பஞ்சாப் | முன்னாள் துணை முதல்வரைச் சுட முயன்ற நபர் காலிஸ்தான் ஆதரவாளரா?.. யார் இந்த நரேன் சிங் சௌரா?
சீக்கிய மதத்தை அவமதித்தது தொடர்பான வழக்கில், பஞ்சாப்பின் முன்னாள் துணை முதல்வரும், சிரோமணி அகாலி தள் கட்சியின் முன்னாள் தலைவருமான சுக்பீர் சிங் பாதலுக்கு, அம்மதத்தின் உயர் அதிகார அமைப்பான அகால் தக்த் விசாரணை நடத்தி, தண்டனை வழங்கியது. அதன்படி, அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலில் சேவகராக காலணிகளையும், பாத்திரங்களையும் சுக்பீா் சிங் தூய்மைப்படுத்த வேண்டும் என்று தண்டனை விதிக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட அவர், பொற்கோயிலுக்குச் சென்று சேவைப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். காலில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதால், சக்கர நாற்காலியில் அமர்ந்து அந்தச் சேவையில் ஈடுபட்டிருந்தார்.
இந்த நிலையில், இன்று காலை 9 மணியளவில் சுக்பீர் சிங் பாதல் சேவைப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. துப்பாக்கியை எடுத்து சுக்பீர் சிங்கை நோக்கி அந்த நபர் குறிவைத்ததைக் கண்டதும் அவரது ஆதரவாளர்கள் ஓடி துப்பாக்கியை பறிக்க முயற்சித்தனர். ஆனால் அதற்குள்ளே தோட்டாக்கள் வெளியேறிவிட்டன.
இந்த சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சிக்குள்ளாகி அலற ஆரம்பித்தனர். நல்வாய்ப்பாக சுக்பீர் சிங்கிற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே சுக்பீர் சிங்கை சுட முயன்ற அந்த நபர் கைது செய்யப்பட்டார். அவர், காலிஸ்தானி பயங்கரவாதக் குழுவான பாபர் கல்சாவுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் நரேன் சிங் சௌரா என விசாரணையில் தெரிய வந்துள்ளது.
யார் இந்த நரேன் சிங் சௌரா?
கைது செய்யப்பட்டிருக்கும் நரேன் சிங் சௌரா, பொற்கோயிலில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பஞ்சாபின் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள சௌரா என்ற கிராமத்தில் வசிப்பவர். அவர், 1956ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி சனம் சிங் மற்றும் குர்னம் கவுர் என்ற தம்பதியருக்குப் பிறந்தார். இவர், தடைசெய்யப்பட்ட காலிஸ்தான் சார்பு குழுவான பாபர் கல்சா அல்லது பாபர் கல்சா இன்டர்நேஷனல் உடன் தொடர்புடையவராக அறியப்படுகிறார்.
இவர், சண்டிகரில் 2004இல் நிகழ்ந்த புரைல் ஜெயில் பிரேக் வழக்கின் மூளையாகச் செயல்பட்டவராகக் கருதப்படுகிறார். இதில் நான்கு கைதிகள் 104 அடி சுரங்கம் தோண்டி சிறையில் இருந்து தப்பினர். பாபர் கல்சா தலைவர் ஜக்தார் சிங் ஹவாரா, முன்னாள் பஞ்சாப் முதல்வர் பியாந்த் சிங்கின் கொலையாளிகளான பரம்ஜித் சிங் பியோரா மற்றும் ஜக்தர் சிங் தாரா, தேவி சிங் ஆகியோரே அந்த 4 கைதிகள் ஆகும். சட்டவிரோத தடுப்புச் சட்டத்தின்கீழ் 2013ஆம் ஆண்டு சௌரா கைதுசெய்யப்பட்டார். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.