Bhushan Ramkrishna Gavai
Bhushan Ramkrishna Gavaipt web

யார் இந்த பி.ஆர்.கவாய்? ஏன் குறிவைக்கப்படுகிறார்?

பி.ஆர்.கவாய்... கடந்த இரண்டு மூன்று நாட்களாகவே இந்தியாவில் மிகவும் பேசப்படும் ஒரு பெயர். காரணம் நீதிமன்ற வளாகத்தில் வழக்கு விசாரணையின்போது அவர் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் முயற்சி.
Published on
Summary

பி.ஆர்.கவாய்... கடந்த இரண்டு மூன்று நாட்களாகவே இந்தியாவில் மிகவும் பேசப்படும் ஒரு பெயர். காரணம் நீதிமன்ற வளாகத்தில் வழக்கு விசாரணையின்போது அவர் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் முயற்சி. யார் இந்த பி.ஆர்.கவாய். அவர் மீது தாக்குதல் நடத்தக் காரணம் என்ன? விரிவாகப் பார்க்கலாம்.

பி.ஆர்.கவாய்.. 1960ம் ஆண்டு நவம்பர் மாதம் 24ம் தேதி மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள அமராவதி நகரில் பிறந்தவர். இவரது தந்தை ஆர்.எஸ்.கவாய் கேரளா மற்றும் பிகார் மாநிலங்களின் ஆளுநராக பணியாற்றவர். குடியரசுக் கட்சித் தலைவரும் கூட.

பி.ஆர் கவாய்
பி.ஆர் கவாய்எக்ஸ்

அமராவதியில் பள்ளிக் கல்வியை முடித்த பி.ஆர்.கவாய், மும்பையில் தனது சட்டப் படிப்பை முடித்தார். பின்னர் 1985 மார்ச் 16-ஆம் தேதி பார் கவுன்சிலில் உறுப்பினராக இணைந்தார். இரண்டு ஆண்டுகள் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மற்றும் முன்னாள் அட்வகேட் ஜெனரலுடன் பணியாற்றிய அவர் 1987ஆம் ஆண்டு பம்பாய் உயர் நீதிமன்றத்தில் தனியாக பயிற்சியைத் தொடங்கினார். பின்னர், 1990ம் ஆண்டு முதல் பம்பாய் உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் பிரிவில் வழக்கறிஞராக தனது பணியைத் தொடர்ந்தார். நாக்பூர் மற்றும் அமராவதி நகராட்சிகளுக்கும், அமராவதி பல்கலைக் கழகத்திற்கும் சட்ட ஆலோசகராக பணியாற்றியுள்ளார்.

Bhushan Ramkrishna Gavai
மதுவிலக்கால் பாதிக்கப்பட்டதா பிகார்? வருவாய் அல்ல பிரச்னை.. நுட்பமான காரணிகள்..

ஆகஸ்ட் 1992 முதல் ஜூலை 1993 வரை, பம்பாய் உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் பெஞ்சில், அரசு உதவி வழக்கறிஞராகவும் அரசு கூடுதல் வழக்கறிஞராகவும் பணியாற்றினார். 2000 ஜனவரி 17-ஆம் தேதி மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் பெஞ்சிற்கு அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட பி.ஆர்.கவாய் 2003 நவம்பர் 14 -ஆம் தேதி உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியானார்.

2005ஆம் ஆண்டு முதல் பம்பாய் உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக பணியாற்றினார். அந்த காலகட்டத்தில் பல முக்கிய வழக்குகளில் தீர்ப்புகளை வழங்கியுள்ளார். 14 ஆண்டுகள் உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய அவர் 2019 ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியானார். உச்ச நீதிமன்ற நீதிபதியாக, பல வரலாற்று சிறப்புமிக்க வழக்குகளில் தீர்ப்பு வழங்கியுள்ளார்.

குறிப்பாக மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை 2023 ஆம் ஆண்டில் உறுதி செய்த உச்ச நீதிமன்ற அமர்வில் பி.ஆர். கவாய் இடம் பெற்றிருந்தார். அதேபோல ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது பிரிவை மத்திய அரசு ரத்து செய்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் சட்டப் பிரிவு 370ஐ ரத்து செய்வதற்கான மத்திய அரசின் நடவடிக்கையை உறுதி செய்து தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கை விசாரித்து தீர்ப்பளித்த அரசியலமைப்பு அமர்விலும் நீதிபதி கவாய் இடம் பெற்றிருந்தார்.

Bhushan Ramkrishna Gavai
அடுத்த லெவலுக்கு செல்லும் மகாராணி, வெளியான 4வது சீசன் டீசர்! | Maharani | HumaQureshi

அதேபோல உச்ச நீதிமன்றம் தேர்தல் பத்திரத் திட்டத்தை அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று அறிவித்து அதனை ரத்து செய்தது. இந்த தீர்ப்பை வழங்கிய ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்விலும் நீதிபதி பி.ஆர். கவாய் இடம்பெற்றிருந்தார். இதுபோன்ற பல வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கிய பி.ஆர்.கவாய் மே 14 2025ம் ஆண்டு 52வது உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றார். இதனால் நீதித்துறையை வழிநடத்தும் முதல் பௌத்த மற்றும் இரண்டாவது தலித் தலைமை நீதிபதி என்ற பெருமையையும் கொண்டுள்ளார். அரசியலமைப்புச் சட்டத்தில் ஆழமான நிபுணத்துவம் கொண்டவர் என அறியப்படுகிறார். பல தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களின் வேந்தராகவும் பணியாற்றியுள்ளார். அத்தோடு அரசியலமைப்புச் சட்டம் மற்றும் சமூக நீதியில் ஆழ்ந்த அறிவு கொண்டவராகவும் அறியப்படுகிறார்.

இந்நிலையில்தான் தற்போது இந்தியாவில் சமூக வலைதளங்களில் அதிகம் குறிவைக்கப்படும் நபராகவும் இருக்கிறார். காரணம் அவர்மீது சமீபத்தில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல் முயற்சிதான். அதாவது தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கடந்த அக்டோபர் 6ம் தேதி வழக்கம் போல முதல் அமர்வில் விசாரணைக்கு வந்த வழக்கை விசாரித்துக்கொண்டிருந்தபோது, நீதிமன்ற வளாகம் என்றுகூட பாராமல் வழக்கறிஞர் ஒருவர் அவர்மீது தனது காலணியைத் தூக்கி வீசி தாக்குதலில் ஈடுபட முயன்றுள்ளார். ஆனால் நல்வாய்ப்பாக காலணி நீதிபதி மீது விழாது முன்னிருந்த மேசைக்கு முன்பாக விழுந்துள்ளது. "சனாதனத்தின் மீதான அவமானத்தை இந்தியா பொறுத்துக்கொள்ளாது" எனக் கூச்சலிட்டுக்கொண்டே தாக்க முயன்ற வழக்கறிஞர் கிஷோர் ராகேஷை நீதிமன்றப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

Bhushan Ramkrishna Gavai
பாலியல் வன்கொடுமை வழக்கு: தஷ்வந்தின் தூக்கு தண்டனை ரத்து., குழந்தைகள் நல செயல்பாட்டாளர் வேதனை...

ஆனால், இதனையெல்லாம் கண்டுகொண்டிருந்த நீதிபதி எந்த பதற்றமும் சஞ்சலமும் அடையாமல் "இதுபோன்ற விஷயங்களால் பாதிக்கப்படக்கூடிய கடைசி ஆள் நானாக இருப்பேன் இது போன்ற விஷயங்கள் என்னை ஒருபோதும் பாதிக்காது.. நீங்கள் வாதத்தை தொடருங்கள்" என்று கூறி விசாரணையைத் தொடர்ந்துள்ளார்.

அவர் மீதான விமர்சனங்களுக்கும், சமூக வலைதள தாக்குதல்களுக்கும்.. ஏன், நடந்து முடிந்த சம்பவத்திற்குக் கூட காரணம் அவர் சமீபத்தில் கையாண்ட வழக்கிற்கு வழங்கிய தீர்ப்பு .

அதாவது மத்திய பிரதேசம் மாநிலம் கஜுராஹோ கோயிலில் சேதமடைந்த விஷ்ணு சிலையை புதுப்பிக்கக் கோரிய வழக்கில் “இது முற்றிலும் விளம்பர நோக்குடைய பொதுநல வழக்கு. நீங்கள் விஷ்ணுவின் தீவிர பக்தர் என சொல்கிறீர்கள். அதனால், தெய்வத்திடமே சென்று ஏதாவது செய்யும்படி கேளுங்கள்.

அது தொல்லியல்துறையின் கீழ் இருக்கும் தளம். எனவே ஏ.எஸ்.ஐ.யிடம் அனுமதி கொடுக்க வேண்டும்” என கருத்து தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.

Bhushan Ramkrishna Gavai
முடிவுக்கு வரும் இஸ்ரேல் - ஹமாஸ் போர்.. முதற்கட்ட நடவடிக்கைக்கு பிரதமர் மோடி வரவேற்பு!

இந்தக் கருத்து சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனத்தைத் தூண்டியது. பலர் தலைமை நீதிபதி விஷ்ணு பக்தர்களின் நம்பிக்கையை அவமரியாதை செய்துவிட்டதாக விமர்சித்து வந்தனர். அதேபோல அவர் சனாதனத்திற்கு எதிராக செயல்படுவதாகக் கூறி அவரை விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக வலதுசாரிகளால் மிகவும் விமர்சிக்கப்படும் நபராக மாறியிருக்கிறார். இந்து மதத்தின் மாண்பை புண்படுத்தும் வகையிலும், சனாதானத்திற்கு எதிராகவும் செயல்படுவதாகவும் இவர்மீது பல்வேறு விமர்சனங்கள் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அதேபோல தலித் தலைமை நீதிபதி என்பதாலேயே இவர் குறிவைக்கப்படுகிறார் என்றும் கருத்துகளும் உலவத் தொடங்கியுள்ளன.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிரான இந்த சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல்வேறு தலைவர்கள் மற்றும் நீதிபதிகள் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் வரும் நபம்பர் மாதத்தோடு ஓய்வு பெறவிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Bhushan Ramkrishna Gavai
சபரிமலை| தங்கத்தகடு காணாமல்போன விவகாரம்.. சட்டசபையில் 4வது நாளாக இன்றும் அமளி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com