நேற்று அபிஷேக் பானர்ஜி; இன்று கல்யாண் பானர்ஜி.. TMC தலைவர்கள் மீது தொடரும் தாக்குதல்!
மேற்கு வங்கத்தில் திரிணமூல் ஆட்சி முடிந்து பாஜக அரசு அமைந்த பின்னர், தேர்தல் பிந்தைய வன்முறை தீவிரமடைந்துள்ளது. திரிணமூல் பொதுச் செயலர் அபிஷேக் பானர்ஜி மீது நடந்த தாக்குதலைத் தொடர்ந்து திரிணமூல் எம்பி கல்யாண் பானர்ஜி மீதும் இன்று தாக்குதல் நடந்துள்ளது.
M. மீரா
மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி அகற்றப்பட்டு, முதன்முறையாக பாஜக அரசு அமைந்துள்ளது. அக்கட்சியின் முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றுள்ளார்.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், மாநிலத் தலைநகரான கொல்கத்தாவிலும் பிற மாவட்டங்களிலும் பாஜக மற்றும் திரிணமூல் காங்கிரஸ் ஆதரவாளர்களிடையே மோதல்கள் வெடித்தன. இந்த மோதல்களில் தொண்டர்கள் அடித்துக் கொல்லப்பட்டதாக பாஜக மற்றும் திரிணமூல் கட்சிகள் தெரிவித்திருந்தது .
இதனைத் தொடர்ந்து தேர்தலுக்கு பிந்தைய வன்முறையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பொது செயலருமான அபிஷேக் பானர்ஜி நேற்று, சோனார்பூர் பகுதிக்குச் சென்றார். அப்போது அடையாளம் தெரியாத சில நபர்கள் அவர்மீது கற்கள், காலணிகள் மற்றும் முட்டைகளை வீசி எறிந்ததோடு, “திருடன் திருடன்” என முழக்கமிட்டு அவரை தாக்க முயன்றனர். அபிஷேக் பானர்ஜி, முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியின் நெருங்கிய உறவினர் ஆவார்.
இந்தச் சூழலில் அபிஷேக் பானர்ஜி அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு நேரில் சென்ற முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி, பாஜக ஆதரவு பெற்ற சமூக விரோதிகளே இந்தத் தாக்குதலை நடத்தியிருப்பதாகவும், ஆட்சியாளர்களே கொலைக்காரர்களாக மாறிவிட்டதாகவும் குற்றஞ்சாட்டினார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் மேற்கு வங்க பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்துள்ள மேற்கு வங்க பாஜக, திரிணமூலின் ஊழல் மற்றும் வன்முறை அரசியலுக்கு எதிரான மக்களின் கோபமே இந்தத் தாக்குதல் எனக் குறிப்பிட்டது.
இந்நிலையில் ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள சாண்டிதாலா காவல் நிலையத்திற்கு வெளியே இன்று நடந்த மோதலின் போது, மூத்த திரிணாமூல் காங்கிரஸ் (TMC) எம்.பி. கல்யாண் பானர்ஜி தாக்கப்பட்டு தலையில் காயம் அடைந்திருக்கிறார். முன்னதாக, கைது செய்யப்பட்ட தங்கள் கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களை விடுதலை செய்யக் கோரி மனு ஒன்றைச் சமர்ப்பிக்கக் கூடியிருந்தனர். அப்போது திரிணாமூல் காங்கிரஸ் ஆதரவாளர்களும் பாஜக தொண்டர்களும் மோதிக் கொண்ட போது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பாஜக தொண்டர்கள், போராட்டத்தில் ஈடுபட்ட ஆதரவாளர்களைத் திருடர்கள் என்று அழைத்து, திரிணாமூல் காங்கிரஸுக்கு எதிரான ஆக்ரோஷமான கோஷங்களை எழுப்பத் தொடங்கியதால், நிலைமை மோசமடைந்து பதற்றமான மோதலாக மாறியது.
இந்தசூழலில் தான், மனுவைத் தாக்கல் செய்வதற்காக காவல் நிலையத்திற்குச் சென்றுகொண்டிருந்தபோது, தன்னை வேண்டுமென்றே குறிவைத்துத் தாக்கியுள்ளனர் என்று கல்யாண் பானர்ஜி தன்மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து தெரிவித்துள்ளார்.

