ராணுவத்தில் இருப்பவர்கள் அரசியல் பேசலாமா ? என்ன சொல்கிறது விதி
ராணுவத்தில் பதவியில் இருப்பவர்கள் அரசியல் பேசலாமா..? என்ன சொல்கிறது விதி என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், மக்களை வன்முறைக்கு அழைத்துச் செல்வது தலைமைப் பண்பின் அடையாளம் அல்ல என ராணுவ தளபதி பிபின் ராவத் நேற்று தெரிவித்திருந்தார். தலைவர்கள் கூட்டத்திலிருந்துதான் உருவாகிறார்கள் என்றும், எனினும் மக்களை, பொருத்தமற்ற திசையில் வழிநடத்துபவர்கள் தலைவர்களாக இருக்க முடியாது எனவும் கூறினார். நாட்டில் பல்கலைக்கழக மற்றும் கல்லூரி மாணவர்கள் நடத்தும் போராட்டங்களை சுட்டிக்காட்டிய அவர், மக்கள் கூட்டம் வன்முறை மற்றும் தீ வைப்பு சம்பவங்களை நோக்கி அழைத்துச் செல்லப்படுவதுவது நல்ல தலைமையாகாது என்றும் தெரிவித்தார்.
ராணுவ தளபதி பிபின் ராவத்தின் இந்த கருத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் விமர்சனங்கள் எழுந்தன. அதாவது ராணுவ பதவியில் இருப்பவர்கள் எப்படி அரசியல் பேசலாம் எனவும், சிலர் இதில் ஒன்றும் தவறு இல்லையே எனவும் தெரிவித்தனர்.
இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரான பிரிஜேஷ் கலாப்பா பேசும்போது, “ குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு எதிராக பிபின் ராவத் பேசுவது முற்றிலும் அரசியலமைப்பு ஜனநாயகத்திற்கு எதிரானது. இன்றைய அரசியல் பிரச்னைகள் குறித்து ராணுவத் தளபதியை பேச அனுமதிப்பது, நாளை இராணுவம் அனைத்தையும் கைப்பற்ற முயற்சிக்கும் சூழ்நிலையை உருவாக்கும் எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி, பிரதமர் மோடி தலைமையிலான அரசில், சீருடையில் உயர்ப் பதவியில் இருக்கும் அதிகாரிகள் எப்படியெல்லாம் வரம்பு மீறி செயல்படலாம் என்பதை ராணுவத் தளபதி பிபின் ராவத்தின் பேச்சு சுட்டிக்காட்டுவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய ஸ்வராஜ் இந்தியா தலைவரின் யோகேந்திர யாதவ்,“ ஆமாம். தலைவர்கள் மக்களை சரியான பாதையில் வழிநடத்த வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். பிபின் ராவத் இதுபற்றி பேசும்போது பிரதமரை மனதில் வைத்து பேசியிருப்பார் என நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.
இதனிடையே, மத்திய அரசின் முன் அனுமதி இல்லாமல் எந்தவொரு அரசியல் தொடர்பான பேச்சையும், துறை சம்பந்தப்பட்ட விஷயங்களையும் ராணுவ பதவியில் இருப்பவர்கள் நேரடியாகவே, மறைமுகமாகவே தெரிவிக்கக் கூடாது என ராணுவ விதி சொல்வதாக தெரிகிறது. இதனாலேயே பல தரப்பில் இருந்தும் ராணுவத் தளபதி பிபின் ராவத்தின் பேச்சுக்கு எதிராக விமர்சனங்கள் எழத் தொடங்கியுள்ளன எனக் கூறப்படுகிறது.