ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நகலில் உள்ளது என்ன? பிரத்யேக தகவல்..
கடும் எதிர்ப்புக்கிடையே "ஒரு நாடு, ஒரு தேர்தல்" திட்டத்துக்கான இரண்டு மசோதாக்கள் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த இரண்டு மசோதாக்களையும் நாடாளுமன்ற கூட்டுக்குழு பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றது.
இந்நிலையில், ஒரேநாடு ஒரே தேர்தல் சட்ட மசோதாவின் நகல், புதிய தலைமுறைக்கு கிடைத்துள்ளது. இந்த மசோதாவில் உள்ள அம்சங்கள் என்னவென்று பார்ப்போம்.
ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்காக அரசமைப்புச் சட்டத்தில் 129 ஆவது திருத்தம் செய்ய மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த சட்ட மசோதாவின் படி, சட்டசபைகளின் பதவிக்காலம் அடுத்த மக்களவைத் தேர்தல் வரை மட்டுமே இருக்கும்.
மேலும் அரசமைப்புச் சட்டத்தில் 82A என்ற புதிய பிரிவு உருவாக்கப்படுகிறது. மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த இந்த பிரிவு வழிகோலும்.
பிரிவு 83, பிரிவு 172 மற்றும் பிரிவு 327 ஆகியவற்றில் திருத்தங்கள் செய்யப்படும்.
நாடாளுமன்றத்தின் ஒப்புதலை மசோதாக்கள் பெற்று "ஒரே நாடு ஒரே தேர்தல்" திட்டத்தை குடியரசுத் தலைவர் அரசாணையாக வெளியிட்ட பிறகு, சட்டசபைகளின் ஆயுட்காலம் அடுத்த மக்களவைத் தேர்தல் வரை மட்டுமே இருக்கும் என்று தெரியவந்துள்ளது.