தொழில்நுட்ப வசதிகள் பெருகியும் இந்தியாவிற்கு 7 கட்டங்களாக தேர்தல் ஏன்? இது அவசியம் தானா? - ஓர் அலசல்

தொழில்நுட்ப வசதிகள் பெருகியும், இந்தியாவின் கட்டமைப்பு வலுவடைந்தும், மின்னணு வாக்குப்பதிவு போன்ற பெரும் மாறுபாடுகள் தேர்தல் களத்தில் ஏற்பட்டும் 7 கட்டங்களாக நடத்தப்படும் தேர்தல் எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது.
இந்திய பொதுத்தேர்தல்
இந்திய பொதுத்தேர்தல்pt web

முதல் பொதுத்தேர்தல்

இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் 25 அக்டோபர் 1951 முதல் 21 பிப்ரவரி 1952 ஆண்டுவரை பல கட்டங்களாக நடந்தது. சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தல் என்பதாலும், பெரும்பான்மையான மக்கள் கல்வியறிவு அற்றவர்களாக இருந்ததாலும் மக்களை ஜனநாயகப்படுத்தி அவர்களை வாக்களிக்க செய்ய வேண்டிய பணி தேர்தல் ஆணையத்திற்கு அவசியமாக இருந்தது. அதுமட்டுமின்றி, சமீபத்தில்தான் பிரிவினை நடந்த நாடு, நாடு முழுவதும் பல இடங்களில் கலவரங்களால் நடந்த வன்முறைகளின் தடம் இன்னும் ஆறவில்லை. இதை அனைத்தையும் தாண்டி தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் இந்தியாவிற்கு ஏற்பட்டது. சிறுபிசிறும் இன்றி தேர்தல் நடத்தி வெற்றி மட்டுமே பெற்றாக வேண்டிய கட்டாயம்.

தேர்தலின் போது இருந்த சிக்கல்கள் என்ன?

தகவல் தொழில்நுட்ப வசதிகள் பெரிதும் இல்லாத சூழல், கல்வியறிவு கொண்ட மக்கள் பெரும்பான்மையாக இல்லாத சூழல், பெரும் கலவரத்தால் மக்களது அடையாள ஆவணங்கள் காணாமல் போன சூழல் என பெரும் இன்னலுக்குள் தேர்தலை நடத்த வேண்டிய சவாலை எதிர்கொண்டிருந்தார் சுகுமார் சென். 1946 ஜனவரியில் நடந்த தேர்தலின் போது பணியாற்றிய பலரும் 1951 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் இந்தியாவின் முதல் பொதுத்தேர்தலில் இல்லை. இந்தியப் பிரிவினையின் போது நடந்த கலவரத்தால் பலரும் கொல்லப்பட்டிருந்தனர் அல்லது புலம்பெயர்ந்து போயிருந்தனர். இந்தியாவின் முதல் தேர்தலில் வேலை செய்ய நிரந்தர ஊழியர்களோ, தற்கால ஊழியர்களோ, தேர்ந்த உட்கட்டமைப்போ அல்லது தேர்வு செய்பவர்களுக்கு பயிற்சி கொடுப்பதற்கான போதிய வசதிகளோ என ஏதும் இல்லை.

இத்தனை காரணங்கள் இருந்தன. முதல் தேர்தலை பல கட்டங்களாக நடத்தியதற்கும், பல மாதங்கள் நடத்தியதற்கும். ஆனால், தற்போது இத்தனை தொழில்நுட்ப வசதிகள் பெருகியும், இந்தியாவின் கட்டமைப்பு வலுவடைந்தும், மின்னணு வாக்குப்பதிவு போன்ற பெரும் மாறுபாடுகள் தேர்தல் களத்தில் ஏற்பட்டும் 7 கட்டங்களாக நடத்தப்படும் தேர்தல் எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது.

பெற்ற பயிற்சி அடுத்தடுத்து வெற்றியைக் கொடுத்தது 

ஏனெனில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் நடக்கும் நேரத்தை குறைக்கும் என சொல்லப்பட்டது மிக முக்கியமான காரணம். அதுமட்டுமின்றி இந்தியாவின் முதல் தேர்தலில் இந்தியா கற்ற பாடம் அடுத்த தேர்தலிலேயே எதிரொலித்தது. 1957 ஆம் ஆண்டு நடந்த இரண்டாவது பொதுத்தேர்தல் 1957 ஆம் ஆண்டு 24 பிப்ரவரி முதல் 14 மார்ச் வரை மொத்தமே 20 தினங்களே தேர்தல் நடந்தது. திட்டமிடப்பட்ட துல்லியமான வெற்றி. இது அடுத்தடுத்த தேர்தல்களிலும் எதிரொலித்தது. 1962 ஆம் ஆண்டு தேர்தல் பிப்ரவரி 19 முதல் 25 வரை நடந்தது. இத்தனைக்கும் போர் மேகங்கள் தேசத்தை சூழ்ந்த நிலையில் நடந்துமுடிந்த தேர்தல். 2004 ஆம் ஆண்டு தேர்தல் கூட நான்கு கட்டங்களாக நடந்தது. 2004 ஆம் ஆண்டு 20 ஏப்ரல் முதல் 10 மே வரை நடந்தது. இருப்பினும், 2014 ஆம் தேர்தல் ஏப்ரல் 7 தொடங்கி மே 12 வரை 10 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. நாட்களாக பார்த்தால் 36 நாட்கள் தான்.

7 கட்டங்களாக நடத்தப்படும் தேர்தல்

ஆனால் இந்தாண்டோ 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. சுமார் 45 நாட்களுக்கு தேர்தல் நடக்கிறது. கட்டமைப்பு ரீதியாக வளர்ந்துள்ள இந்தியாவில் 7 கட்டங்களுக்கு அவசியம் என்ன என கேட்கின்றன எதிர்க்கட்சிகள். இது முழுக்க முழுக்க பாஜகவிற்கு சாதகமானது என்று குற்றம் சாட்டுகின்றன. தேர்தல் தேதி தேர்தல் ஆணையத்தால் அளிக்கப்படவில்லை. பிரதமர் மோடியால் அளிக்கப்பட்டது என்று குற்றம் சாட்டின. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், தேர்தலில் வெளிப்படைத் தன்மையையும், தேர்தல் நேரத்தையும், வாக்குகளை எண்ணும் நேரத்தையும் குறைக்கும் என்றே அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், ஜூன் 1 ஆம் தேதி முடியும் தேர்தலுக்கு ஜூன் 4 ஆ ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன என்றும் தெரிவித்திருந்தன.

வகுப்புவாதம் பேசுவதற்கான வாய்ப்பு

election commission
election commission

இதுகுறித்து மூத்த பத்திரிக்கையாளரும், அருஞ்சொல் இதழின் ஆசிரியருமான சமஸ் அவர்களை தொடர்பு கொண்டோம். அவர் கூறியதாவது, “பிரதமர் எல்லா தொகுதிகளுக்கும் போக வேண்டும். இதுதான் முதன்மையானது. அடுத்தது ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் பிரத்யேகமான கோணங்களில் பேசுவது. வடமாநிலத்திற்கும் தமிழ்நாட்டிலும் ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தால், அங்கு பேசுவது தமிழ்நாட்டில் பாதிப்பினை ஏற்படுத்தும். உத்தரப்பிரதேசத்தில் வகுப்புவாதமாக பேசினால் அது தமிழ்நாட்டில் பாதிப்பை ஏற்படுத்தும். பிரதமரின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில், குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளில், தமிழ்நாட்டில் வகுப்புவாத பேச்சுக்களை குறைத்துக்கொண்டார். தென் மாநிலங்களில் அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற நினைப்பும் இதற்கு காரணம்.

கேரளாவில் கிறிஸ்தவர்களையும், இஸ்லாமியர்களையும் இணைத்துக்கொள்ளாமல் வெற்றி சாத்தியமில்லை என்ற முடிவுக்கு அவர்கள் வந்துள்ளார்கள். வடகிழக்கு மாநிலங்களில் கிறித்தவர்கள் அதிகமாக இருக்கக்கூடிய பகுதிகள். அங்கெல்லாம் கூட பாஜகவால் வெற்றி பெற முடிகிறது. அதையே கேரளாவிலும் செயல்படுத்த வேண்டும் என நினைக்கிறார்கள்.

மூன்றாவதாக, பிரதமர் மோடியைத் தான் அவர்கள் மீண்டும் மீண்டும் முன்னிறுத்துகிறார்கள். எனவே அவர் பயணிப்பதற்கான காலக்கட்டம் வேண்டும். கடந்த தேர்தலில் பிரதமர் மோடி கிட்டத்தட்ட 1.50 லட்சம் கிமீ பயணித்துள்ளார். (142 பொதுக்கூட்டங்களில் சுமார் 1.50 கோடி மக்களிடம் நேரடியாக உரையாற்றியுள்ளார்)

அதேபோல் அமித்ஷாவும் பிரதமர் மோடியின் அளவிற்கு பிரச்சாரம் செய்துள்ளார். (312 மக்களவைத் தொகுதிகள், 161 பொதுக்கூட்டங்கள், 1.58 லட்சம் கிமீ பயணம், 18 roadshows). இத்தனை பெரிய பயணம் மேற்கொள்வதற்கு அவர்களுக்கு இந்த இடைவெளி தேவைப்படுகிறது.

அரசியல் தேவையைத் தவிர வேறு எதுவும் இல்லை

7 கட்டங்களாக தேர்தலை நடத்துபவர்கள் எந்த அடிப்படையில் ஒரே நாடு ஒரே தேர்தல் என பேசுகிறார்கள் என கேள்வியும் எழுகிறது. பெரிய கட்டமைப்பு இருப்பதால்தானே ஒரேநாடு ஒரே தேர்தல் சாத்தியம் என்கிறீர்கள். நாடு தழுவிய தேர்தலை இரண்டு மூன்று கட்டங்களாக நடத்துவதற்கு கூட ஏதுவாக இல்லாமலா தேர்தல் கட்டமைப்பு இருக்கிறது.

மேற்குவங்கம் ஏறத்தாழ தமிழ்நாடு போன்ற மாநிலம் தான். தமிழ்நாட்டை விட மக்கள்தொகை அதிகமான மாநிலம் என்றாலும், ஒப்பீட்டளவில் தமிழ்நாட்டை விட பரப்பளவில் சிறிய மாநிலம். தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 42 தொகுதிகள். தமிழ்நாட்டில் ஒரு நாளில் தேர்தலை நடத்தும் நீங்கள் எத்தனை கட்டங்களாக நடத்துகிறீர்கள். (7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது). இதில் உங்களது அரசியல் தேவையைத் தவிர வேறு எதுவும் இல்லை.

இதில் சிக்கல் என்னவென்றால், ஒரே கட்டமாகவும் தேர்தல் நடத்த முடியாது. ஹிமாச்சல், உத்தராகண்ட், காஷ்மீர் போன்ற மாநிலங்களில் ஊர்களே தனித்தனியாக அதிகமான தூரங்களுக்கு இடையே இருக்கும். சில மாநிலங்களில் சில பகுதிகள் பதற்றம் நிறைந்தது. பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகளவில் செய்ய வேண்டியிருக்கும். என்கருத்து மூன்று கட்டங்களாக தேர்தலை நடத்தலாம். 7 கட்டங்களாக தேர்தல் நடத்துவது சுத்த அரசியல்.

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்ட்விட்டர்

தேர்தல் நடக்கும் நாளுக்கு 48 மணி நேரம் முன்பு பிரச்சாரம் செய்யக்கூடாது என்ற விதி இருக்கிறது. ஆனால் தற்போது அனைத்தும் டிஜிட்டலாக மாறுகிறது. பிரதமர் மோடி வேறு மாநிலங்களில் பேசுவதை தொலைக்காட்சிகளிலும் சமூக ஊடகங்களிலும் மீண்டும் மீண்டும் ஒலிபரப்பப்படுகிறது. அப்போது பிரச்சாரம் நடக்கிறது தானே. எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மிகவும் நியாயமானது. தேர்தல் என்பது சமமான போட்டிக்களமாக இருக்க வேண்டும். ஆனால் அது இயல்பாகவே ஆளும் கட்சிக்கு சாதகமாகத்தான் இருக்கிறது. அதை மேலும் எவ்வளவு வளைக்க முடியும் என்பதற்கு பாஜகவின் ஆட்சிக்காலம் ஒரு உதாரணம்” என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com