’துபாயில் பிறந்தநாள் கொண்டாடணும்’ - கண்டுகொள்ளாத கணவனை அடித்தே கொலைசெய்த மனைவி; புனேவில் பரபரப்பு

தனது விருப்பங்களை நிறைவேற்றாத கணவனை அடித்து கொலை செய்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாதிரிப்படம்
மாதிரிப்படம்pt web

புனேவில் உள்ள வான்வாடி பகுதியில் வசித்து வந்தவர் நிகில் புஷ்பராஜ் கண்ணா. ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்த இவருக்கு ரேணுகா என்ற மனைவி உள்ளார்.

நிகில் புஷ்பராஜ் கண்ணா மற்றும் ரேணுகா தம்பதிக்கு 6 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மதியம் இருவருக்கும் நடந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், ரேணுகா நிகில் கண்ணாவின் முகத்தில் அடித்ததால் அவரது மூக்கு மற்றும் பற்கள் உடைந்த நிலையில் ரத்தம் கொட்டியது. இதனால் சுயநினைவை இழந்த அவர் கீழே சாய்ந்துள்ளார்.

இதனை அடுத்து அக்கம்பக்கத்தினர் நிகிலை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சம்பவம் குறித்து விசாரணையில் ஈடுபட்டனர். மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் காவல்துறையினர் தெரிவித்துள்ளதாவது, “வெள்ளிக்கிழமை மதியம் இச்சம்பவம் நடந்துள்ளது. விசாரணையில், செப்டம்பர் 18 ஆம் தேதி பாதிக்கப்பட்டவரின் மனைவிக்கு பிறந்தநாள் என்பது தெரியவந்தது. பிறந்த நாளை துபாயில் கொண்டாட விரும்பியதற்கான கோரிக்கையை அவரது கணவர் நிறைவேற்றவில்லை.

நவம்பர் 5 ஆம் தேதி அத்தம்பதிக்கு திருமணநாள் வந்துள்ளது. தனது கணவரிடம் இருந்து சிறந்த பரிசை எதிர்பார்த்திருந்துள்ளார். மேலும் தனது உறவினரின் பிறந்த நாளுக்காக டெல்லி செல்ல விரும்பிய போது தனது கணவரிடம் இருந்து தனக்கு சாதகமான பதில் வராததால் அந்த விஷயத்திலும் வருத்தத்தில் இருந்துள்ளார்” என தெரிவித்தனர். குற்றமிழைத்த பெண் மீது ஐபிசி 302ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நிகில் முகத்தில் ரேணுகா தனது முஷ்டியால் தாக்கினாரா அல்லது ஏதேனும் ஒரு பொருள் கொண்டு தாக்கினாரா என்பது பிரேத பரிசோதனையின் பின்பே தெரியவரும் என தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com