தெலுங்கு தேசம் MLA - தெலங்கானா CM.. யார் இந்த ரேவந்த் ரெட்டி?

தெலங்கானா முதல்வராக இன்று பதவியேற்றுள்ளார் காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி. அவர் யார், அரசியலில் அவர் கடந்து வந்த பாதை என்ன, தேர்தலில் அவர் வென்றது எப்படி என்பதை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.
ரேவந்த் ரெட்டி
ரேவந்த் ரெட்டிபுதிய தலைமுறை

தெலங்கானா மாநிலம் உருவானது முதல் தொடர்ந்து 2 முறை ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருந்த பிஆர் எஸ் கட்சியை வீழ்த்தி அம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை ஆட்சிக்கட்டிலில் அமர்த்தி, தானும் முதல்வராக அமர்ந்துள்ளார் மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி.

ரேவந்த் ரெட்டி
ரேவந்த் ரெட்டி

கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றியை உறுதி செய்ய டி.கே சிவக்குமார் எப்படி செயல்பட்டாரோ அதேபோல், தெலங்கானாவில் வெற்றிக்கனியை பறிக்க வியூகம் அமைத்து விளையாடியவர்தான் ரேவந்த் ரெட்டி. காங்கிரஸின் இந்த வெற்றிப் பாதைக்கு ரேவந்த் ரெட்டியின் வியூகங்கள்தான் காரணம். திண்ணைப் பிரச்சாரம் தெருமுனைப் பிரச்சாரம் தொடங்கி மாபெரும் கூட்டம் முறை அனைத்து வகைகளும் காங்கிரசை மக்களிடம் கொண்டு சேர்த்தார் ரேவந்த் ரெட்டி.

காங்கிரஸை ஆட்சியில் அமரவைத்தரேவந்த் ரெட்டியின் அரசியல் பயணம் தொடங்கியது என்னவோ RSS-ன் மாணவர் அணியாக ABVB-ல் இருந்துதான். மாணவராக இருந்தபோது இந்த அணியில் உறுப்பினராக இருந்தபோதிலும், பாஜகவுக்காக எந்த நடவடிக்கையிலும் ஈடுபட்டதில்லை. தொடர்ந்து, 2004ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தவர், ஒருங்கிணைந்த ஆந்திர மாநில சட்டசபைத் தேர்தலில் 2009ம் ஆண்டு போட்டியிட்டு வெற்றிபெற்றார். அதனைத் தொடர்ந்து, 2014லும் வெற்றிபெற்ற அவர், 2017ம் ஆண்டு காங்கிரஸில் குதித்தார். தன்னை ஒரு களப்போராளியாக தலைமைக்கு நெருக்கமாக காட்டிக்கொண்டவர், 2021ம் ஆண்டு மாநில காங்கிரஸ் கட்சித்தலைவராகவும் உயர்த்திக்கொண்டார்.

காங்கிரஸில் சேர்ந்தபோது, பிரிக்கப்பட்ட தெலங்கானாவில் முதல்முறையாக கோடங்கல் தொகுதியில் போட்டியிட்டவர், பிஆர்எஸ் கட்சியியால் தோற்கடிக்கப்பட்டார். இவரை வீழ்த்தவே, வண்டிகளில் ஆட்களை அழைத்துவந்து ஓட்டு பிஆர் எஸ் கட்சியினர் ஓட்டுபோட வைத்த சம்பவமும் நடந்தது. சட்டமன்ற தேர்தலில் தோற்றாலும், 2019ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் 38 சதவீத வாக்குகளை பெற்று வென்று எம்.பியானார்.

என்னதான் எம்பியாக இருந்தாலும், அவரை தோற்கடித்த பிஆர் எஸ் கட்சியை, அந்த கட்சியின் தலைமையை வீழ்த்த வேண்டும் என்று கோடங்கல் மட்டுமல்லாமல் கம்மாரெட்டி தொகுதியிலும் தலைமையால் போட்டியிட்டார் ரேவந்த். சந்திரசேகரராவ் போட்டியிட்ட அதே தொகுதியில் போட்டியிட்டவர் அந்த தொகுதியில் தோற்றபோதும், கோடங்கல் தொகுதியில் வென்றார்.

காங்கிரஸில் சேர்ந்த 4 வருடங்களில் கட்சியின் மாநில தலைவர் பதவியை கைப்பற்றிய அவர், தலைவராக பொறுப்பேற்ற அடுத்த மூன்று வருடங்களில் கட்சியை ஆட்சியில் அமர வைத்துள்ளார். கட்சியின் மூத்த தலைவர்கள் முன்னிலையில் இன்று முதல்வராக பொறுப்பேற்ற நிலையில், வாக்குறுதிகளை நிறைவற்ற வாழ்த்துக்கள் என்று ராகுல் காந்திக்கு உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சர்வாதிகாரத்தனமான தலைவர், தனக்கு உகந்தவர்களை மட்டுமே உயர் பதவிகளில் அமர வைப்பது போன்ற விமர்சனங்கள் இவர் மீது வைக்கப்பட்டாலும், அத்தனையும் தாண்டி ஆட்சியில் அமர்ந்துள்ள இவரது செயல்பாடுகளை பொறுத்திருந்துதான் பார்க்க முடியும்.

எழுத்து: யுவபுருஷ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com