விமானங்களுக்கு வரும் மிரட்டல்கள்.. மிரட்டலால் விமான நிறுவனங்களுக்கு ஆகும் செலவு என்ன?
இந்தியாவில் விமான பயணம் கடந்த சில வாரங்களாகவே அச்சத்துக்கு உரியதாக மாறிவருகிறது. விமானத்தில் குண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும் கடத்தப்போவதாகவும் தொடர்ச்சியாக வரும் மிரட்டல்களே இதற்கு காரணம். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 100 மிரட்டல்கள் இது போல வந்துள்ளன.
சோதனைக்கு பின் இவை புரளி என தெரியவந்தாலும் மிரட்டல்களை அவ்வளவு எளிதில் நிராகரிக்கவும் இயலாத நிலை உள்ளது. இதனால் பயணிகளும் விமான நிறுவனங்களும் கடுமையான பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். உயிர் பீதி ஒருபுறம் இருக்க, செல்ல வேண்டிய இடத்திற்கு எப்போது சென்று சேர்வோம் என்ற கவலையும் பயணிகளை ஆட்கொள்கிறது.
விமான நிறுவனங்களை பொறுத்தவரை மாற்றுப்பாதையில் பயணிப்பதற்கான செலவுகள், திட்டமிடப்படாத தரை இறக்கச் செலவுகள், எரிபொருளை வெளியேற்றுவது, பயணிகளுக்கு தங்குமிட வசதிகள் செய்து தருவது, சோதனைகள் செய்வதற்கான செலவு என ஒவ்வொரு மிரட்டலுக்கும் 4 கோடி ரூபாய் வரை செலவிட வேண்டிய நெருக்கடி உள்ளது.
பெரும்பாலான மிரட்டல்கள் சமூக தளங்களில் பதிவிடப்படுகின்றன. சில எச்சரிக்கைகள் விமான நிலைய கழிவறைகளில் எழுதப்பட்டுள்ளன. விபிஎன் தொழில்நுட்பத்தில் எக்ஸ் தளத்தில் கணக்கு தொடங்கி பெரும்பாலான மிரட்டல்கள் விடப்படுவது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சமூக தளங்கள் மூலம் விடப்படும் மிரட்டல்கள் குறித்து விவரங்களை அறிய அந்தந்த நிறுவனங்களின் உதவியை டெல்லி காவல்துறை நாடியுள்ளது. குண்டு மிரட்டல்கள் குறித்து விசாரணை செய்வதற்கென்றே தனிப்படையை டெல்லி காவல்துறை அமைத்துள்ளது. விமானங்களுக்கு மிரட்டல் விடுப்பவர்களுக்கு கடுமையான தண்டனை அளிப்பது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார். விமான நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு அதிகாரிகள் பேசியுள்ளனர்.