இளையோர் மொழிக்களம் 35 | தமிழ்க்கனவு நனவாகும் காலம் வரும்..!

எழுத்தாளர் , கவிஞர் மகுடேசுவரன் எழுதும் புதிய தொடர் - இளையோர் மொழிக்களம் பாகம் 35
இளையோர் மொழிக்களம்
இளையோர் மொழிக்களம்இளையோர் மொழிக்களம்

சென்னை வெள்ளக் காணொளிகளில் மக்கள் பேசிய பேச்சினைக் கேட்டபோது ஒன்று உறுதிப்பட்டது. மக்கள் இன்றைக்கும் நல்ல தமிழில்தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள். குறிப்பாகப் பெண்களின் மொழியில் தமிழே முதன்மையாக விளங்குகிறது. அவர்களுடைய பேச்சில் ஆங்கிலக் கலப்பினை அரிதாகத்தான் கேட்க முடிந்தது. ‘மழை மழை’ என்று சொன்னார்களே தவிர, ‘ரெயின்’ என்று யாரும் சொல்லவில்லை. ‘தண்ணீர் தண்ணீர்’ என்றார்களே தவிர, ‘வாட்டர்’ என்று சொல்லிக் கேட்கவில்லை. தமிழில் ஆங்கிலச் சொல்கலந்து பாழ்படுத்திக்கொண்டிருக்கிறது என்று நாம் பதைப்புறும் வேளையில் மக்களிடையே இம்மொழி செம்மாந்து உலவுகிறது. ஒருவேளை துன்பம் நேர்கையில் யாழெடுத்து மீட்டுவதைப்போல் தமிழில் வெளிப்பட்ட பேச்சோ அது என்று ஐயுறத் தேவையில்லை. அவர்களுடைய மொழியில் எந்தச் செயற்கையுமில்லை. உள்ளத்திலிருந்து பேசினார்கள். தம் பாடுரைத்தலில் வெளிப்பட்ட மொழியில்தான் எத்துணை உயிர்ப்பு ! அதனை முழுமையாகக் காண வாய்த்தது.

இளையோர் மொழிக்களம்
இளையோர் மொழிக்களம் 33 | மொழியை நோக்கித் திரும்புவோம்!

பெண்கள்தாம் அவ்வாறு தமிழில் பேசுகிறார்கள் என்று முடிவு கட்டிவிடக்கூடாது. இளைஞர்களும் மேம்பட்ட நம்பிக்கையைத் தந்தனர். முன்னிருந்த நிலைமையைக் காட்டிலும் இளைஞர்களின் பேச்சில் தமிழ்ச்சொற்கள் மழையாகப் பொழிகின்றன. பேரளவில் தமிழில் கலந்துவிட்ட ஆங்கிலச் சொற்றொடர்கள் காணாமல் போய்விட்டன. ‘மீட்பு நடவடிக்கை’ என்கிறார்கள். ‘இடுப்பளவுத் தண்ணீர், கழுத்தளவுத் தண்ணீர்’ என்கிறார்கள். ‘பால் தட்டுப்பாடு’ என்கிறார்கள். ‘விடிவுகாலம் எப்போது’ என்கிறார்கள். இளைஞர்களிடையே தமிழ்ச்சொல்லாட்சி மெல்லப் பரவியிருப்பதை உணர முடிந்தது. அவர்களுடைய தொழில்நுட்பப் பணிச்சூழலுக்கு ஏற்ப நிறையவே ஆங்கிலத்தில் பேசியிருக்க முடியும். அவ்வாறு செய்யவில்லை. நன்றாகவும் தங்குதடையின்றியும் தயக்கமின்றியும் தமிழில் பேசினார்கள். ஒருவேளை இன்னொரு மொழியைத் தமிழ்வழியாகவே கற்ற முயற்சியில் தமிழும் மேம்பட்டுவிட்டதோ, என்னவோ ! நகைச்சுவைக்கு அப்பால், இந்தப் போக்கு இனிமையானது. எண்ணி மகிழத்தக்கது. இவற்றின் பின்னே, தமிழை எப்படியாகிலும் புகுத்த முயன்ற தமிழுணர்வு மிக்க ஆர்வலர்கள் ஒவ்வொருவரும் தொடர்ந்து பணியாற்றியிருக்கிறார்கள். அவர்களை இந்நேரத்தில் வணங்குதும்.

இந்தப் போக்கினைச் சிந்தாமல் சிதறாமல் சிறிது சிறிதாக வளர்த்தெடுக்கவேண்டும். தென்படும் இடங்களிலெல்லாம் தேமதுரத் தமிழோசை முழங்கச் செய்யவேண்டும். இதனால் விளையும் ஆக்கங்களையும் அருநிலைகளையும் முன்பே கூறிவிட்டோம். இனியும் காலந்தாழ்ந்தாது விரைந்து செயலாற்றத் தொடங்கவேண்டும். மக்களிடையே தமிழ்ப்பேச்சு பரவலாகட்டும். எழுதுவதும் குறிப்பதும் கூறுவதும் தமிழாகவே விளங்கட்டும்.

இளையோர் மொழிக்களம்
இளையோர் மொழிக்களம் 28 | திருவண்ணாமலை என்ற பெயர் எப்படி வந்தது?

இங்கே தமிழ்வழிக் கல்வி இல்லை, தனியார் பள்ளிகளில் தமிழுக்குத் தாழ்நிலை, அரசுப் பள்ளிகள் கல்லூரிகளிலும் தமிழ் பெற்றிருக்குமிடம் உவப்பாக இல்லை, உயர்கல்விப்புலங்களில் தமிழில்லை, தமிழை ஊட்டினாலும் புகட்டினாலும் ஏற்பாரில்லை – என எதிர்மறையான நிலைமைகளைக்கண்டு தேங்கி நிற்காமல் ஆகவேண்டியதைச் செய்வதற்குரிய வாய்ப்புகளைக் கருதுவோம். ஆங்கிலத்தின்மீதான பெருவிருப்பம் தற்காலத்தில் குறைந்துள்ளது. தமிழ்சார்ந்து நிகழும் எல்லாவற்றின்மீதும் பேருணர்ச்சி பொங்குகிறது. இதனை நாம் கண்கூடாகக் காண்கிறோம். நாம் எல்லாரும் தொடர்ந்து பங்களித்து நிலைநிறுத்தினால் இந்தப் போக்கு பெரும்போக்காக மாறிவிடும். பிறகு நடைமுறைக்கு ஏற்ப அனைத்து மாற்றங்களும் ஏற்பட்டே ஆகவேண்டும்.

ஊடகர்களும் திரைப்படத்துறையினரும் தொலைக்காட்சி நிகழ்ச்சியாளர்களும் இணையவழிச் செயல்பாட்டாளர்களும் உணர்வுள்ள அரசு மட்டத்தினரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் ‘எங்கும் தமிழ் எதிலும் தமிழ்’ என்கின்ற கனவினை விரைந்து நனவாக்கலாம். இஃதொன்றும் நிறைவேற்ற முடியாத பெருஙகனவன்று. கையிலிருந்து நழுவிப்போன பிடியை மீண்டும் பிடிப்பதைப்போன்ற மீட்பு முயற்சியே. நெடுங்கால நிலைப்பின்மீது நிகழும் வீழ்ச்சிகள் அனைத்தும் சரியாகி மீண்டும் இயல்புநிலை திரும்பும் என்பதுதானே இயற்கை ?

இளையோர் மொழிக்களம்
இளையோர் மொழிக்களம் பகுதி 19 - செம்மி ஜிம்மி ஆனது எப்படி?

இளைய தலைமுறையினர் எத்தகைய மனப்பாங்கோடு திகழ்கிறாரக்ளோ அதனைப் பொறுத்தே யாவும் நகரும். உணர்வு சார்ந்து ஒன்றின்மீது பற்றோடு திகழ்வதில் இளங்குருதிக்கே முதலிடம். மொழியை மீட்டெடுப்பதிலும் நிலைக்கச் செய்வதிலும் அவர்களே முன்னணியினராகச் செயல்படவேண்டும். இருமொழியிலும் திறன்பட வாழும் வாழ்க்கை அமையப் பெறினும் தமிழினை இயன்றவிடங்களெல்லாம் உயர்த்திப் பிடிக்கவேண்டும். தமிழ்சார்ந்த முன்னெடுப்புகள் தொடர்ந்து நிகழுமாறு எவ்விடத்திலும் விழிப்போடு நிற்கவேண்டும். இந்நோக்கினின்று சிறிதும் வழுவக்கூடாது. “இங்கே ஏன் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள் ? ஏன் தமிழில் எழுதவில்லை ? இங்கே தமிழ் புறக்கணிக்கப்பட்டது ஏன் ? தமிழிலும் எழுதுங்கள். தேவையுள்ளதெனில் ஆங்கிலத்தை அடியில் எழுதுங்கள்” என்று அஞ்சாது குரலெழுப்ப வேண்டும். அந்தக் கேள்விதான் எதிர்த்தரப்பு அடையவேண்டிய அச்சம். என்னதான் முரட்டுப் பிடிவாதக்காரராயினும் இக்கேள்விகள் தொடர்ந்து எழுப்பப்படும்போது அஞ்சத் தொடங்குவார். தமிழின் இடத்தைத் தர இறங்கி வருவார். ஒரு நிகழ்ச்சியா ? தமிழ்த்தாய் வாழ்த்தினைப் பாடாமல் தொடங்குகிறார்களா ? ஏன் பாடவில்லை என்று கேட்டுவிடுங்கள். அதற்கும் முன்னதாக வாய்ப்பிருந்தால் தமிழ்த்தாய் வாழ்த்தோடு தொடங்குவோமே என்று தெரிவித்துவிடுங்கள். ஒருவர் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருந்தால் ‘தமிழில் பேசுங்கள்’ என்று இடைப்படுங்கள். யாரேனும் எண் கேட்டால் தமிழில் எண்களைச் சொல்லுங்கள். தமிழில் கைப்பேசி எண்களைச் சொல்லப் பழகுங்கள். ஏதேனும் எழுதித் தர நேர்ந்தால் தமிழில் எழுதுங்கள். உங்களுடைய குறிப்புகளையும் தமிழில் எழுதுங்கள். கைப்பேசிச் செயலிகளில் மொழித்தேர்வு வாய்ப்பு இருந்தால் தமிழைத் தேர்ந்தெடுங்கள். தானியங்கி அழைப்புகளில் தமிழைத் தேர்வு செய்யுங்கள். எங்கும் எவற்றிலும் தமிழை முன்னிறுத்துங்கள். எல்லாம் தமிழே என்கின்ற பொற்காலம் விரைந்து வரும் ! அதனை நோக்காகக்கொண்டு நடப்போம் !

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com