ராஜஸ்தான்|7 மாதங்களில் 25 ஆண்களை மணந்த பெண் கைது!
E. இந்து
7 மாதங்களில் 25 ஆண்களை மணந்த பெண்ணை ராஜஸ்தான் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதுகுறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
திருமண மோசடி தொடர்பான வழக்கில், 7 மாதங்களில் வேறு வேறு மாநிலங்களைச் சேர்ந்த 25 ஆண்களை மணந்ததாக 23 வயதான அனுராதா பஸ்வான் என்ற பெண்ணை போபாலில் வைத்து சவாய் மதோபூர் காவல்துறையினர் நேற்று (மே 19) கைது செய்தனர்.
இதுகுறித்து மன்பூர் காவல்நிலைய விசாரணை அதிகாரி மீதா லால் கூறுகையில், “அனுராதா தன்னை ஒரு மணப்பெண்ணாக காட்டிக்கொண்டு, சட்டப்பூர்வ ஆவணங்களை பயன்படுத்தி பல ஆண்களை மணந்துள்ளார். திருமணம் செய்துகொள்ளும் ஆண்களுடன் சில நாட்கள் தங்கி, பின்னர் அவர்களது வீட்டில் உள்ள தங்கம், பணம் மற்றும் மின்னணு பொருட்களை எடுத்துக்கொண்டு இரவோடு இரவாக தப்பித்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்” என்று கூறினார்.
சவாய் மதோபூர் பகுதியைச் சேர்ந்த விஷ்ணு சர்மா கடந்த மே 3 அன்று அந்த ஊரில் உள்ள காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் மூலம் இந்த மோசடி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
இதுகுறித்து விஷ்ணு சர்மா தெரிவிக்கையில், “சுனிதா மற்றும் பப்பு மீனா ஆகிய இருவர் எனக்கு பொருத்தமான மணமகளை பார்த்து தருவதாக என்னிடம் இருந்து ரூ.2 லட்சம் வாங்கினார்கள். பின்னர், அனுராதாவை மணப்பெண்ணாக காட்டினர். கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி எங்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த சில நாட்களில் அதாவது மே 2ஆம் தேதி அன்று வீட்டில் இருந்த பொருட்களை திருடிக்கொண்டு அனுராதா வீட்டை விட்டு தப்பி சென்றார். எனவே காவல்நிலையத்தில் புகாரளித்தேன்” என்றுக் கூறினார்.
இதனைத் தொடர்ந்து, புகாரின் மீதான விசாரணை சூடுபிடிக்க ஆரம்பித்தது. விசாரணையில், உத்தர பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்சில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுராதா ஊழியராக பணியாற்றியது கண்டறியப்பட்டது. மேலும், குடும்ப தகராறு ஒன்றில் தனது கணவரிடமிருந்து பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். அப்போது, திருமண ஏஜெண்டுகள் என தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு மோசடியில் ஈடுபடும் ஒரு கும்பலுடன் அனுராதாவிற்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த கும்பல் வாட்ஸ் ஆப் மூலம் மணப்பெண்களைக் காட்டி, அவர்களின் சேவைகளுக்காக ரூ.2 முடல் ரூ.5 லட்சம் வரை பணம் வாங்குகிறார்கள். திருமணம் முடிந்த ஒரு வாரத்திற்குள் மணப்பெண் வீட்டில் உள்ள தங்கம், பணம் உள்ளிட்டவற்றை எடுத்துக்கொண்டு தப்பித்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த கும்பலில் அனுராதா சேர்ந்து திருமண மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
புகாரின் பேரில், அனுராதாவை நேற்று (மே 19) சவாய் மதோபூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அனுராதாவை தொடர்ந்து மோசடியில் ஈடுபட்ட ரோஷ்னி, ரகுபிர், கோலு, மஜ்பூத் சிங் யாதவ் மற்றும் அர்ஜூன் ஆகியோரை காலவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர். இவர்கள் அனைவரும் போபாலின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், விஷ்ணு சர்மாவின் வீட்டில் இருந்து சென்ற பிறகு அனுராதா போபால் நகரில் உள்ள கப்பர் என்பவரை திருமணம் செய்து அவரிடமிருந்து ரூ.2 லட்சம் வசூலித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து, அனுராதாவிடம் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், அவர் கடந்த 7 மாதங்களில் 25 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார் என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.