7 மணி நேரத்திற்கு குறைவாக உறங்குகிறீர்களா? எச்சரிக்கும் மருத்துவர்கள்!
7 மணி நேரத்திற்கு குறைவாக உறங்கினால் பல்வேறு பிரச்னைகள் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்..
பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும், பெற்றோர்களை நல்ல நிலைமையில் பார்த்துக்கொள்ள வேண்டும், குழந்தைகளுக்கு நல்ல கல்வி கொடுக்க வேண்டும், ஏற்பட்ட அவமானங்களுக்கெல்லாம் நல்ல நிலைமைக்கு சென்று அமரவேண்டும் என பல்வேறு லட்சியங்களுடன் நவீனகால வாழ்க்கையானது எல்லோருக்கும் ஒரு போராட்டக் களமாகவே இருந்துவருகிறது..
மிகவேகமாக நகரும் உலகில் தங்களுடைய இலக்கை நோக்கி ஓடும் மனிதர்கள் இயந்திரங்களாகவே மாறிவிடுகின்றனர். அவர்களில் பாதிக்கும் மேலானோர்களுக்கு நிறைவான உறக்கம் என்பது சொற்பமாகவே கிடைக்கும்நிலை இருக்கிறது.
இப்படியான சூழல் இருக்கும் நிலையில், ஒவ்வொரு மனிதருக்கும் நிறைவான உறக்கம் வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.. குறைந்தபட்சம் மனிதனுக்கு 7 மணிநேரம் உறக்கம் கட்டாயம் என்றும், அப்படி இல்லை என்றால் பல்வேறு பிரச்னைகள் வரும் என்றும் எச்சரிக்கின்றனர்.
7 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குவது அபாயகரமானது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். குறைவாக தூங்குவது, இதய நோய்கள், பக்கவாதம் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கும் எனவும், நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகரிப்பதாகவும் தெரிவிக்கின்றனர். எடை அதிகரிப்பு, நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைதல், மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்சினைகளும் ஏற்படுமென, மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதனால் ஒவ்வொரு மனிதனும் குறைந்தது 7 மணிநேர உறக்கத்தையாவது உறுதிசெய்யவேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

