“மணிப்பூர் மக்களும் உங்கள் குடும்பத்தினரா?” - மோடியின் உரைக்கு பிரகாஷ் ராஜ் கேள்வி!

’இந்திய மக்கள் அனைவரும் எமது குடும்பத்தினர்’ என பிரதமர் மோடி உரையாற்றிய நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ் ’மணிப்பூர் மக்களும் உங்கள் குடும்பத்தினரா’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மோடி, பிரகாஷ் ராஜ்
மோடி, பிரகாஷ் ராஜ்ட்விட்டர்

பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில், கடந்த மார்ச் 3ஆம் தேதி நடைபெற்ற ஜன் விஸ்வாஸ் நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அம்மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், “ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் மீது குடும்ப அரசியல் குற்றச்சாட்டை எழுப்பி வருகிறார் பிரதமர் மோடி. குடும்ப ஆட்சி என்று நரேந்திர மோடி தாக்கி வருகிறார்.

உங்களுக்கு குழந்தைகளோ, குடும்பமோ ஏன் இல்லை என்பதை நீங்கள் (மோடி) சொல்ல வேண்டும்? பல குடும்பங்கள் அரசியலில் இருந்தால் அது குடும்ப ஆட்சியா? அது வாரிசு அரசியலா? உங்களுக்கு (மோடிக்கு) குடும்பம் இல்லையென்றால் யார் என்ன செய்ய இயலும்?” எனக் கடுமையாக விமர்சித்து இருந்தார்.

இந்த நிலையில் நேற்று தமிழ்நாட்டிற்கு வருகை தந்த பிரதமர் மோடி, சென்னை நந்தனத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “நான் குடும்ப ஆட்சி என்ற கூறுவதைவைத்து மோடிக்குக் குடும்பமே இல்லை என்று I-N-D-I-A கூட்டணித் தலைவர்கள் பேசுகிறார்கள். எனது வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். நாட்டு மக்கள் 140 கோடி பேரும் எனது குடும்பத்தினர்தான். கோடிக்கணக்கான மகள்கள், அம்மாக்கள், சகோதரிகள் அனைவரும் மோடியின் குடும்பத்தவர்கள்தான்” எனக்கூறி லாலு பிரசாத் யாதவ்வின் கேள்விக்கும் தக்க பதிலடி கொடுத்தார்.

மோடி
மோடிட்விட்டர்

இந்நிலையில் நாட்டும் மக்கள் அனைவரும் தமது குடும்பத்தினர்தான் என பிரதமர் மோடி கூறியதற்கு எதிராக நடிகர் பிரகாஷ் ராஜ், கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் தன்னுடைய எக்ஸ் தளத்தில், “மணிப்பூர் மக்கள், நாட்டின் விவசாயிகள், வேலையில்லாத இளைஞர்கள் எல்லாம் உங்கள் குடும்பத்தினரா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த ஆண்டு மே மாதம் மணிப்பூரில் இருசமூகத்தினரிடையே ஏற்பட்ட வன்முறை, இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த விஷயத்தில் மோடி இதுவரை அம்மாநிலத்திற்குச் சென்று மக்களைச் சந்திக்கவில்லை. மேலும் அவ்விவகாரமும் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கிறது. இதையடுத்துத்தான் நடிகர் பிரகாஷ் ராஜ் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com