போன் காலில் மிரட்டல்
போன் காலில் மிரட்டல்முகநூல்

'முடிஞ்சா தமிழ்நாட்டுக்கு வா..'... மிரட்டிய சிவசேனா ஆதரவாளருக்கு குணால் கம்ரா நச் பதிலடி!

இதையடுத்து, குணால் கம்ரா மீது ஒரு வழக்கும் அவர் வீடியோ பதிவு செய்த ஸ்டூடியோவைச் சேதப்படுத்தியதற்காக சிவசேனா தொண்டர்கள் மீதும் என இரண்டு வழக்குகளை மும்பை காவல்துறை பதிவு செய்துள்ளது.
Published on

நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா, சமீபத்தில் தனது யூடியூப் சேனலில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், சிவசேனாவை உடைத்து, பாஜக கூட்டணியில் இணைந்து ஏக்நாத் ஷிண்டே முதல்வரானதை விமர்சித்திருந்தார். இதனால், கொந்தளித்த ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கட்சியினர் அந்த நிகழ்ச்சியைப் பதிவுசெய்த ஸ்டூடியோவை அடித்து நொறுக்கினர்.

சிவசேனா கட்சியினர் நாற்காலிகள், மேசைகள் மற்றும் விளக்குகளை அடித்து நொறுக்கும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதையடுத்து, குணால் கம்ரா மீது ஒரு வழக்கும் அவர் வீடியோ பதிவு செய்த ஸ்டூடியோவைச் சேதப்படுத்தியதற்காக சிவசேனா தொண்டர்கள் மீதும் என இரண்டு வழக்குகளை மும்பை காவல்துறை பதிவு செய்துள்ளது.

அதுமட்டுமல்ல, இந்த விவகாரம் குறித்து மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் விவாதம் எழுப்பப்பட்ட நிலையில், மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் இழிவுப்பேச்சுக்கு குணால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் குணாள் கம்ரா இதற்கு முன்பே தரக் குறைவான கருத்துகளைத் தொடர்ந்து பேசி வந்துள்ளார்.

பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் என்ற போர்வையில் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டால், அதை பொறுத்துக்கொள்ள முடியாது. அரசியல் பதவிகளில் இருப்பவர்களை அவமதித்து, விளம்பரத்திற்காக தொந்தரவு செய்வதைப் பொறுத்துக்கொள்ள முடியாது. சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். என்றும் தெரிவித்துள்ளார் .

இந்தநிலையில்தான், சிவசேனா ஆதரவாளர் என்று கூறும் நபர் குணால் கம்ராவுக்கு போன் செய்து அவரை மிரட்டும் ஆடியோவும் இணையத்தில் பரவி வருகிறது.

53 வினாடிகள் ஓடும் அந்த ஆடியோவில் சிவசேனா ஆதரவாளர் எனச் சொல்லிக் கொள்ளும் அந்தபர், ‘ஸ்டுடியோவிற்கு ஏற்பட்ட நிலைதான் உனக்கும் ஏற்படும் என்று மிரட்டியுள்ளனர்..

குணாலுக்கும் சிவசேனா ஆதரவாளருக்கும் இடையே நடந்த உரையாடல் என்ன ? பார்க்கலாம்.

குணாலை அழைத்த நபர், தனது பெயர் ஜெகதீஷ் சர்ஷா என்று அடையாளப்படுத்திக் கொள்ள, ’ உங்க வீடியோவில் எங்க முதல்வர் ஷிண்டே பத்தி எப்படிப் பாடலை பாடலாம்’ என கேட்டுள்ளார். இதற்கு நகைச்சுவையாக பதிலளித்த குணால், அவர் எங்க முதல்வரா இருக்காரு? துணை முதல்வர் தானே என்றார்.

இதை கேட்டு ஆத்திரமடைந்த சிவசேனா ஆதரவாளர், ”உன்னோட ஹோட்டலுக்கும் ஸ்டுடியோவுக்கும் என்ன நடந்ததுறத போய் பாரு.. நீ கையில் கிடைத்தால் உனக்கும் அதே கதிதான்" என்று கூறி குணாலை தகாத வார்த்தையால் திட்டியுள்ளார். அப்போது உடனடியாக பதிலளித்த குணால், ‘தமிழ்நாட்டிற்கு முடிஞ்சா வா.. நா அங்கதா இருக்க.. ’ என்று கூறியுள்ளார்.

அப்போது போனை பிடுங்கிக் பேசிய மற்றொரு நபர், ‘ எங்கே வர வேண்டும் எங்கே வர வேண்டும்’ எனக் கேட்க... அதற்கு குணால் கம்ரா, மீண்டும் தான் தமிழ்நாட்டில் இருப்பதாகவும் முடிந்தால் நேரில் வா என்றும் குறிப்பிடுகிறார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதேநேரம் இந்த ஆடியோ உண்மை தானா? என்பதும் உறுதியாகவில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com