டார்க் சாக்லேட் சுவை மீதான இந்தியர்களின் ஈர்ப்பு.. காரணம் என்ன?
சாக்கலேட் என்றாலே, நாவில் எச்சில் ஊறவைக்கும் அதன் இனிப்பு சுவைதான் நம் நினைவுக்கு வரும்... ஆனால், டார்க் சாக்கலேட் எனப்படும் கசப்புத்தன்மை கொண்ட சாக்கலேட்டின் பக்கம் இந்தியர்களின் கவனம் மெல்லத் திரும்பியிருக்கிறது. இதைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்...
அதென்ன டார்க் சாக்கலேட்? பொதுவாக 50 சதவீதத்துக்கும் அதிகமான கொக்கோ உள்ளடக்கம் கொண்ட சாக்லேட்டுகளே டார்க் சாக்லேட் என வரையறுக்கப்படுகின்றன. அதாவது 50% மட்டுமே இனிப்பு.. மீதம் 50% கொக்கோவின் கசப்பு சுவை.. இந்தியாவின் மொத்த சாக்லேட் சந்தை மதிப்பு 15 ஆயிரம் கோடி ரூபாய். இதில் டார்க் சாக்லேட் 6 சதவீத பங்களிப்பைக் கொண்டுள்ளது. என்னதான் பங்களிப்பு குறைவு என்றாலும், அதன் வளர்ச்சி விகிதம் அதிகரித்து வருகிறது.
பிற சாக்லேட்களை விடவும் டார்க் சாக்லேட் 3.8 மடங்கு அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. சாதாரண சாக்லேட்டுகளுடன் ஒப்பிடும்போது இதன் விலை கிலோவுக்கு ஒன்றரை மடங்கு அதிகமாக உள்ளது. வேர்ல்ட்பேனல் பை ந்யூமரேட்டர் வெளியிட்ட தரவுகளின்படி, இந்தியாவில் டார்க் சாக்லேட்களை வாங்கும் குடும்பத்தினர் எண்ணிக்கை கடந்த ஓராண்டில் 45 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதில் 87% பேர் நகர்ப்புறத்தைச் சேர்ந்தவர்கள். இ காமர்ஸ் வணிக தளங்கள் இந்த விற்பனை வளர்ச்சிக்கு மிக முக்கியமான காரணியாக உருவெடுத்துள்ளன. டார்க் சாக்லேட் விருப்பம் இந்திய கிராமங்களில் போதுமான அளவு பரவவில்லை. இந்தியாவில் டார்க் சாக்லேட் வாங்குவோர் எண்ணிக்கை 2023ஆம் ஆண்டில் 20.7 சதவீதமாக இருந்தது. 2024ஆம் ஆண்டில் 28.2 சதவீதமாக உயர்ந்தது.

