பெங்களூர் போறீங்களா?.. அப்போ கண்டிப்பாக இந்த 5 இடங்களை மிஸ் பண்ணிடாதீங்க..!
சென்னைக்கு அடுத்து மிகபிரபலமான இடம் என்றால் அது பெங்களுருதான். கர்நாடகாவின் தலைநகரான பெங்களூரு, தென்னிந்தியாவின் மிகவும் முக்கியமான நகரங்களில் ஒன்றாகும். அங்கு உள்ள சுற்றுலா தலங்களை பார்க்க நம் இரு கண்கள் போதாது.. அதிலும் இந்த 5 இடங்கள் மிகவும் பிரபலமானவை. கண்டிப்பாக குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் பிடிக்கும். மேலும் இங்குள்ள சிலிக்கான் பள்ளத்தாக்கு முதல், கட்டிடக்கலை, பூங்காக்கள் வரை அனைத்தும் இந்த நகரத்தின் அழகை வெளிப்படுத்தும். அதில் மிக முக்கியமாக பெங்குளுருவில் நீங்கள் தவறவிடக்கூடாத 5 பிரபலமான இடங்கள் உள்ளது. அது என்னென்ன இடம்? என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..
பன்னேர்கட்டா தேசிய பூங்கா
இந்த பூங்காவில் பலவிதமான தாவரங்கள் மற்றும் உயிரினங்கள் உள்ளன.. இது பெங்களூருவிலிருந்து 22 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த இடத்தில் ஒரு மீன்வளம், ஒரு மிருகக்காட்சிசாலை, ஒரு குழந்தைகள் பூங்கா, ஒரு முதலை பண்ணை, ஒரு பாம்பு பண்ணை மற்றும் வரலாற்றுக்கு முந்தைய விலங்குகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பூங்கா என தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சென்றால் இவை அனைத்தையும் பார்ப்பதற்கு ஒருநாள் முழுதாகிவிடும்.. மேலும் நடப்பதற்கு முடியாதவர்கள் குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கும் ஏற்ப பட்டரி வாகனங்களும் இங்கு உள்ளன.. மேலும் ட்ரெக்கிங் செய்ய இது சிறந்த இடமாக இருக்கிறது.
நந்தி கோயில்
பெங்களூரில் உள்ள மிகவும் பிரபலமான கோயில்களில் ஒன்றுதான் இந்த நந்தி கோயில். இது வரலாற்று சிறப்புமிக்க கோயில்களில் ஒன்றாகும். இது சிவபெருமானின் வாகனமான நந்திக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இங்கு உள்ள நந்தி சிலை 4.5 மீட்டர் உயரமும் 6 மீட்டர் அகலமும் கொண்டது. இந்த சிலையை செதுக்க ஒற்றை கிரானைட் பாறை பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பெங்களூரை உருவாக்கிய கெம்பே கவுடா I அவர்களால், இந்த கோயில் திராவிட கட்டிடக்கலையை போன்றே கட்டப்பட்டது. கட்டிடக்கலை மற்றும் வரலாற்றை விரும்புவோருக்கு இந்த கோயில் ரொம்ப பிடிக்கும்.
பெங்களூரு அரண்மனை
பெங்குளுருவில் பார்க்க வேண்டிய மற்றொரு இடம், பெங்களூரு அரண்மனை. இந்த அரண்மனை இங்கிலாந்தின் விண்ட்ஸர் கேஸ்டலை போன்றே கட்டப்பட்டது. இந்த அற்புதமான இடம் அதன் கட்டிடக்கலைக்கு பெயர் பெற்றது, இது உள்ளேயும் வெளியேயும் நேர்த்தியான சிற்பங்களைக் கொண்டுள்ளது. இது பெங்களூரில் உள்ள சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். இந்த அரண்மனை அதிநவீன டியூடர் பாணி மற்றும் கோதிக் கட்டிடக்கலையின் சரியான கலவையைக் கொண்டுள்ளது. இந்த அரண்மனை மைசூர் அரச குடும்பத்திற்கு சொந்தமானது.
இஸ்கான் கோயில்
பெங்ளுரில் உள்ள சோர்ட் சாலையின் மேற்கே "ஹரே கிருஷ்ணா” குன்றில் அமைந்துள்ளது இந்த இஸ்கான் கோயில். இந்த கோயில் அதன் கட்டிடக்கலை மற்றும் மத முக்கியத்துத்திற்கு பெயர் பெற்றது. இந்த அழகிய கோயில் கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது நியோ-கிளாசிக்கல் பாணியில் கட்டப்பட்ட கோயிலாகும். இது அதி நவீன மற்றும் பாரம்பரிய வடிவமைப்பின் அழகான கலவையைக் காட்டுகிறது, மேலும் இது அனைத்து வகையான சமகால வசதிகளையும் கொண்டுள்ளது.
நந்தி மலை
நந்தி மலைகள் பெங்களூருவைச் சுற்றியுள்ள ஒரு மிகச்சிறந்த இடமாகும். நகரத்திலிருந்து 60 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த மலை, கிரானைட் ஒற்றைக்கல்லின் பாறையை போன்றே அற்புதமாக காட்சியளிக்கிறது. மேலும் சுற்றுலாப் பயணிககளை கவரும் விதமாக இங்கு, அற்புதமாக செதுக்கப்பட்ட வளைவுகள், வர்ணம் பூசப்பட்ட சுவர்கள் மற்றும் கூரைகளுடன் கூடிய கம்பீரமான தூண்கள் இருக்கிறது.. நந்தி மலைகள் கண்களை கவரும் காட்சிகளால் சூழப்பட்டுள்ளன. இந்த இடம் டிரெக்கிங், பாரா கிளைடிங் மற்றும் மலை ஏறுதல் போன்வற்றிற்கு சிறந்த இடமாகும்.