக, இப்பகுதிகளுக்கு புவிசார் குறியீடும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனால் இந்த சேலை கேரளா மட்டுமின்றி அண்டை மாநிலமான தமிழ்நாடு மற்றும் கர்நாடகா பகுதிகளிலும் விரும்பி உடுத்தும் உடையாக மாறியுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், கேரளாவின் கைத்தறி பாரம்பரியத்தின் சாரத்தை வெளிப்படுத்தும் இந்த சேலையின் எளிமையே அதை உண்மையில் சிறப்பானதாக மாற்றுகிறது.