‘நீ சிங்கம்னா நான் புஷ்பா..’ என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்டை எதிர்க்கும் மேற்குவங்க TMC வேட்பாளர்!
மேற்கு வங்கத்தில், நாளை இரண்டாம்கட்ட தேர்தலுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளருக்கும் தேர்தல் ஆணையம் இறக்கியிருக்கும் என்கவுன்டர் ஸ்பெஷஸிட்டுக்கும் இடையே கடுமையான நீயா நானா போட்டி ஏற்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இத்துடன் ஐந்து மாநில தேர்தல் முடிவுக்கு வருகிறது. இதைத் தொடர்ந்து, மே 4ஆம் தேதி அனைத்து மாநிலங்களுக்கன வாக்கு எண்ணிக்கைக்கு களம் தயாராகி வருகிறது. இந்த நிலையில், மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே ஆட்சியைக் கைப்பற்றுவதில் மோதல் நடைபெற்று வருகிறது. அதேநேரத்தில், அதற்கு முன்பு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளருக்கும் தேர்தல் ஆணையம் இறக்கியிருக்கும் என்கவுன்டர் ஸ்பெஷஸிட்டுக்கும் இடையே கடுமையான நீயா நானா போட்டி ஏற்பட்டுள்ளது. திரிணாமுல் காங்கிரஸின் கோட்டையான, பதற்றம் நிறைந்த தெற்கு 24 பர்கானாஸ் தொகுதியில் ‘உத்தரப் பிரதேசத்தின் சிங்கம்' என்று அழைக்கப்படும் ஐபிஎஸ் அதிகாரியும், என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்டுமான அஜய் பால் ஷர்மாவை, தேர்தல் ஆணையம் பார்வையாளராக நியமித்துள்ளது. இது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நியமனத்திற்கு திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், தெற்கு 24 பர்கானாஸ் தொகுதியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஜஹாங்கீருக்கும் உ.பியின் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்டுமான அஜய் பால் ஷர்மாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நிகழ்ந்து வருகிறது.
“இது மேற்கு வங்காளம்; அவர் 'சிங்கம்' என்றால், நான் 'புஷ்பா' - திரிணாமுல் காங். வேட்பாளர்
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யும் மம்தாவின் மருமகனுமான அபிஷேக் பானர்ஜியின் நெருங்கிய உதவியாளர்தான் இந்த ஜஹாங்கீர். இவருடைய ஆதரவாளர்கள், வாக்காளர்களை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, புகாரின் பேரில் அஜய் பால் ஷர்மா அவ்விடத்திற்குச் சென்றுள்ளார். அவர் அங்குச் சென்றபோது ஜஹாங்கீர் அவரது குடும்பத்தினரையும் ஆதரவாளர்களையும் மிரட்டிவிட்டுச் சென்றார். இதுதொடர்பான காணொளி இணையத்தில் வைரலானது. இதற்கு திரிணாமுல் காங்கிரஸும் பதிலடி கொடுத்தது. இந்த நிலையில் ஜஹாங்கீர், அஜய் பால் ஷர்மாவுக்குச் சரியான பதிலடி கொடுத்து தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து உள்ளார்.
“இது மேற்கு வங்காளம்; அவர் 'சிங்கம்' என்றால், நான் 'புஷ்பா'. ஃபால்டாவில் பாஜகவால் பணியில் அமர்த்தப்பட்ட உத்தரப் பிரதேச காவல்துறை அதிகாரிகளிடமிருந்து வரும் எந்த விதமான மிரட்டலோ அல்லது அழுத்தமோ பொறுத்துக்கொள்ளப்படாது. அவர்கள் காவல்துறைப் படையுடன் வந்து, எனக்கும் என் மக்களுக்கும் அழுத்தம் கொடுக்க முயன்றனர். ஒரு ஜனநாயக அமைப்பில் இதுபோன்ற நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. ஒரு காவல் கண்காணிப்பாளர் மக்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களை அச்சுறுத்தலாம் என்று இந்தியத் தேர்தல் ஆணையத்தின் எந்த விதியும் இல்லை. தங்களுக்கு வெற்றி கிடைக்காது என்பது தெரிந்ததால், அவர்கள் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களை மிரட்ட முயற்சிக்கிறார்கள். ஆனால் நாங்கள் பயப்படவில்லை” எனப் பதிலடி கொடுத்துள்ளார். மேற்கு வங்கத்தில், பாஜக - மம்தா இடையே நடைபெறும் நேரடி மோதலைவிட, மேற்கு வங்கத்தில் இவர்கள் இருவரிடையே நடைபெறும் வார்த்தை மோதல்தான் தற்போது இணையத்தையே அதிரவைத்து வருகிறது.

