பாலிவுட் ஸ்டார் to துறவறம்| கும்பமேளாவில் முன்னாள் பாலிவுட் நடிகை எடுத்த புது அவதாரம்!
1990 களில் மிகவும் பிரபலமான நடியாக இருந்தவர் மம்தா குல்கர்னி.. வெளிநாட்டில் தஞ்சம் புகுந்த இவர், 25 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த மாதம் இந்தியா திரும்பினார். இதுக்குறித்து தனது சமூக வலைதளப்பக்கத்திலும் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில்தான், உத்தரப்பிரதேசத்தில் நடைபெறும் மகா கும்பமேளாவில் கலந்து கொண்ட இவர், கின்னார் ஜுனா அகாரா மடத்தில் தன்னை சந்நியாசியாக கடந்த 24 ஆம் தேதி இணைத்து கொண்டார்.
இதன் காரணமாக, மகா கும்பமேளாவின் செக்டர் 16-ல் உள்ள கின்னர் அகாடாவிற்கு வந்தா இவர், ஆசாரியா மகாமண்டலேஷ்வர் மற்றும் டாக்டர். லட்சுமி நாராயண் ஆகியோரைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டதாகவும், அங்கு இறந்தவர்களுக்கு செய்யப்படும் பிண்ட தானமும் இவர் தனக்குதானே செய்துகொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து, மம்தா குல்கர்னிக்கு ’ஷியாமாய் மம்தாணந்த் கிரி’ எனப் புதிய பெயரிடப்பட்டது. தொடர்ந்து திரிவேணி சங்கமத்தில் புனிதக் குளியலை முடித்தநிலையில், மகா மண்டலேஷ்வர் பதவி அளிக்கும் முறைகள் துவங்கின. இந்த நிகழ்வு மாலை முடிந்த பின் ருத்ராட்ச மாலைகள் அணிந்து காவி உடையில் மம்தா செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் தெரிவிக்கையில், “ இதற்குமேல் என் வாழ்க்கையில் நான் என்ன கேட்க முடியும்? ..இது எனக்கு கிடைத்த பெரிய கவுரவம். இது எனது திடீர் முடிவல்ல... கடந்த 2000 ஆம் ஆண்டிலேயே சுவாமி சைதன்ய ககன்கிரியிடம் தீஷை எடுத்து அவரை எனது குருவாக ஏற்றுக்கொண்டேன். அப்போதிருந்து, எனது துறவறப்பயணம் தொடங்கியது. இன்று, பல ஆண்டுகளுக்குப் பிறகு, நான் இறுதியாக ஒரு சந்நியாசியாக மாறி இருக்கிறேன்.
காளி மாதா கட்டளையிட்டபடி எனது புதிய குருவாக கின்னர் அகாடாவின் தலைவர் லஷ்மி நாராயண் திரிபாதியை ஏற்றுள்ளேன்.” என்று பேசியிருக்கிறார்.
யார் இந்த மம்தா குல்கர்னி?
பாலிவுட்டில் 1990களில் மிகவும் பிரபலமாக விளங்கியவர் மம்தா குல்கர்னி, நடிப்பிலிருந்து விலகி தென்னாப்பிரிக்காவில் விக்கி கோஷ்வாமி என்பவருடன் வாழ்ந்து வந்தார். இருவரும் திருமணம் செய்து கொண்டதாகச் செய்திகள் வெளியானது.
பிறகு, விக்கி கோஷ்வாமி போதைப்பொருள் கடத்தும் தொழில் செய்து வருவதாகவும் சொல்லப்பட்டநிலையில், மகாராஷ்டிராவில் 2016 ஆம் ஆண்டு 2 ஆயிரம் கோடி போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் மம்தா குல்கர்னியின் பெயரும் சேர்க்கப்பட்டது.
ஆனால், இதிலிருந்து தன்னை விடுவிக்கும்படி, மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். பிறகு அதிலிருந்து அவருக்கு விலக்கும் அளிக்கப்பட்டது. பிறகு வெளிநாட்டிலேயே இருந்த இவர், கடந்த 2012 ஆம் ஆண்டு கும்பமேளாவிற்கு வந்திருந்தார். அப்போது தனக்கு ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு உண்டு என்று தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், தற்போது சந்நியாசியாகவே மாறி இருக்கிறார். குறிப்பாக, பாலிவுட்டின் துறவறம் மேற்கொண்ட முதல் நடிகையாகவும் தற்போது மம்தா கருதப்படுகிறார். மம்தா குல்கர்னியான இவர், மம்தா குல்கர்னி மகாமண்டலேஷ்வராகா மாறி இருக்கிறார்.