இன்று விண்ணில் பாய்கிறது பி.எஸ். எல்.வி. சி62 ராக்கெட்., இஸ்ரோவை உற்றுநோக்கும் உலக நாடுகள்.!
ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி62 ராக்கெட் மூலம், இ.ஓ.எஸ். என்-1என்ற முதன்மை செயற்கைக்கோளும், 17 சிறிய செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்படுடுகின்றன. காலை 10.17 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி62 ராக்கெட் விண்ணில் ஏவப்படும் நிலையில், அதற்கான இறுதிக்கட்ட பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் சேவைக்காக வடிவமைக்கப்பட்ட இ.ஓ. எஸ். என்-1 என்ற செயற்கைக்கோளை பி.எஸ்.எல்.வி. சி62 ராக்கெட் சுமந்து செல்கிறது. ராணுவ பயன்பாட்டிற்காகவும், பூமிக்கு அடியில் இருக்கும் கனிம வளங்களை கண்டறியவும் இந்த செயற்கைக்கோள் பயன்படுத்தப்படவுள்ளது. அத்துடன் ஸ்பானிஷ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட கெஸ்ட்ரல் இனிஷியல் டெமான்ஸ்ட்ரேட்டர் என்ற ஒரு சிறிய சோதனை கருவியும் பொருத்தப்பட்டுள்ளது. இதனுடன், பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்களின் 17 வணிக செயற்கைக்கோள்களும் விண்ணுக்கு ஏவப்படுகின்றன.
பி.எஸ்.எல்.வி. சி61 ராக்கெட் திட்டம் தோல்வியில் முடிந்த நிலையில், தற்போது பி.எஸ்.எல்.வி. சி62 ராக்கெட் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த இஸ்ரோ மும்முரம் காட்டி வருகிறது. நடப்பாண்டின் முதல் ராக்கெட்டை இஸ்ரோ விண்ணில் ஏவவுள்ள நிலையில், அதனை காண ஸ்ரீஹரிகோட்டாவில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

