தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இல்லாததால் பல பாஜக தலைவர்கள் அரசியலிருந்து விலகுகிறார்களா?

மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் பல பாஜக தலைவர்கள் அரசியலிலிருந்து விலகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பாஜக
பாஜக twitter

மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாததால், மூத்த பாஜக தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஹர்ஷ்வர்தன் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த வருடம் தெரிவித்திருந்தார். இதைப் போலவே மேலும் பல பாஜக தலைவர்கள் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிட்டாததால் அரசியலிலிருந்து விலகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக அந்த கட்சியின் தலைவர்கள் பரபரப்பாக பேசி வருகின்றனர்.

குறிப்பாக தற்போது மத்திய இணை அமைச்சராக உள்ள மீனாட்சி லேக்கி அரசியலிலிருந்து ஒதுங்கி மீண்டும் வழக்கறிஞராக பணியாற்றுவார் என கருதப்படுகிறது. மீனாட்சி லேக்கி இரண்டு முறை வெற்றி பெற்ற புதுடெல்லி தொகுதியிலிருந்து மறைந்த சுஷ்மா சுவராஜ் மகள் பாசூரி ஸ்வராஜ் போட்டியிடுவார் என பாஜக அறிவித்துள்ளது.

அதேபோல திரிபுரா மாநிலத்தில் மத்திய அமைச்சரான பிரதிமா பௌமிக் தொகுதியான மேற்கு திரிபுரா முன்னாள் முதல்வர் பிப்லப் குமார் தேபுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் பிரதியுமா பௌமிக் அரசியலிலிருந்து விலகி விடுவார் என பாஜக வட்டாரங்களில் பேசப்படுகிறது.

ஏற்கனவே கிழக்கு டெல்லி மக்களவை உறுப்பினரான கவுதம் காம்பீர் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவுக்கு கடிதம் எழுதி அரசியலிலிருந்து ஓய்வு பெற வேண்டும் என்கிற தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். அதேபோலவே ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் தொகுதி மக்களவை உறுப்பினரான ஜெயந்த் சின்ஹா தேர்தல் அரசியலிலிருந்து ஒதுங்கி சுற்றுச்சூழல் ஆர்வலராக சேவையாற்ற போவதாக தெரிவித்துள்ளார்.

கவுதம் காம்பீர்
கவுதம் காம்பீர்புதிய தலைமுறை

ஹர்ஷ் வர்தன் டெல்லி பாஜகவின் மிகவும் மூத்த தலைவர்களில் ஒருவராக கருதப்படுபவர். இரண்டு முறை மக்களவை உறுப்பினராகவும் 5 முறை சட்டசபை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். மருத்துவரான இவர் சென்ற முறை வெற்றி பெற்ற சாந்தினி சவுக் மக்களவைத் தொகுதியில் போட்டியிட தொழிலதிபரான பிரவீன் கண்டேன்வாலுக்கு வாய்ப்பு அளிக்கப்படுவதாக பாஜக தெரிவித்துள்ளது.

ஹர்ஷவர்தன் 2019 ஆம் வருடம் நரேந்திர மோடி தலைமையில் இரண்டாவது முறையாக அரசு அமைந்த போது அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2021 ஆம் வருடம் ஜூலை மாதம் வரை அமைச்சராக இருந்த ஹர்ஷ் வரதன் கொரோனா பெருந்தொற்று காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டு, குஜராத் மாநிலத்தை சேர்ந்த மன்சூக் மண்டாவியாவுக்கு சுகாதாரத்துறை பொறுப்பு அளிக்கப்பட்டது.

பாரதிய ஜனதா கட்சி 195 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில் வேறு சில முக்கிய தலைவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், மேனகா காந்தி மற்றும் வருண் காந்தி அடக்கம் என பாஜக வட்டாரங்களில் பேசப்படுகிறது. வருண் காந்தி வெளிப்படையாக பாஜகவுக்கு எதிரான பல்வேறு கருத்துகளை பேசி வருவது குறிப்பிடத்தக்கது.

பாஜக, மோடி
பாஜக, மோடிட்விட்டர்

சென்ற வருடம் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றாலும் ராஜஸ்தான் மாநிலத்தில் முன்னாள் முதல்வர் வசந்தரராஜேவுக்கு மீண்டும் முதல்வர் பதவியை அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல மத்திய பிரதேச முதல்வராக இருந்த சிவராஜ் சிங் சௌஹானுக்கும் மீண்டும் முதல்வர் பதவி அளிக்கப்படவில்லை. இரண்டு மாநிலங்களிலும் புது முகங்களை அறிமுகப்படுத்திய பாஜக, தற்போது சிவராஜ் சிங் சௌஹானுக்கு மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்துள்ளது.

பாஜக
“மணிப்பூர் மக்களும் உங்கள் குடும்பத்தினரா?” - மோடியின் உரைக்கு பிரகாஷ் ராஜ் கேள்வி!

மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிட்டாவிட்டாலும், டெல்லியைச் சேர்ந்த ரமேஷ் பிதுரி அரசியலில் தொடர்ந்து முழுவீச்சாக ஈடுபடுவார் என கருதப்படுகிறது. பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த தானிஷ் அலியை மக்களவையில் தகாத வார்த்தைகளால் பேசியதால் சர்ச்சையில் சிக்கிய ரமேஷ் பிதூரிக்கு மக்களவைத் தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு அளிக்கவில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com