ஷிகெல்லா என்றால் என்ன?புதிதாக 10 பேருக்குத் தொற்று உறுதி - மொத்த பாதிப்பு 226-ஆக உயர்வு
கேரளாவில் திங்கள்கிழமை மட்டும் 10 பேர் ஷிகெல்லா (Shigella) தொற்றால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் . இதன் மூலம், கேரளாவில் இந்த ஆண்டில் பதிவான மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 226-ஐ எட்டியுள்ளது.
சமீபத்தில் பதிவாகியிருக்கும் தொற்றுகள் நான்கு மாவட்டங்களில் கண்டறியப்பட்டன. கோழிக்கோட்டில் ஏழு பாதிப்புகள் பதிவாகியுள்ளது. அதேவேளையில் வயநாடு, எர்ணாகுளம் மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு பாதிப்பு பதிவாகியுள்ளது.
கேரளா மாநில சுகாதார அமைச்சரின் தகவலின்படி, கேரளாவில் ஜூன் மாதத்தில் இதுவரை 150 ஷிகெல்லா (Shigella) பாதிப்புகளும் ஆறு உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. கோழிக்கோடு, வயநாடு, திருச்சூர் மற்றும் ஆலப்புழா ஆகிய மாவட்டங்களில் நோய்த்தொற்று பரவல் (outbreak) அறிவிக்கப்பட்டுள்ளது; அதேவேளையில் மலப்புரம், திருவனந்தபுரம், கண்ணூர், கொல்லம், இடுக்கி, எர்ணாகுளம் மற்றும் பாலக்காடு ஆகிய மாவட்டங்களிலும் நோய்த்தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதனால் பல்வேறு மாவட்டங்களில் பரவும் நோய்த்தொற்றுகளை சுகாதாரத் துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது.
ஷிகெல்லா என்றால் என்ன?
ஷிகெல்லா (Shigella) என்பது மனிதர்களின் குடலைத் தாக்கும் ஒரு கடுமையான பாக்டீரியா தொற்று நோயாகும். அசுத்தமான உணவு மற்றும் குடிநீர் மூலமாக இது மிக எளிதாகப் பரவுகிறது. சரியான சுகாதாரம் மற்றும் சுத்தத்தை கடைப்பிடிப்பதன் மூலம் இந்தத் தொற்றைத் தடுக்க முடியும்.
அறிகுறிகள் - கடுமையான வயிற்றுப்போக்கு (மலத்தில் ரத்தம் அல்லது சளி காணப்படுதல்) தீவிர வயிற்று வலி மற்றும் தசைப்பிடிப்பு காய்ச்சல், வாந்தி குமட்டல் , சோர்வு
ஷிகெல்லா எவ்வாறு பரவுகிறது?
அசுத்தமான உணவு மற்றும் குடிநீரை உட்கொள்வது. சுகாதாரமற்ற பொதுக் கழிப்பறைகளைப் பயன்படுத்துவது, கைகளைச் சரியாகப் பராமரிக்காதது, பள்ளிகள் மற்றும் பகல்நேரப் பராமரிப்பு மையங்கள், நெரிசலான வசிப்பிடங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பு வைத்தல் .

