”பசுவுக்காக ஒரு முஸ்லீமை கொல்வதை ஏற்க முடியாது” - மகாத்மா காந்தியின் வாழ்வும் உதிர்த்த சிந்தனைகளும்!

“மாமிசம் சாப்பிடும் இந்துக்களும் உள்ளனர். எனவே கொல்லாமையில் நம்பிக்கையுள்ள இந்துக்கள் மாமிசம் உண்ணும் இந்துக்களுடன் வாழும் போது, மாமிசம் உண்ணும் முஸ்லீம்களுடன் வாழ என்ன தடையிருக்க முடியும்?” மகாத்மா காந்தியடிகள்.
காந்தி
காந்திpt web

ஒரு மூக்குக் கண்ணாடி யாரை நினைவுபடுத்தும் என கேட்டால் நம் மக்கள் யோசிக்காமல் காந்தி என்பார்கள். மற்றவர்களுக்கு அது கண்ணாடி மட்டும் தான். ஆனால் நமக்கோ அது ஒரு வாழ்முறை, ஒரு வாழ்க்கை, ஒரு சித்தாந்தம், ஒரு கோட்பாடு, ஒரு சகாப்தம். இத்தனை விசயங்களையும் அந்த எளிய பொருளின் மேல் நாம் ஏற்றி வைத்துள்ளோம். அந்த குறிப்பிட்ட கோட்பாட்டின் சித்தாந்தமாக அவை மாறிவிடுகின்றன. ஆனால், அவர் தன் காலம் தொட்டு இன்று வரை ஒருசேர கொண்டாடப்படுபவராகவும் விமர்சிக்கப்படுபவராகவும் உள்ளார்.

சுதந்திரம் அடைவதற்கு முன்னும் பின்னும் நம் நாட்டில் பல்வேறு தலைவர்கள் நடைபயணங்களை மேற்கொண்டுள்ளனர். பொருளாதாரத்தில் உயர்ந்த இடங்களில் இருந்தவர்களே பெரும்பான்மையாக சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த சூழலில் நாடு முழுவதும் காந்தி மேற்கொண்ட நடைபயணங்கள் எளிய மக்களையும் சுதந்திரப் போராட்ட களத்திற்கு இழுத்து வந்தது. நாடு முழுவதும் அவர் மேற்கொண்ட நடைபயணங்களால், அவரால் ஈர்க்கப்பட்டு சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்ட பாமர மக்களின் எண்ணிக்கை அதிகம்.

1869 ஆம் ஆண்டு பிறந்த காந்தி 1888 ஆம் ஆண்டு பாரிஸ்டர் படிப்பிற்காக லண்டன் சென்றார். அடுத்தது உத்தியோகத்திற்காக தென்னாப்பிரிக்கா. தென்னாப்பிரிக்காவில் இருந்து சில மாதங்களில் இந்தியா திரும்பி விடுவார் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் 20 ஆண்டுகாலம் தென்னாப்பிரிக்காவில் இருப்பார் என்றும் அங்கு வாழும் இந்திய மக்களுக்காக தொடர்ந்து போராடுவார் என்பதையும் அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார்.

தன் வாழ்வின் பெரும்பான்மையான நாட்களை இருபெரும் நாடுகளில் கழித்த காந்தி இந்தியா வருவதற்கு முன்பே அவர் பற்றிய செய்திகளும், செயல்பாடுகளும் இந்தியா வந்து சேர்ந்து பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆங்கிலேய பாதிரியார் ஆண்ட்ரூஸ் என்பவர், தென்னாப்பிரிக்காவில் இருந்து காந்தியைப் பற்று கோகலேவிற்கு எழுதிய கடிதத்தில், “காந்தியின் வேலை முடிந்துவிட்டது. மிக மேன்மையாக முடிக்கப்பட்டிருக்கிறது. அவர் இங்கிருந்து உடனடியாக புறப்பட்டாக வேண்டும், அவருடைய நலனுக்காவும், அவருடைய சமூகத்தின் நலனுக்காகவும். ஆமாம், சமூகத்தின் நலனுக்காக: ஏனென்றால் அவர் இன்னும் இங்கே தங்கி இருந்தால் தனது ஆளுமையால் மற்ற எல்லோரையும் சிறியவர்களாக்கிவிடுவார். அதன் பிறகு இங்கே குறைந்த பட்சம் ஒரு தலைமுறைக்காவது தலைவர்களே தோன்ற மாட்டார்கள். இந்த உலகிலேயே மிகச்சிறந்த மனிதர்களில் ஒருவர் அவர். பல தசாப்தங்களாக யாரும் பார்த்திராத ஒரு மேன்மையான போராட்டத்தை மேற்கொண்டவர் அவர்..” என எழுதி இருந்தார். இந்தியா திரும்பியிராத காந்தியைப் பற்றி ஆங்கிலேயர் ஒருவர் எழுதிய சொற்கள்.

தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்திய மக்களுக்காக மகாத்மா காந்தி நடத்திய தென்னாப்பிரிக்க சத்தியாகிரக போராட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து 1915 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் நாள் இந்தியா வந்தடைந்தார். இந்தியா வந்ததும் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டார்.

படிப்பதற்காக இங்கிலாந்து செல்லும் முன்பும், தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா வந்த பின்பும் சாதிய சிக்கலில் காந்தியும் பாதிக்கப்பட்டார் என்பதே உண்மை. லண்டனுக்கு சென்று பாரிஸ்டர் பட்டம் பெற விரும்பிய காந்திக்கு முதல் எதிர்ப்பு தனது தாயிடம் இருந்து வந்தது. லண்டன் சென்றால் இறைச்சி மது போன்றவற்றின் சகவாசம் ஏற்படும் என அவரது தாய் புத்லிபாய் அஞ்சினார். தாயை சமாதனப்படுத்தி சம்மதிக்க வைத்த காந்திக்கு அடுத்த எதிர்ப்பு தனது உறவினர்கள் மத்தியில் இருந்து வந்தது. “பனியா சமூகத்தில் இருந்து ஒருவர் பிரிட்டன் செல்வது புகழ் அல்ல பாவம்” என்றனர் உறவினர்கள். தனது முடிவில் உறுதியுடன் இருந்த காந்தி, “இந்த விசயத்தில் சாதி தலையிடக்கூடாது என நினைக்கிறேன்” என்றார். இதனைத் தொடர்ந்து அவர் சாதி விலக்கம் செய்யப்பட்டார்.

தென்னாப்பிரிக்காவில் இருந்து காந்தி இந்தியா திரும்பிய பின் மீண்டும் ஒரு சிக்கல் வந்தது. இம்முறை காந்திக்கு அல்ல. அவரது கொள்கைக்கு. தென்னாப்பிரிக்காவில் அமைத்த ஆசிரமத்தைப் போலவே காந்தி இந்தியாவிலும் அமைத்திருந்தார். அப்போது பட்டியலின குடும்பத்தினர் அந்த ஆசிரமத்தில் சேர விருப்பம் கொண்டிருப்பதாக தகவல் வந்தது. ஆனால் அவர்களை ஆசிரமத்தில் சேர்த்துக் கொள்வதற்கு ஆசிரமத்தில் இருந்தவர்களிடமிருந்தும் கஸ்தூரிபாயிடமிருந்துமே எதிர்ப்புகள் வந்தன. எதிர்ப்புகளையும் மீறி அவர்களை சேர்த்துக்கொண்ட நிலையில், அவர்கள் பொதுக்கிணற்றில் தண்ணீர் எடுக்கக்கூடாது என கூறி காந்தியின் குடும்பத்தினரே உண்ணாவிரதம் இருக்கின்றனர். பதிலுக்கு காந்தியும் உண்ணாவிரதம் இருக்கிறார். தொடர் பேச்சுவார்த்தையின் மூலம் அந்த பிரச்சனை முடிந்தது.

மகாத்மா காந்திக்கு எப்போதும் எதிர்த் தரப்பினர் என்ற ஒரு தரப்பினர் இருந்ததே இல்லை. அவரைப் பொறுத்தவரை அவரது கருத்துக்கு மாற்றுத் தரப்பினர் மட்டுமே உள்ளனர். தென்னாப்பிரிக்கா போராட்டங்களிலும், இந்தியா வந்த பின் அவர் மேற்கொண்ட போராட்ட அவருக்கு ஆதரவாக பல ஆங்கிலேயர்கள் இருந்துள்ளனர். அதில் ஒரு வெளிப்பாடு தான், ஆங்கிலேயரை எதிரிகளாக அல்ல., நண்பர்களாக வழியனுப்பிவைப்போம் என்றார்.

காந்தியின் தென்னாப்பிரிக்க சத்தியாகிரகம் போராட்டங்களிலும், இந்திய சுதந்திரப் போராட்டக் காலங்களிலும் காந்தியை எதிரியாக பாமர மக்கள் சிலர் கருதி இருந்தனர். இது குறித்து ஹென்றி போலக்கின் மனைவி மிலி போலக் எழுதிய காந்தி எனும் மனிதர் புத்தகத்தில், தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க்கில் காந்தியைக் கொல்வதற்கு கத்தியுடன் வந்த ஒரு நபருடன் காந்தி பேசுவதும் பின் அந்த கத்தியை அந்த நபர் காந்தியிடமே கொடுத்துவிட்டு சென்ற சம்பவத்தை அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து காந்தியோ, “என்னை கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் தனக்கு இருப்பதாக அவர் நினைத்தார். உண்மையில் அவருக்கு அந்த துணிச்சல் கிடையாது. நான் அவர் நினைத்த அளவிற்கு உண்மையில் மோசமானவனாக இருந்தால் அப்போது நான் சாக வேண்டியவன் தானே. இனி நான் இதை நினைத்து கவலைப்பட வேண்டியதில்லை. இது முடிந்துவிட்டது. அவர் இனிமேல் என்னை கொலை செய்ய முயற்சிப்பார் என நான் நினைக்கவில்லை. நான் அவரை கைது செய்ய வைத்திருந்தால் அவர் எனக்கு ஒரு எதிரியாக மாறியிருப்பார். இனி அவர் ஒரு நண்பராகவே இருப்பார்” என்றார். இது மட்டுமின்றி தன்னை தாக்கியவர்கள், கொலை செய்ய முயன்றவர் என பல சமயங்களில் அச்சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது புகார் கொடுக்காமல் கடந்து சென்றுள்ளார்.

தொடர்ச்சியான ஆயுதப் போராட்டங்களின் மூலமே இந்தியா சுதந்திரம் பெறும் என்று பலர் கூறிய சூழலில் காந்தி அதற்கு எளிமையான விளக்கம் ஒன்றைக் கொடுத்தார். இது குறித்து அவரது சுயராஜ்ஜிய புத்தகத்தில், “உங்கள் ஆளுகையை ஏற்கும் வரைத்தான் நீங்கள் எங்களை அடக்க முடியும். நாங்கள் உங்களுக்கு ஒத்துழைக்க மாட்டோம் என முடிவு செய்துவிட்டால், நீங்கள் எங்களை ஆளமுடியாது.. என்ற அன்பின் வழியிலான எச்சரிக்கையை ஆன்மபலம் எனலாம். இந்த அழிக்கப்பட முடியாத அன்பின் சக்திக்கு முன்பாக ஆயுதம் பலமிழந்து போய்விடும்” என தெரிவித்துள்ளார்.

வேறொரு பகுதியில், “ஆங்கிலேயரை துரத்திவிட்டால் மட்டுமே நீங்கள் சுயராஜ்ஜியம் அடைய முடியாது. ஆயுத பலத்தைக் கொண்டு விடுதலை பெற முடியாது. இந்தியா அதை ஏற்காது. அது இந்தியாவின் தன்மையுமல்ல.. ஆயுத பலத்தை விட ஆன்மபலத்தை நீங்கள் ஏற்க வேண்டும் என்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் தாண்டி கல்வி முறை, இயந்திரங்களின் பயன்பாடு, இந்து முஸ்லீம் ஒற்றுமை போன்ற பலவற்றில் காந்தியின் சிந்தனைகள் என்பது நம்மால் சிந்தித்துக்கூட பார்க்க முடியாது. எடுத்துக்காட்டாக இந்து முஸ்லீம் ஒற்றுமை குறித்து, “நான் பசுவுக்கு மதிப்பளிப்பது போல, சக மனிதரையும் மதிக்க வேண்டுமல்லவா? அப்படியிருக்கும் போது பசுவுக்காக ஒரு முஸ்லீமைக் கொல்வதை நான் எப்படி ஏற்க முடியும்? நான் பசுவுக்கும், முஸ்லீமிற்கும் எதிரானவனல்ல. எனவே நலனை முன்னிட்டு பசுவைப் பாதுகாக்க முஸ்லீம்களும் முன்வர வேண்டுமென வேண்டுவேன். இதற்கு அவர்கள் ஒத்துழைக்காவிட்டால், பசுவை விட்டுவிட்டு சகமனிதன் நலனே முக்கியம் என்பேன். முடியுமானால் பசுவைப் பாதுகாக்க, பசுவை நேசிக்கும் நான் என் உயிரைத் தருவதே சரியாகும். இதுவே என் தர்மம்.

என் சகோதரன் பசுவைக் கொல்ல நிற்கும் போது என்ன செய்வது? சகோதரனைக் கொன்று பசுவைப் பாதுகாப்பதா? அவன் காலில் விழுந்து மன்றாடுவதா? நான் என் சகோதரனின் காலில் விழுவதே சரி என்று கருதினால், அதையே முஸ்லீம் சகோதரனிடமும் செய்வேன்.

இந்துக்கள் முழுமையாக கொல்லாமையை ஏற்கவில்லை. உயிரினங்களை அழித்தே வருகிறோம். மாமிசம் சாப்பிடும் இந்துக்களும் உள்ளனர். எனவே கொல்லாமையில் நம்பிக்கையுள்ள இந்துக்கள் மாமிசம் உண்ணும் இந்துக்களுடன் வாழும் போது, மாமிசம் உண்ணும் முஸ்லீம்களுடன் வாழ என்ன தடையிருக்க முடியும்?” என்றார்.

தற்கால இளைஞர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் காந்தியை பற்றி எதிர்மறையான எண்ணமே உள்ளது. அவைகள் பெரும்பாலும் காந்தியைப் பற்றி செவி வழி கேட்ட செய்திகள் மட்டுமே. அப்படி கேட்ட விமர்சனங்கள் கூட அவரைப் பற்றி அவர் எழுதியவற்றில் இருந்து மட்டுமே எடுக்கப்பட்டிருக்கும். ஆனால் காந்தி என்ற ஆளுமையை பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமெனில் காந்தி மேற்கொண்ட போராட்டங்கள், இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காக அவர் மேற்கொண்ட யாத்திரைகள், அக்காலத்திய இந்திய சூழல் போன்றவற்றின் மூலமே காந்தியின் தாக்கம் எத்தகையது என்பதை உணரமுடியும். காந்தி எழுதியவற்றில் சில பக்கங்களைப் படித்தாலும் அவர் மேல் நாம் கொண்ட எண்ணம் மாறும் என்பதில் ஐயமில்லை.

உதவிய நூல்கள்: “என்றும் காந்தி” ஆசை இந்து தமிழ் திசை வெளியிடு

“இந்திய சுயராஜ்ஜியம்” மகாத்மா காந்தி தமிழில் வெ. ஜீவானந்தம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com