பஞ்சாப்: முன்னாள் துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதலை சுட்டுக்கொல்ல முயற்சி!
பஞ்சாப் பொற்கோயிலில் சிரோமணி அகாலிதள தலைவர் சுக்பீர் சிங் பாதலை சுட்டுக்கொலை செய்ய முயற்சி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
சீக்கிய மதத்தை அவமதித்துப் பேசிய சம்பவம் ஒன்றின் காரணமாக, சுக்பீர் சிங் பாதலுக்கு நேற்று முன்தினம் (டிச.2) ஒரு தண்டனை பிறப்பிக்கப்பட்டது.
அதன்படி, அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலில் சேவகராக காலணிகளையும், பாத்திரங்களையும் சுக்பீா் சிங் தூய்மைப்படுத்த வேண்டும் என்று தண்டனை விதிக்கப்பட்டது.
இதையடுத்து, தனது தவறுகளுக்கு வருந்துவதாக கூறி பொற்கோயிலுக்கு இன்று வந்த சுக்பீர் சிங், தண்டனையை ஏற்று சேவகராகப் பணியாற்றினார். காலில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதால், சக்கர நாற்காலியில் வந்திருந்தார்.
நேற்று அப்பணியை செய்த அவர், இன்றும் சேவகராகப் பணியில் ஈடுபட்டு வந்தபோது வழியில் வந்த வயதான முதியவர் தனது கைகளில் இருக்கும் துப்பாக்கியை எடுத்து சுக்பீர் சிங்கை நோக்கி சுட்டார். அவர் துப்பாக்கியால் குறிவைத்ததை கண்டதும் சுக்பீர் சிங்கின் ஆதரவாளர்கள் ஓடி துப்பாக்கியை பறிக்க முயற்சித்துள்ளனர். ஆனால் அதற்குள்ளே தோட்டாக்கள் வெளியேறிவிட்டன. இந்த சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சிக்குள்ளாகி அலற ஆரம்பித்தனர். நல்வாய்ப்பாக சுக்பீர் சிங்கிற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
பொற்கோயிலில் பொதுவாகவே போலீசாரை பார்க்க முடியாது. பாரம்பரிய பாதுகாவலர்கள்தான் பணியில் இருப்பர். இந்த நிலையில்தான், சுக்பீர் சிங்கை நோக்கி கொலை முயற்சி அரங்கேறியுள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்த வந்த வயதான நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
பஞ்சாபில் காலிஸ்தான் பிரிவினைவாத ஆதரவாளர்கள் இருக்கும் காரணத்தால், அவர்கள் யாராவது சுக்பீர் சிங் பாதல் மீது தாக்குதலில் ஈடுபட்டார்களா? இல்லை தனிப்பட்ட விரோதம் காரணமாக தாக்குதல் முயற்சியா? போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.