\
Who is Sonam Wangchuk, this modern scientist?
Who is Sonam WangchukDelhi Neet Protest

டெல்லியில் தீவிரமடையும் மாணவர் போராட்டம்! தீப்பொறியாக மாறிய சோனம் வாங்சுக்: யார் இந்த நவீன விஞ்ஞானி!

லடாக் பழங்குடி மக்களின் உரிமைக்காகவும் சோனம் வாங்சுக் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளார்.
Published on

டெல்லியில் கரப்பான் பூச்சி கட்சியினர் நடத்திய நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் கலந்துகொண்டு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த போராட்டத்தில் அவர் உடல்நிலை மோசமடைந்து நிலையில், அவர் காவல்துறையால் வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அப்போது தொடங்கிய மாணவர் எழுச்சி தற்போது டெல்லியை தாண்டி இந்தியாவையே உலுக்கி வருகிறது. இந்த சூழலில் சோனம் வாங்சுக் யார் என்பது குறித்தும், அவர் பின்னணி குறித்தும் சமூக ஊடகத்தில் பெரிய அளவில் விவாதம் எழுந்துள்ளது.

sonam wangchuk won ramon magsaysay award
sonam wangchuk won ramon magsaysay award

1966ஆம் ஆண்டு லடாக்கின் உலேடோக்போ கிராமத்தில் பிறந்த சோனம் வாங்சுக், 9 வயது வரை பள்ளிக்கு செல்லாமல் தனது தாயாரிடம் கல்வி கற்றார். அதன் பின்னர் 12 வயதில் தனியே டெல்லி சென்ற அவர் அங்கு கேந்திரிய வித்யாலயா பள்ளியில் கல்வி பயின்றார்.

தொடர்ந்து பெற்றோரின் உதவி இல்லாமல் தனது சொந்த முயற்சியால் பணம் திரட்டி பொறியியல் படிப்பை முடித்த அவர் 1988இல் செக்மால் என்ற இயக்கத்தை நிறுவினார். இந்த அமைப்பின் மூலம் லடாக்கின் பள்ளிக் கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவந்தார். லடாக்கில் 10ஆம் வகுப்புத் தேர்ச்சி விகிதம் 5 சதவீதத்தில் இருந்து 75 சதவீதமாக அதிகரிக்க இவரின் முயற்சியும் ஒரு முக்கிய காரணமாக கூறப்பட்டது.

தொடர்ந்து பல்வேறு கண்டுபிடிப்புகளையும் அவர் உருவாக்கிய நிலையில், அது உலகளவில் பாராட்டை பெற்றது. அதில் தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்ள இவர் உருவாக்கிய "பனி ஸ்தூபி" எனும் புதுமையான தொழில்நுட்பம் உலக அளவின் இவருக்கு புகழை தேடித்தந்தது. இவரின் இந்த சமூக சேவைக்காக ஆசியாவின் நோபல் பரிசு என அழைக்கப்படும் 'ராமன் மகசேசே' விருது இவருக்கு வழங்கப்பட்டது.

இது ஒரு பக்கம் இருக்க, லடாக் பழங்குடி மக்களின் உரிமைக்காகவும் சோனம் வாங்சுக் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளார். லடாக்கின் பூர்வகுடி மக்களின் நில உரிமை மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாக்க இந்திய அரசியலமைப்பின் 6-வது அட்டவணையில் லடாக்கைச் சேர்க்க வேண்டும் என்பது இவரின் நீண்ட நாள் கோரிக்கையாகும். அதே போல லடாக்குக்கு முழு மாநில அந்தஸ்து வேண்டும் என்றும் இவர் போராட்டங்களை நடத்தியுள்ளார்.

இவரின் இந்த போராட்டங்கள் காரணமாக 2025 அக்டோபரில் லடாக்கில் அமைதியின்மையைத் தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டு 170 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சூழலில் தற்போது நீட் எதிர்ப்பு போராட்டம் மற்றும் லடாக் பிரச்சினைகளை முன்வைத்து டெல்லியில் உண்ணாவிரத போராட்டம் நடத்திய சூழலில் அவரின் உடல் நிலை மோசமடைந்ததால் காவல்துறையினரால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Who is Sonam Wangchuk, this modern scientist?
மாணவர்கள் போராட்டத்தில் பெல்லட் குண்டுகள்.. படுகாயமடைந்த மாணவர்கள்.. காவல்துறையின் கொடூர தாக்குதல்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com