கேரளா, புதுச்சேரி, அசாம்.. ஆளப்போவது யார்? தொடங்கியது வாக்குப்பதிவு!
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம் மற்றும் அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் மாதம் 15-ம் தேதி வெளியிட்டது. அதன்படி, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாகவும், மேற்கு வங்கம் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில் இருகட்டமாகவும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, புதுச்சேரி, கேரளா மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் ஏப்ரல் 9 ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
அதன்படி, இன்று காலை 7 மணிக்கு, அசாமில் 126 தொகுதிகள், கேரளாவில் 140 தொகுதிகள், புதுச்சேரியில் 30 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது. வாக்குப்பதிவு மாலை 6 மணிவரை நடைபெறவுள்ள நிலையில், 3 மாநிலங்களையும் சேர்த்து 6 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். மேலும், 1800 மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இத்தேர்தலுக்கான முடிவுகள், தமிழ்நாடு, மேற்குவங்கம் சேர்த்து மே 4-ம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.
கேரளா
கேரளத்தில் உள்ள 14 மாவட்டங்களில் 140 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ள நிலையில், 2.71 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில் 1.32 கோடி ஆண் வாக்காளர்களும், 1.39 கோடி பெண் வாக்களர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 273 மூன்றாம் பாலினத்தவர்களும் அடங்குவர்.
புதுச்சேரி
30 தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் 9.50 லட்சம் வாக்களர்கள் வாக்களிக்கவுள்ளனர். இதில், பெண் வாக்காளர்கள் 5,03,810 பேர். ஆண் வாக்காளர்கள் 4,46,361 பேர். மூன்றாம் பாலினத்தவர் 140 பேர் அடங்குவர். புதுச்சேரி முழுவதும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு 1,099 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
அசாம்
126 தொகுதிகளைக் கொண்ட அசாமில் 2.49 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். ஆண் வாக்காளர்கள் 1,24,82,213 பேர். பெண் வாக்காளர்கள் 1,24,75,583 பேர். மூன்றாம் பாலினத்தவர் 343 பேர் அடங்குவர். இன்று காலை அசாம் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியிருக்கும் நிலையில், 722 வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றனர்.

