கர்நாடக மாநிலம் ஹூபள்ளி அருகே வீரப்பூர் ஓனி பகுதியில் வசித்தவர் அஞ்சலி அம்பிகேரா. தன்னுடைய பாட்டியுடன் வசித்து வந்துள்ளார். 21 வயது இளம்பெண்ணான இவர், கேட்டரிங் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இவரை, கிரிஷ் சாவந்த் (வயது 23) என்ற ஆட்டோ ஓட்டுநர் ஒருதலையாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. அவரும் அதே தெருவில் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், அஞ்சலியிடம் கிரிஷ் சாவந்த் தன் காதலைத் தெரிவித்துள்ளார். ஆனால் அவரது காதலை அஞ்சலி ஏற்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிரிஷ், இன்று அதிகாலை அஞ்சலியின் வீட்டுக்குச் சென்று கத்தியால் அவரைக் குத்தியுடன், கழுத்தையும் அறுத்துள்ளார்.
இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துச் சரிந்து இறந்தார், அஞ்சலி. இதைக் கண்டதும் கிரிஷ் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து விசாரணை நடத்தியதுடன், அஞ்சலியின் உடலையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தப்பியோடிய கிரிஷ் தேடி வருகின்றனர்.
கடந்த மாதம் ஹூபள்ளி தனியார் கல்லூரியில் காங்கிரஸ் பிரமுகரின் மகள், காதலை ஏற்க மறுத்ததால் சக மாணவரால் கல்லூரி வளாகத்திலேயே குத்திக் கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.