மாணவர்கள் போராட்டத்தில் பெல்லட் குண்டுகள்.. படுகாயமடைந்த மாணவர்கள்.. காவல்துறையின் கொடூர தாக்குதல்!
இந்தியாவில் மருத்துவப் படிப்பில் சேர நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்வில் பெரிய அளவில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நீட் வினாத்தாள் கசிவு, மறு தேர்வு என இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், லட்சக்கணக்கான மாணவர்கள் எழுதும் தேர்வில் நடைபெற்ற இந்த முறைகேடுகள் மாணவச் சமுதாயத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜூன் 6 ஆம்தேதி டெல்லி ஜந்தர்மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக நாடு முழுவதும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இதன் தொடர்ச்சியாக ஜூன் இறுதியில், டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் இதற்காக போராட்டம் நடத்தப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி டெல்லி ஜந்தர்மந்தரில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை கடந்த ஜூன் 28ஆம் தேதி தொடங்கினார். அவர் உடல்நிலை மோசமடைந்த நிலையில், அவரை காவல்துறையினர் வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர். நீதிமன்ற உத்தரவின்பேரில் பின்னர் அவர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில் கடந்த 20ஆம் தேதி, நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் செல்ல முயற்சி செய்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் மற்றும் மாணவர்கள் மீது டெல்லி போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் தடியடி நடத்தி விரட்டி அடித்தனர். மேலும் அவர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி கடுமையாகத் தாக்கினர்.
இந்த காட்சிகள் செய்திகளில் வெளியாகி இந்தியாவையே உலுக்கியுள்ளது. அதன் தொடர்ச்சியாக போராட்டம் நடக்கும் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் ஏராளமான இளைஞர்கள் குவிந்துள்ளனர். இந்த போராட்டத்தில் பெல்லட் குண்டுகள் என அழைக்கப்படும் கடுமையான காயங்களை ஏற்படுத்தும் சிறிய ஈய குண்டுகளை பயன்படுத்தி காவல்துறையினர் மாணவர்களை தாக்கியதாக புகார் எழுந்தது.
ஆனால், பெல்லட் குண்டுகளை பயன்படுத்தவில்லை என்று காவல்துறையினர் மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், பெல்லட் குண்டுகளால் தாக்கப்பட்டு மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாணவர்கள் போராட்டத்தில் காவல்துறையினர் பெல்லட் குண்டுகளை பயன்படுத்தியுள்ளது உறுதியாகியுள்ளது. இதன் தொடர்ச்சியாக மாணவர்கள் மீது இத்தகைய மோசமான தாக்குதலை நடத்திய டெல்லி காவல்துறைக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

