
மகாராஷ்டிராவில் யார் ஆட்சியைமப்பது என்ற குழப்பம் நீடித்து வரும் நிலையில் ஆளுநர் பகத்சிங் கோஷ்ரியாவை முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் சந்தித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் 14-வது சட்டப்பேரவைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகி இரண்டு வாரங்களை கடந்துவிட்டன. 13-வது சட்டப்பேரவையின் ஆட்சிக் காலமும் வரும் 9-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. ஆனால் அந்த மாநிலத்தை ஆளப்போவது யார்? என்பது இதுவரை கேள்விக்குறியாகவே உள்ளது.
288 தொகுதிகளை கொண்டுள்ள மகாராஷ்டிரா தேர்தலில் ஆட்சி அமைப்பதற்கு பெரும்பான்மையாக 145 இடங்கள் தேவை. ஆனால், பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சி 54 தொகுதிகளிலும், காங்கிரஸ் 44 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன.
பாஜக-சிவசேனா கூட்டணி பெரும்பான்மைக்கும் அதிகமாக 161 இடங்களில் வெற்றி பெற்றுள்ள போதிலும், அந்த கூட்டணியால் ஆட்சி அமைக்க முடியவில்லை. காரணம், ஆட்சியில் மட்டுமல்லாது, முதலமைச்சர் பதவியிலும் சமபங்கு அதிகாரம் வழங்க வேண்டும் என சிவசேனா கட்சி பிடிவாதம் காட்டி வருகிறது.
இதனிடையே தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே திடீரென சந்தித்து பேசினார். இதன்பின்னர் பேசிய சரத்பவார், “பெரும்பான்மை பெற்றுள்ளதால் பாஜகவும், சிவசேனாவும்தான் அரசை அமைக்க வேண்டும் என நானும் அத்வாலேவும் கலந்துரையாடினோம். இதில் இருவரும் உடன்பட்டோம்” எனக் கூறினார்.இதனைத் தொடர்ந்து சரத் பவாரை சந்திக்க சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் சென்றுள்ளார். இதுஒருபுறம் இருக்க ஆளுநர் பகத்சிங் கோஷ்ரியாவை முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் சந்தித்துள்ளார்.