விபத்துக்கு பிறகே விழித்துக்கொள்ளும் ரயில்வே நிர்வாகம் - காரணம் என்ன?

ரயில் விபத்துகள் நேரிடும்போதெல்லாம், ரயில்வே துறையில் பராமரிப்புக்காக எவ்வளவு தொகை செலவிடப்படுகிறது? பராமரிப்பு குறித்து கவனம் செலுத்தப்படுகிறதா என்ற கேள்வி வலுவாக எழுகிறது. அக்கேள்வி, ஆந்திர ரயில் விபத்தைத் தொடர்ந்தும் எழுந்துள்ளது.

நடப்பு 2023-24 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் ரயில்வே துறைக்கு 2.4 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2013-14 நிதியாண்டுடன் ஒப்பிடும்பொழுது இது 9 மடங்கு அதிகம் என மத்திய நிதித்துறை அமைச்சகம் கூறியது.

இந்தத் தொகை ரயில்வே துறையின் கட்டமைப்புகளை மேம்படுத்துவது, பாதுகாப்பு வசதிகளை அதிகரிப்பது, புதிய ரயில் வழித்தடங்களை உருவாக்குவது, வந்தே பாரத் என்று அழைக்கப்படும் சொகுசு அதிவிரைவு ரயில் சேவை உள்ளிட்டவற்றுக்காக செலவிடப்படுகிறது.

மொத்தத் தொகையில் சுமார் 1,85,000 கோடி ரூபாய் அத்தியாவசிய செலவுகளுக்காக மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ரயில்வே பாதுகாப்பு நிதியாக மட்டும் 45,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ராஷ்டிரிய ரயில் சன்ரக்ஷா கோஷல் என்ற பெயரில் தண்டவாளங்களை சீரமைக்கவும், விரிசல் ஏற்பட்டிருக்கிறதா என்பதை கண்காணிக்கவும், ஊழியர்களை நியமிக்கவும் தனியாக பத்தாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

ஆந்திர ரயில் விபத்துக்குள்ளான இடத்தின் புகைப்படம்
ஆந்திர ரயில் விபத்துக்குள்ளான இடத்தின் புகைப்படம்

ஆனால், 2017 -18 நிதியாண்டை ஒப்பிடும்போது இந்த தொகை சரிபாதியாக குறைக்கப்பட்டு இருக்கிறது. ரயில்வே துறையை நவீனமயமாக்க, நாட்டிலேயே அதிகபட்சமாக உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு 17,057 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அடுத்தபடியாக மகாராஷ்டிராவிற்கு சுமார் 13,000 கோடி ரூபாயும் மேற்குவங்கத்திற்கு 11,900 ஆயிரம் கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தென் மாநிலங்களான ஆந்திராவிற்கு 8,406 கோடி ரூபாயும் கர்நாடகாவிற்கு 7,561 கோடி ரூபாயும் தமிழ்நாட்டுக்கு 6,080 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

Train Accident
ஒடிசா ரயில் விபத்து: பிரதமர் மோடிக்கு 11 கேள்விகளை எழுப்பிய மல்லிகார்ஜுன கார்கே!

ரயில்வே பாதுகாப்பிற்காக கோடிக்கணக்கான ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டாலும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நடந்ததற்கு பிறகுதான் நிர்வாகம் விழித்துக் கொள்கிறது.

கவாச் தொழில்நுட்பம் பற்றி பேசப்பட்டு வந்தாலும் பயணிகள் ரயில்களில் இந்த தொழில்நுட்பம் எப்போது அமலுக்கு வரும்? எப்போது ரயில் பயணிகளின் பாதுகாப்பில் கவனம் செலுத்தப்படும் என்ற கேள்வி எழவே செய்கிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com