மகளிர் இடஒதுக்கீட்டில் திருத்தம்.. 816-ஆக உயர்கிறதா மக்களவை இடங்கள்.? அரசியல் களத்தில் புதிய விவாதம்
மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை (நாரி சக்தி வந்தன் அதினியம்) 2029 மக்களவைத் தேர்தலிலேயே அமல்படுத்தும் வகையில், மத்திய அரசு அதில் அதிரடித் திருத்தங்களைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது. இதற்காக ஏப்ரல் 16 முதல் 18 வரை நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடரை நடத்தப் பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
மக்களவை இடங்கள் அதிகரிப்பு:
தற்போதுள்ள 543 மக்களவை இடங்களை 50% அதிகரித்து, மொத்தம் 816 இடங்களாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது. இதில் 33% இடஒதுக்கீட்டின் அடிப்படையில் 273 இடங்கள் பெண்களுக்காக ஒதுக்கப்படும். முன்னதாக, புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறைக்கு பிறகே இடஒதுக்கீடு அமலாகும் எனக் கூறப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அந்த நிபந்தனையை நீக்கிவிட்டு, உடனடியாக சட்டத்தை அமல்படுத்த அரசு முயல்கிறது. மாநிலங்களுக்கு இடையிலான பிரதிநிதித்துவ விகிதம் மாறாமல் இருக்க, அனைத்து மாநிலங்களிலும் இடங்கள் 50% அதிகரிக்கப்படும். உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 80-லிருந்து 120 இடங்களாக உயரும். தமிழ்நாட்டில் 39-லிருந்து 59 இடங்களாக உயரும்.
எழும் அரசியல் விவாதங்களும் கவலைகளும்:
மத்திய அரசின் இந்தத் திட்டம் "மாஸ்டர் ஸ்ட்ரோக்" என ஒரு தரப்பினரால் பாராட்டப்பட்டாலும், எதிர்க்கட்சிகள் மற்றும் தென்னிந்திய மாநிலங்கள் மத்தியில் சில அச்சங்களை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களுக்கு இந்த இடங்கள் அதிகரிப்பு அரசியல் ரீதியாகப் பாதிப்பை ஏற்படுத்தலாம். இடங்கள் அதிகரித்தாலும், வட மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தென்னிந்திய மாநிலங்களின் "அரசியல் செல்வாக்கு" குறைய வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.மக்களவை
காங்கிரஸ் கட்சியின் ஜெயராம் ரமேஷ், இந்தத் திட்டத்தை "மக்களைத் திசைதிருப்பும் ஆயுதம்" என்று விமர்சித்துள்ளார். முறையான மக்கள் தொகை கணக்கெடுப்பு இல்லாமல் இடங்களை அதிகரிப்பது தன்னிச்சையானது என அவர்கள் வாதிடுகின்றனர். ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், இத்தகைய பெரிய கொள்கை முடிவை எடுப்பது குறித்துச் சட்ட வல்லுநர்கள் விவாதித்து வருகின்றனர். இந்தச் சட்டத்திருத்தத்தை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு (2/3) பெரும்பான்மை அவசியம். எனவே, வரும் சிறப்புக் கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகளின் ஆதரவைப் பெற வேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு உள்ளது.

