உறவில் விரிசல் | அமெரிக்க பயணத்தைத் தவிர்த்த மோடி.. 3 நாடுகள் நெருக்கத்திற்குக் காரணமான ட்ரம்ப்!
அமெரிக்கப் பயணத்தைப் பிரதமர் மோடி தவிர்த்துள்ளார். அவருக்குப் பதிலாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரிவிதிப்பு தொடர்பாக இருநாட்டு உறவில் விரிசல்
அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் மீண்டும் பொறுப்பேற்ற பிறகு, பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு அதிரடி காட்டி வருகிறார். அந்த வகையில், அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ளாத நாடுகளுக்குப் புதிய வரிவிதிப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிற்கும் 50% வரி விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 25% வரியுடன், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைக் காரணம் காட்டி கூடுதலாக 25% வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இருநாட்டு உறவுகளிடையே விரிசல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை இந்திய நிறுவனங்கள் நிறுத்தவில்லை. ”நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் தொடர்ந்து வாங்கப்படும்” என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் என தெரிவித்துள்ளார். மேலும், ’’மக்களுக்குத் தேவையான எரிபொருள் மலிவான விலையில் கிடைக்கும்போது, அதை ஏன் வாங்கக் கூடாது’’ என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய - சீன - ரஷ்ய உறவுகள்.. ட்ரம்ப் கருத்து
இதற்கிடையே பிரதமர் மோடி சீனா பயணம் மேற்கொண்டார். அங்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் புடின் ஆகியோரை நேரில் சந்தித்து தனித்தனியே பேச்சுவார்த்தை நடத்தினார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டிலும் (SCO) 3 பேரும் இணைந்து வந்தனர். தவிர, 3 பேரும் இணைந்து கலந்துரையாடினர். இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகின. இதன் தொடர்ச்சியாக, இந்தியாவுக்கு இன்னும் சலுகை காட்ட ரஷ்யா முன்வந்தது. இந்தியா விரைவில் ரஷ்யாவிலிருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யக்கூடும் எனவும், மேலும் S-400 தரையிலிருந்து வான் ஏவுகணை அமைப்புகளையும் பெறக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரத்தில், இந்தச் சந்திப்பு அமெரிக்காவுக்கு அச்சத்தை உண்டாக்கியது. இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப், “இந்தியாவையும், ரஷ்யாவையும் மோசமான, இருண்ட சீனாவிடம் இழந்துவிட்டோம்போல் இருக்கிறது. அவர்கள் நீண்ட மற்றும் வளமான எதிர்காலத்தைக் கொண்டிருக்கட்டும்” எனப் பதிவிட்டிருந்தார்.
பின்னர் இந்தப் பதிவுக்குப் பிறகு ஒருநாள் கழித்து கருத்து தெரிவித்த ட்ரம்ப், “நான் எப்போதும் (நரேந்திர) மோடியுடன் நண்பராக இருப்பேன். அவர், ஒரு சிறந்த பிரதமர். ஆனால், இந்தக் குறிப்பிட்ட தருணத்தில் அவர் செய்வது எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஒரு சிறப்பு உறவு உள்ளது. கவலைப்பட ஒன்றுமில்லை” எனப் புகழ்ந்துள்ளார்.
அமெரிக்க பயணத்தைத் தவிர்த்த மோடி
இந்த நிலையில், அமெரிக்கப் பயணத்தைப் பிரதமர் மோடி தவிர்த்துள்ளார். ஐ.நா. பொதுச் சபையின் 80வது உயர்மட்ட பொதுக் கூட்டம் செப்டம்பர் 23 முதல் 29 வரை நடைபெற உள்ளது. இதில், செப்டம்பர் 27ஆம் தேதி இந்தியா சார்பில் பிரதமர் மோடி பேசவிருந்தார். இந்தச் சூழலில் ஐ.நா. பொதுச் சபையில் பிரதமர் மோடி பங்கேற்கவில்லை எனத் தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து அவருடைய அமெரிக்கப் பயணம் ரத்தாகியுள்ளது. அதேநேரத்தில், அவருக்குப் பதிலாக வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்மட்ட பொதுக் கூட்டத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் செப்டம்பர் 23ஆம் தேதி உரையாற்றவுள்ளார். இது, இரண்டாவது முறையாகப் பதவியேற்ற பிறகு, ட்ரம்ப் ஆற்றும் முதல் உரையாகும். இதில், உக்ரைன் - ரஷ்யா போர்; காஸா - இஸ்ரேல் போர் குறித்து பேசப்படும் எனத் தெரிகிறது. மேலும், இந்த உயர்மட்டப் பொதுக் கூட்டத்தில் இஸ்ரேல், பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாட்டுப் பிரதிநிதிகளும் பேசவுள்ளனர்.
பிரதமர் மோடி கடைசியாக 2021ஆம் ஆண்டு ஐ.நா. பொதுச் சபையின் 76வது அமர்வின் போது அதன் முக்கிய விவாதத்தில் பங்கேற்றார். கடந்த ஆண்டு மீண்டும் ஐ.நா. தலைமையகத்திற்குச் சென்ற பிரதமர் மோடி, எதிர்கால உச்சி மாநாட்டில் பங்கேற்றுப் பேசினார். பிரதமராக தனது 11 ஆண்டுகளில், மோடி ஐ.நா. பொதுச் சபையின் பொது விவாதத்தில் 2014, 2019, 2020 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் பேசியுள்ளார். மற்ற ஆண்டுகளில், இந்தியாவின் சார்பில் அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அல்லது எஸ்.ஜெய்சங்கர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
சீன - ரஷ்ய - இந்திய உறவுக்கு ட்ரம்பே காரணம்
மறுபுறம் ட்ரம்பின் நடவடிக்கைகள் அமெரிக்க - இந்திய உறவுகளைச் சீர்குலைத்து, சீனா மற்றும் ரஷ்யாவுடன் ஒரு பன்முக கூட்டணியை நோக்கித் தள்ளியுள்ளன. மேலும், 25 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்க - இந்திய உறவுகளை ட்ரம்ப் புதிய தாழ்வுக்குக் கொண்டு வந்துள்ளார். இதற்கிடையில், சீனா மீதான ட்ரம்பின் 145% வரிகள் 90 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டன. இது இந்தியா-ரஷ்யா-சீனா உறவுகளை தற்செயலாக நெருக்கமாக வளர்த்துள்ளது. அதன் பயனாக, ஏழு ஆண்டுகளில் மோடியின் முதல் சீனப் பயணம், ஒரு திருப்புமுனையை உண்டாக்கியுள்ளது. ” ’டிராகனும் யானையும்’ போட்டியாளர்களாக அல்ல, நண்பர்களாக இருக்க வேண்டும்” என்ற ஜின்பிங்கின் அழைப்பு, இந்த மாற்றத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
அதேபோல், ’’இந்தியா போன்ற நாடுகளுக்கு விதிமுறைகளை ஆணையிடும் சகாப்தம் முடிந்துவிட்டது” என்றும், ”அவர்கள் [அமெரிக்க நிர்வாகம்] தங்கள் கூட்டாளிகளுடன் பேசும்போது இந்த தொனியைப் பயன்படுத்த முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்" என்றும் ரஷ்ய அதிபர் புதினும் அமெரிக்காவைக் கடுமையாகச் சாடியிருந்தார். முன்னதாக, இந்தியாவின் வரி அதிகரிப்பிற்கு சீனாவும் ரஷ்யாவும் கண்டனம் தெரிவித்த நிலையில், ஆதரவளிப்பதாகத் தெரிவித்திருந்தன.
உண்மையை ஒப்புக் கொள்வாரா ட்ரம்ப்?
ட்ரம்பின் கடுமையான கொள்கைகள், தண்டனை வரிகள் மற்றும் இழிவான கருத்துகளே இந்திய - அமெரிக்க உறவில் விரிசலை ஏற்படுத்தியிருப்பதாக நிபுணர்கள் எடுத்துக்காட்டுகின்றனர். மேலும், 20 ஆண்டுகளுக்கும் மேலான அந்த உறவை அமெரிக்கா இழந்ததோடு, அதை ரஷ்யாவிற்கும் சீனாவுக்கும் ஏற்படுத்திக் கொடுத்த பங்கு ட்ரம்பையே சேரும் என அவர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும், இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்ததாகவும், இந்தியாவின் பொருளாதாரம் இறந்துவிட்டதாகக் கூறியதாகவும் ட்ரம்ப் கூறியது வெறுப்பை மேலும் தூண்டிவிட்டது.
தவிர, ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்குப் பிறகு, அமெரிக்கா அண்டை நாடான பாகிஸ்தானிடமே அதிகம் ஈடுபாடு காட்டி வருகிறது. அந்த நாட்டு ராணுவத் தளபதியுடன் அமெரிக்க அதிபர் உணவருந்தியது பேசுபொருளானது. இப்படி, இந்திய - அமெரிக்க நாட்டு இரு உறவு விரிசலுக்குக் காரணமாக ட்ரம்பே இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில்தான் அவர், இந்திய உறவு குறித்து கவலை தெரிவித்துள்ளார். உண்மையில், இந்தியாவின் உறவை ட்ரம்ப் 50% இழந்துவிட்டாலும், அதற்கு, 50% தாம்தான் காரணம் என்பதை அவர் எப்போது உணரப்போகிறாரோ?