பாஜகவுக்கும் RSSக்கும் இடையிலான சமகால உறவு எப்படியிருக்கிறது? பிரதமர் பேச்சின் பின்னிருப்பது என்ன?
இதுவரை இல்லாத அளவுக்கு 103 நிமிடங்களுக்கு, நீண்ட சுதந்திர தின உரையை நிகழ்த்திய பிரதமர் மோடியின் பேச்சில் ஆர்எஸ்எஸ் இயக்கம் முக்கியமான இடத்தை பிடித்திருந்தது. பாஜகவுக்கும் ஆர்எஸ்எஸ்ஸுக்கும் இடையிலான சமகால உறவு எப்படி இருக்கிறது என்பதை உணர்த்தும் விதமாகவும் இருந்த அந்த உரை குறித்த பெருஞ்செய்தியை பார்ப்போம்!
ஆர்எஸ்எஸ் அமைப்பு இந்த ஆண்டில் நூற்றாண்டை நெருங்கும் நிலையில், விஜயதசமிக்குப் பிறகு, அடுத்தடுத்த தலைமுறை மாற்றங்களுக்கு அந்த அமைப்பு தயாராகி வருகிறது. அரசியல் சார்ந்த அமைப்புகளில் இருப்பவர்கள் அடுத்தடுத்த தலைமுறையினருக்கு தலைமை பதவியைக் கையளிப்பதற்கு ஏற்ப மூத்தவர்கள் தயாராக வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் நினைக்கிறது. 75 வயதோடு அரசியல் தலைவர்கள் பதவி விலகி, இளையோருக்கு வழிவிட வேண்டும் என்பதை பகிரங்கமாகவே ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேசிவிட்டார்.
மோகன் பகவத், மோடி இருவருக்கும் இந்த ஆண்டுடன் 75 வயது நிறைவடைகிறது. நூற்றாண்டு கொண்டாட்டத்தின் தொடர்ச்சியாக விரைவில் ஆர்எஸ்எஸ் தலைவர் பதவியிலிருந்து மோகன் பகவத் விலகிவிடுவார் எனும் பேச்சு அந்த அமைப்புக்குள் தீவிரமாகவே பேசப்படுகிறது. ஆர்எஸ்எஸ் அமைப்போடு இந்த 75 வயது வரையறையை மோகன் பகவத் நிறுத்திக்கொள்ளவில்லை; பாஜக உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஆர்எஸ்எஸ் சார்ந்த சங்க பரிவார அமைப்புகள் அனைத்துமே இந்த வரையறையை பின்பற்ற வேண்டும் என்று எண்ணுகிறார். பாஜகவை பொறுத்த அளவில் குறைந்தபட்சம் பிரதமர் மோடி அடுத்த தலைவர் யார் என்பதை இப்போதே தேசத்துக்கு அடையாளம் காட்ட வேண்டும் என்பதே ஆர்எஸ்எஸ் அமைப்பின் எண்ணம். அதனால்தான் இம்முறை பாஜக தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவர் விஷயத்தில் மிகுந்த கவனம் காட்டுகிறது ஆர்எஸ்எஸ்.
ஆனால், மோடியும் சரி; அவரால் வளர்த்தெடுக்கப்பட்டுள்ள இன்றைய பாஜகவும் சரி; 2029 தேர்தலின் பிரதமர் முகமாகவும் மோடியே நீடிப்பார் என்பதில் தீர்மானமாக இருக்கின்றனர். மோடி – ஷாவின் நெருக்கமான ஆதரவாளராக அறியப்படும், பாஜக மூத்த தலைவர் நிஷிகாந்த் துபே இதை சமீபத்திய பேட்டியில் திட்டவட்டமாக உறுதிபடுத்தினார். பாஜக – ஆர்எஸ்எஸ் உறவில் இந்த விஷயம் பெரும் பனிப்போரை உருவாக்கியிருப்பதாக டெல்லியில் பெரும் பேச்சு நிலவிவந்தது.
இந்நிலையில்தான் சுதந்திர தின விழா உரையை ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு சேதி சொல்லும் வாய்ப்பாக மாற்றிக்கொண்டார் பிரதமர் மோடி. ஆர்எஸ்எஸ் அமைப்பை வானளாவ இந்த நிகழ்ச்சியில் புகழ்ந்தார் மோடி. ஒருநூற்றாண்டு காலமாக தேசநலனுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருப்பதாக கூறிய மோடி, “தேச நலனுக்கு இந்த நூறாண்டுகளில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் பலர் உயிர்த் தியாகம் செய்துள்ளனர்… தன்னுடைய சேவை, அர்ப்பணிப்பு, இணையற்ற ஒழுக்கம் ஆகியவற்றின் மூலம் தேசத்தைக் கட்டமைப்பதில் தனித்துவமான பங்கை தொடர்ந்து ஆற்றி வருகிறது ஆர்எஸ்எஸ்” என்ற மோடி, “ஒரு வகையில், உலகிலேயே மிகப் பெரிய தன்னார்வதொண்டு நிறுவனம் ஆர்எஸ்எஸ்தான்” எனக் குறிப்பிட்டார்.
2024 மக்களவைத் தேர்தலில் ஆர்எஸ்எஸ் – பாஜக இடையிலான பனிப்போர் அப்பட்டமாகவே வெளிப்பட்டது. பாஜக தனிப் பெரும்பான்மை பெறாமல் போக இதுவும் காரணம் என்ற பின்னணியில், சங்கத்துடன் தன்னுடைய உறவை பராமரிக்கும் பணியில் இறங்கியது பாஜக. ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி 2025, மார்ச் மாதம் பிரதமர் நரேந்திர மோடி நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்கு சென்றார். இந்திய வரலாற்றில் ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்கு இப்படி சென்ற முதல் பிரதமர் மோடிதான். தவிர, மோடியே கூட முதல் 10 ஆண்டுகளில் இப்படி சென்றதில்லை என்ற பின்னணியில் இந்தப் பயணம் மிகுந்த கவனத்தோடு பார்க்கப்பட்டது. அப்போதுதான் ஆர்எஸ்எஸ் அமைப்பை இந்திய பண்பாட்டின் ஆலமரம் என்றுபுகழ்ந்தார் மோடி!
இளம் வயதிலேயே ஆர்எஸ்எஸ் அமைப்பில் இணைந்தவரான மோடியின் உருவாக்கத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பங்கு அளப்பரியது. மோடியின் முழு அரசியல் மற்றும் சமூகப் பயணத்தையும்கூட ஆர்எஸ்எஸ் வடிவமைத்தது என்று சொல்லலாம். ஆனால், 2014இல் பிரதமரான பிறகு, மாறிவரும் கால சூழலுக்கு ஏற்ப பாஜகவை மோடி மாற்றியமைத்தார். இதுவரை ஆர்எஸ்எஸ் வரலாற்றில் இல்லாத அளவுக்கு அதற்கும், அதன் பரிவார அமைப்புகளுக்கும் அதிகாரத்தைக் குவித்து கொடுத்த மோடி, அந்த அதிகாரத்தின் மையம் தான்தான் என்பதையும் மறைமுகமாக சுட்டிக்காட்டினார்.
அமைப்பை மீறிய தனிநபர் இல்லை எனும் மரபைக் கொண்ட ஆர்எஸ்எஸ் – மோடி இடையிலான உறவின் வலிமிகுந்த பகுதியாக இதுவே மாறியது. குறிப்பாக, மோடி ஓய்வு பெறும் விஷயம் விவாதத்துக்கே எடுத்துக் கொள்ளக்கூடிய விஷயமே இல்லை எனும் நிலைப்பாட்டில் இருக்கிறது பாஜக. ஆயினும், இருதரப்புக்கும் இடையிலான சூழலை கனிவானதாக்க தொடர் முயற்சிகளை பாஜக மேற்கொண்டு வருகிறது. இத்தகுசூழலில்தான், சுதந்திர தின உரையை இதற்கான இன்னொரு வாய்ப்பாக மாற்றிக் கொண்டிருக்கிறார் மோடி. ஆர்எஸ்எஸ் இதற்கு எப்படி எதிர்வினை ஆற்றும் என்பதை அடுத்தடுத்த நாட்களில் பார்க்கலாம்!