நீக்கப்பட்ட படங்கள்.. மனைவியைப் பிரிகிறாரா சாஹல்? நடந்தது என்ன?
பிரபல கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் யுஸ்வேந்திர சாஹல். ஐபிஎல் தொடர்களில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இவரை, பஞ்சாப் அணி சமீபத்தில் நடைபெற்ற மெகா ஏலத்தில் ரூ.18 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.
இந்த நிலையில், சாஹலுக்கும் அவருடைய மனைவியும் மருத்துவர் மற்றும் நடன இயக்குநருமான தனஸ்ரீக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது. இவருக்கும் சாஹலுக்கும் கடந்த 2020ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில், இருவரும் தங்களுடைய சமூக வலைதளப் பக்கங்களில் ஒருவரையொருவர் பின்தொடரவில்லை எனக் கூறப்படுகிறது. குறிப்பாக, சாஹல் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் தனஸ்ரீயுடன் இருக்கும் படங்களை நீக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், தனஸ்ரீ சாஹலுடன் இருக்கும் படங்களை (தற்போதுவரை) நீக்கவில்லை. அதேநேரத்தில், அவரைப் பின்தொடர்வதை நிறுத்தியுள்ளார். இதையடுத்து இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாகத் தகவல்கள் பரவி வருகின்றன.
2023-ஆம் ஆண்டிலேயே சாஹலின் பெயரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து தனஸ்ரீ நீக்கியிருந்தார். இதையடுத்து, கடந்த காலங்களிலேயே இவர்களுடைய விவாகரத்து பற்றிய வதந்திகள் வைரலாகின. அப்போது பதிலளித்த சாஹல், இதை மறுத்துப் பேசினார். மேலும் தனஸ்ரீயுடனான தனது உறவு குறித்து வதந்திகளை நம்பவோ அல்லது பரப்பவோ வேண்டாம் என்று தனது ரசிகர்களை கேட்டுக் கொண்டார்.
இந்த நிலையில் சாஹல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "புதிய வாழ்க்கை லோடிங்" என்று சில மாதங்களுக்கு முன் பதிவிட்டார். இதைத் தொடர்ந்தே அவர்கள் இருவரும் தற்போது இன்ஸ்டாகிராமில் பின்தொடர்வதை நிறுத்தியுள்ளனர்.
இருப்பினும், ஹர்திக் பாண்டியா - நடாஷா போல அதிகாரப்பூர்வமாக அறிவித்த பிறகே இதனை உறுதி செய்ய முடியும்.
இவ்விவகாரம் குறித்து அத்தம்பதியினருக்கு நெருக்கமான ஒருவர், “விவாகரத்து தவிர்க்க முடியாதது. அது அதிகாரப்பூர்வமாக மாறுவதற்கு சிறிது நேரம் ஆகும். அவர்கள் பிரிந்ததற்கான சரியான காரணங்கள் இன்னும் தெரியவில்லை. ஆனால் தம்பதியினர் தங்கள் வாழ்க்கையை தனித்தனியாக தொடர முடிவு செய்திருப்பது தெளிவாகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
யார் இந்த தனஸ்ரீ வர்மா?
தனஸ்ரீ வர்மா செப்டம்பர் 27, 1996 அன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள துபாயில் பிறந்தவர். பல் மருத்துவரான அவர், 2014ஆம் ஆண்டு முதல் மும்பையில் ஒரு மருத்துவமனையில் பணிபுரிந்தார். பணியின்போதே, நடனத்திலும் ஈடுபட்டு வந்தார். தொடர்ந்து, தனது யூடியூப் சேனைல் நடன வீடியோக்களையும் பதிவேற்றினார். அவர் தனது நடனத்தால் விரைவிலேயே பிரபலமடைந்தார். தற்போது தனஸ்ரீயின் யூடியூப் சேனலில் 2.79 மில்லியன் சந்தாதாரர்கள் உள்ளனர். அவரது இன்ஸ்டாகிராம் கைப்பிடியில் 6.2 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் உள்ளனர். இதன்மூலம் அவரது நிகர வருமானம் 3 மில்லியன் டாலர்களாக (தோராயமாக ரூ. 24 கோடி) உள்ளது. பிரபல நடன ரியாலிட்டி ஷோவான ஜலக் திக்லா ஜா 11இல் பங்கேற்றதன் மூலம் தனஸ்ரீ தனது தொலைக்காட்சியில் பிரபலமானார். இதைத் தொடர்ந்து தற்போது படங்களிலும் நடித்து வருகிறார்.