கும்பமேளா|”உலக இன்பங்களை எல்லாம் அனுபவித்துவிட்டு..” துறவறம் ஏற்ற பாலிவுட் நடிகை.. ராம்தேவ் கண்டனம்!
உலகின் மிகப்பெரிய பொதுமக்கள் கூடும் நிகழ்வான, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக் ராஜில், கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கியது. 40 நாட்கள் நடைபெற இருக்கும் இந்த நிகழ்விற்கு, 3 நதிகள் சங்கமிக்கும் இந்த திரிவேணி சங்கமத்தில், உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் படையெடுத்தவண்ணம் உள்ளனர்.
இதுவரை 15 கோடிப் பேர் வந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, நாளை (ஜன.29) தை அமாவாசையை முன்னிட்டு, இதன் எண்ணிக்கை அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. முன்னதாக, விமானம் மற்றும் ரயில் சேவைகளில் கூட்டம் அலைமோதுகிறது. தவிர, விமானங்களில் கட்டணம் பன்மடங்கு உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், பாலிவுட் நடிகை மம்தா குல்கர்னி, மகா கும்பமேளாவில் துறவறம் ஏற்றது குறித்து யோகா குரு ராம்தேவ் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர், “இதுநாள் வரை உலக இன்பங்களை எல்லாம் அனுபவித்தவர்கள், திடீரென ஒரே நாளில் துறவிகளாக மாறிவிட்டார்கள். மகா மண்டலேஸ்வர் பட்டமும் பெற்றுவிட்டார்கள். துறவறம் ஆவதற்கு பல ஆண்டுகள் ஆன்மிகம் குறித்து கற்றுக்கொள்ள வேண்டும். ஒரே நாளில் யாரும் புனிதராக முடியாது. ஜனநாயகத்தின் மாபெரும் கொண்டாட்டம் தான் கும்பமேளா. இது ஒரு புனிதமான பண்டிகையாகும். சிலர், அநாகரிகம், போதை மற்றும் தகாத நடத்தையுடன் தொடர்பு படுத்துகிறார்கள். இது நிகழ்ச்சியின் உண்மையான சாராம்சம் அல்ல” எனத் தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டின் பிரபல நடிகைகளில் ஒருவராக திகழ்ந்த மம்தா குல்கர்னி, 1990இல், 'கரண் அர்ஜுன்' மற்றும் 'பாஜி' போன்ற வெற்றிப் படங்களின் மூலம் புகழ் பெற்றார். 2000ஆம் ஆண்டின் தொடக்கத்தில், அவர் தொழில்துறையை விட்டு வெளியேறி வெளிநாட்டிற்குச் சென்றார். இந்த நிலையில் சமீபத்தில் இந்தியா திரும்பிய அவர், ஜனவரி 24 அன்று மகா கும்பமேளாவில் கலந்துகொண்டார். அத்துடன், துறவற வாழ்வையும் ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து தன் பெயரையும் மாற்றிக்கொண்டார்.
அது மட்டுமின்றி, ஒரு குறிப்பிட்ட அகாராவின் மகா மண்டலேஸ்வர் பதவியும் அவருக்கு வழங்கப்பட்டது. இவை அனைத்தும் அகாடாவின் தலைவர் மகரிஷி ஆச்சாரியா லஷ்மி நாராயண் திரிபாதி முன்னிலையில் செய்துவைக்கப்பட்டது. பின்னர் பேசிய மம்தா, “கின்னர் அகாடாவின் மதுரா முகாமில் தங்கி இந்துமதத்தை வளர்க்க பிரசாரம் செய்ய விரும்புகிறேன்” எனத் தெரிவித்தார். அதேநேரத்தில் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதற்கு, மகா மண்டலேஷ்வருமான ஹிமான்ஷி சக்கி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.