தெலங்கானா|பாலியல் வன்கொடுமையிலிருந்து தப்பிக்க ஓடும் ரயிலிருந்து குதித்த இளம்பெண்!
தெலங்கானாவில் ரயிலில் பயணித்த இளம்பெண் ஒருவர், பாலியல் பலாத்காரத்தில் இருந்து தப்பிக்க ரெயிலிலிருந்து குதித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம், ஐதராபாத் அருகே, கடந்த 22 ஆம் தேதி இரவு, 23 வயது பெண் ஒருவர், செகந்திராபாத் ரயில் நிலையத்திலிருந்து அதே மாவட்டத்தில் உள்ள மேட்சல் என்ற இடத்திற்கு புறநகர் ரயிலில் பயணம் மேற்கொண்டார்.
இப்பெண்ணோடு மற்ற பெண் பயணிகளும் பயணம் மேற்கொண்டனர். சரியாக அல்வால் நிலையத்தை ரயில் அடைந்தது. அப்போது அப்பெண்ணோடு பயணித்த மற்ற பெண் பயணிகள் ரயிலிருந்து இறங்க இளம்பெண் மட்டும் தனியாக அமர்ந்து வந்துள்ளார்.
இந்த சமயம் பார்த்து, சுமார் 25 வயதுடைய அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் , இந்த இளம் பெண் இருந்த மகளிர் பெட்டியில் ஏறி, இவருக்கு பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். இதனால், பதறிப்போன பெண், பாலியல் வன்கொடுமையிலிருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள ஓடும் ரயிலிருந்து குதித்துள்ளார்.
இதனால், தலை , கன்னம், கை, என உடலில் பல்வேறு இடங்களில் அடிப்பட்டு ரத்த காயம் ஏற்பட்டநிலையில், கொம்பள்ளியில் உள்ள ஒரு ரயில்வே பாலம் அருகே காயமடைந்த நிலையில், மீட்கப்பட்டார். இதனைக்கண்ட அவ்வழியாக சென்ற சிலர், உடனடியாக 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் என்பதும், ஞாயிற்றுக்கிழமை தனது மொபல் போனை பழுதுபார்க்க சென்றபோது இச்சம்பவம் நடந்ததாகவும் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். மேலும், பெண்களுக்கென்று ஒதுக்கப்பட்ட பெட்டியில்தான் தான் பயணித்ததாகவும், அப்போது இரவு 8.30 மணியளவில் அதில் ஏறிய நபர் இவரிடம் அத்துமீற முயன்றதாகவும், அதிலிருந்த தப்பித்துக் கொள்ள குதித்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், செகந்திராபாத் அரசு ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சாய் ஈஸ்வர் கவுட், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருவதாகக் கூறினார்.
இது போன்ற சம்பவம் நடப்பது முதல்முறை அல்ல, கடந்த பிப்ரவரி மாதம், ஜோலார்பேட்டையில், ஓடும் ரயிலில் கர்ப்பிணியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபர், அப்பெண்ணை ரயிலிலிருந்து தள்ளிவிட்டதும், அதனால் , அவரது வயிற்றிலிருந்த சிசு உயிரிழந்த செய்தியும் ஏற்படுத்திய அதிர்வலை தற்போது வரை நீங்கவில்லை.. இந்தநிலையில், இதே போல சம்பவம் மீண்டும் நடந்திருப்பது பெண்களின் பாதுகாப்பு குறித்து கேள்வியையும் எழுப்பியுள்ளது.